அத்திமுகம், ஐராவதேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி பாகலூரை நோக்கி 15 கி.மீ தொலைவிலும், ஒசூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது.
இறைவன் : ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர்
இறைவி : காமாட்சி, அகிலாண்டேஸ்வரி
தல சிறப்புகள் : ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரட்டை சந்நிதிகளுடன் இரட்டைக் கருவறையாக முதன்மைக் கோயிலில் ஒரு கருவறை மற்றும் பின்பக்கமாக தனியாக இன்னொரு கருவறை என இரண்டு கருவறகள் அமைந்திருக்கின்றன. பின்பக்க கருவறையில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் என்று கூறப்படுகிறது. இந்த லிங்கேசர் முகம் யானை முகம்போல் விளங்குகிறது. இதனால் இவ்விறைவன் ஐராவதீசுவரர் என அழைக்கப்படுகிறார். அத்தி முகத்தை உடைய லிங்கம் விளங்கும் ஊராதலால் இவ்வூருக்கு அத்திமுகம் என்ற பெயர்.
தல வரலாறு : திரேதயுகத்தில் இந்திரனுக்கும் விருத்திரசுரனுடனான போரில் இந்திரனால் விருத்திராசுரன் கொல்லப்படுகின்றான். இதனால் இந்திரனையும் அவனது வாகனமான ஐராவதத்தையும் பிரம்மஹத்தி தோசம் சூழ்கிறது. இதனால் தன் ஆற்றலையும் பொலிவையும் இந்திரனும், ஐராவதமும் இழந்து இந்திர லோகம் செல்ல இயலாமல் தவிக்கின்றனர். இதனால் பல தலங்களுக்கு சென்று இந்த தோசம் நீங்க பூசிக்கின்றனர். அதன் பலனாக இவர்களுக்கு ஒரு அசரீரி கேட்கிறது, அகத்திய நதிக்கரை ஓரமாக இருக்கும் சுயம்பு லிங்கத்தை கண்டுபிடித்து 46 நாட்கள் பூசை செய்தால் அவர்களை பீடித்த பிரம்மஹத்தி தோசம் நீங்கும் என ஒலிக்கிறது. உடனே இந்திரனும், ஐராவதமும் அகத்திய நதியைத் தேடிச் செல்கின்றனர். அங்கு லிங்கத்தைத் தேடி அலைந்து, அங்கே நதிநோரத்தில் வில்வ மரங்கள் சூழ்ந்த நிலையில் உள்ள சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து அதைச் சுற்றி பீடம் அமைத்து பூசை செய்கின்றனர். மறுநாளில் இருந்து முறைப்படி 46 நாட்கள் பூசை செய்கின்றனர். இதனால் மனம் குளிர்ந்த ஈசன் அவர்களுக்கு காட்சி தந்து அவர்களை சூழ்ந்த தோசத்தை நீக்கி அவர்கள் இந்திர லோகம் செல்ல உதவுகிறார். இதன்பிறகு இந்திரன் இந்த தலத்தில் வந்து வேண்டுபவரகளின் தோசத்தை போக்கியருளுமாறு இறைவனை வேண்ட அவ்வாறே செயவதாக ஈசன் வரமளிக்கிறார். மேலும் ஐராவதத்தின் பக்தியை மெச்சி சுயம்பு லிங்கத்தில் ஐராவதத்தின் உருவத்தை பதித்தார்.
கோயில் அமைப்பு : இக்கோயில் தரைமட்டத்திலிருந்து 10 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு மூலஸ்தானத்திலும், அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் தனி மூலஸ்தானத்திலும் அருள்பாலிக்கிறார்கள். தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகி பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை தெரிந்து கொள்ளலாம்.
இது ஒரு சூரிய பூஜைக்கோயில். தை மாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது பட்டு பூஜை நடக்கிறது. அப்போது சிவனின் முன்பாக எந்த இடையூறும் இல்லாமல் இருக்க நந்தி விலகி சூரிய பூஜை சிறப்பாக நடக்க வழி செய்துள்ளது. சூரியபூஜைக்காக நந்தியே விலகியிருப்பதால் நவக்கிரகங்களும் அமைதியாக அமர்ந்த நிலையில் உள்ளன. இது இக்கோயிலின் ஒரு சிறப்பான அம்சமாகும்.
சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் நாகேஸ்வரர் சிலையில் பாம்பு உருவம் இருக்கும். அதுபோல அத்திமுகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் யானை உருவத்தைக் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம். வெளிபிரகாரத்தில் அட்சரமாலையுடன் கணபதி வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால் காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை சம்ஹாரம் செய்து ஞானத்தை வழங்குகிறார். எனவே தான் இவர் “சம்ஹார தெட்சிணாமூர்த்தி’ எனப்படுகிறார்.
கிழக்கு நோக்கியவாறு இக்கோயில் அமைந்துள்ளது. படிக்கட்டுகளில் கீழிறங்கி வந்து கோயிலில் நுழைய வேண்டும். முன் பக்கம் உள்ள முதன்மைக் கோயிலில் உள்ள சிவன் அழகேசர் எனப்படுகிறார். இந்தக் கோயிலின் உள் பிரகாரத்தின் கோட்ட தெய்வங்களாக தென்முகக் கடவுள், விஷ்ணு, துர்கை ஆகிய தெய்வங்களும், கருவறையின் முன் பக்கமாக இந்திரன், சந்திரன், சூரியன் ஆகியவர்களின் சிலைகள் உள்ளன. இக்கோயிலைச் சுற்றி 16 கால் மண்டபமும் சுற்றுச்சுவரும் அமைந்துள்ளது. கோயிலின் வலப்பறுமாக அகிலாண்டேஸ்வரி தனி சந்தியோடு உள்ளார். அழகேசர் கோயிலில் பின்புறமாக விநாயகர் ஆலயம், வள்ளி தெய்வாணையுடன் கூடிய ஆறுமுகன் ஆலயம், ஐராவதீசுவரர் ஆலயம் ஆகியன தனித்தனியாக அமைந்துள்ளன. ஐராவதீசுவர கோயிலின் அர்த்த மண்டபத்தில் அப்பருக்கு சிலை உள்ளது. இதன் கருவறையில் உள்ள லிங்கமே யானை முகத்தோடு அமைந்துள்ளது என்பர். இதே கருவறையில் காமாட்சி அம்மனும் அமைந்துள்ளார். கோயின் வலப்பக்கமாக பஞ்ச லிங்கங்களுக்கு தனித்தனியாக நீண்ட வரிசையில் சந்நிதிகள் நந்திகளுடன் உள்ளன. இக்கோயிலில் ஒய்சால அரசன் வீர இராமநாதன் ஆட்சிக்காலக் கல்வெட்டுகள் உள்ளன.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : குப்பம், பாலக்கோடு, திருப்பத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை