தாராபுரம், அகஸ்தீஸ்வர சுவாமி
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் என்னும் ஊரில் திருப்பூரில் இருந்து 60 கி.மீ., ஈரோட்டில் இருந்து 80 கி.மீ. தெலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : அகஸ்தீஸ்வரர் சுவாமி
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தல சிறப்புகள் : இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு அருளுகிறார்.
கோயில் அமைப்பு : இக்கோயிலில் சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், விநாயகர், பாலதண்டாயுதபானி, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. கோயில் வாசலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி எழுந்த ருளியுள்ளார். பெருமாளை வணங்கிவிட்டு அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு உள்ளே செல்லும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருமாள் மனக்குறையைத் தீர்த்து வைப்பவராக உள்ளார்.
அகத்தியர், அமராவதி ஆற்றங்கரையில் தன்னுடைய பூஜைக்கு உரிய சிவலிங்கத்தை காசியில் இருந்து சீடர்கள் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டதால் சிவ பூஜையை முடிக்க தன்னுடைய திருக்கரங்களால் அமராவதி புனித நீரின் மணலை பிடித்து வைத்து பூஜித்தார். ஆகவே அதற்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று. மேலும் தனது சீடர்கள் காசியில் இருந்து லிங்கத்தை தாமதமாக எடுத்து வந்ததால் இவர் பிடித்து வைத்த லிங்கமே மூலஸ்தானம் ஆகியது. சீடர்கள் கொண்டு வந்த லிங்கம் வலது பக்கம் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தல வரலாறு : பராந்தசுபுரம் என்றும் இராஜபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர்கொண்டு விளங்கும் தாராபுரம் நகர் சரித்திர புகழ் பெற்ற தலமாகும். இந்நகரில் அமராவதி நதிக்கரையில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அகஸ்தீஸ்வரர் ஆவார்.
கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லு மாறு, அகத்தியருக்கு சிவன் கட்டளையிட்டார். அங்கு செல் லும் வழியில், அகத்தியர் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த போது, மணலில் ஒரு லிங்கம் வடித்தார். அகஸ்தியர் வடித்த லிங்கம் என்பதால் சுவாமிக்கு அகஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், லிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் வடிக்கப்பட்டது.
பஞ்சபாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. திருமலை சுவாமி சித்தர் வழிபட்டுள்ளார். ராமேஸ்வரம், கும்ப கோணம், காஞ்சிபுரம் நகரிலுள்ள கோயில்களில் உள்ள மணல் லிங்கங்களுக்கு அபிஷேகம் நடப்பதில்லை. ஆனால், இங்கு தினமும் அபிஷேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாத்தும் முன் இந்த லிங்கத்தில், மணலில் சேர்ந்துள்ள “காக்கா பொன்’ என்னும் துகள் ஜொலிப்பதைக் காணலாம். இந்த லிங்கத்தை இங்கு ஸ்தாபிதம் செய்யும் முன்பு, இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகஸ்தியர், இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அது முடியாமல் போனதால், அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி, அதிலுள்ள மணலை பிடித்தே லிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் விரைவில் செயல்களை முடிக்க இந்த அகஸ்தீஸ்வரரை வணங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், தடை பட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித் ததும் தாமத மின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகா யம் ஆகிய ஐந்து பஞ்ச பூதங்களையும் வணங்கும் வகையில் ஒரே சன்னதியில் ஐந்து லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உயரத்தில் மாறுபட்டவை. சிவராத்திரி மற் றும் பிரதோஷ காலங்களில் பஞ்சலிங்கங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளும் கிடைக்கும். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி அம்பிகை சன்னதியில், கன்னியர்கள் திருமணத் தடையை நீக்கவும், திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்கியம் வேண்டியும் வழிபடுகின்றனர். அமராவதி ஆற்றில் குளித்து ஈரப்புடவையுடன் அம்பாளை பயபக்தியுடன் வணங்குவதை காண முடிகி றது. அத்துடன் அம்பாள் சன்னதியிலோ, வீட்டி லோதிரிசதி 300 நாமாவளியை ஐந்து அல்லது ஒன்பது வெள்ளிக்கிழமை பூஜித்து வந்தால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலை வாய்ப்பு ஆகிய பல ன்கள் கிடைக்கும்.
இக்கோவிலை புத்தூர் திருமலைசாமி பகவான் போன்றோர் வழிபட்டுள்ளனர். மனம் உருகி பிரார்த்தனை செய்தால் திருமண தடை, வேலைவாய்ப்பு, புத்திர தோஷம் மற்றும் சித்த பிரமை தோஷம் நிவர்த்தி ஆகும். சுகல ஷேமங்களும் பெறுவார்கள். புண்ணிய நதியாகிய அமராவதியல் நீராடி தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் அடைவர். இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, மார்கழி, ஆணி, புரட்டாசி, ஐப்பசி, ஆடி, மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
காலை 6.30 முதல் பகல் 11.30 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை