எஸ். பெரியபாளையம் , சுக்ரீசுவரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கி,மீ பயணித்தால் சர்க்கார் பெரியபாளையம் முன்னதாக இக்கோவில் அமைந்துள்ளது. திருப்பூர், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், அவிநாசி, கோயம்புத்தூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து இக்கோவிலை அடைய பேருந்துவசதிகள் உள்ளது. இவ்வூர் சர்க்கார் பெரிய பாளையம் என்றும் பெரிய பாளையம் என்றும் வழங்கப்படுகிறது. சுருக்கமாக எஸ். பெரியபாளையம் என்றும் அழைக்கப்படுகிறது.
இறைவன் : சுக்ரீசுவரர்
இறைவி : ஆவுடைநாயகி
தல சிறப்புகள் : சுக்ரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள லிங்கமானது, இராமாயண காலத்தில் இராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டவர் என்றும், இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் எனப்படுகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. மூலவருக்கு எதிாில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் வீற்றிருப்பது தனிச் சிறப்பு,
தல வரலாறு : முன்னொரு காலத்தில் ஒரு வணிகர், இந்த கோயிலிலின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றி சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார். மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, வணிகர் பாசிப்பயிறு இருப்பதாக பொய்யுரைத்தார். பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளன. கோயிலின் முன்பாக வைத்து பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, வருந்திய அந்த வணிகர், இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு, உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல்.
வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
கோயில் அமைப்பு : இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்மன், தனிச் சன்னிதியில் உள்ளார். கோயிலில் மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. திருச்சுற்றில் விநாயகர், மயில்வாகனம், மூன்று லிங்கத்திருமேனிகள், பைரவர், துர்க்கை, சூரியன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மேலும் கோயிலில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களும் குபேர லிங்கம், வாயு லிங்கம், நைருதி லிங்கம் கோவிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன. வழக்கமாக சிவன் கோவில்களில் இருக்கும் தீப ஸ்தம்பம் அல்லது கொடிமரம் இந்த கோயிலில் கிடையாது.
முதலில் உள்ள நந்திக்கு ஒரு பக்கம் காது அறுபட்டு உள்ளது. பசுமாடு ஒன்று தினமும் ஒரு விவசாயின் தோட்டத்திற்கு சென்று உணவுப் பயிா்களை மேய்ந்து வந்துள்ளது, இதனை கவனித்த விவசாயியோ ஒருநாள் கதிா்அறுக்கும் அறுவாள் ஒன்றினை எடுத்து வீசியதில் பசுவின் காது அறுபட்டுவிட்டது, சிவபக்தரான விவசாயி சுக்ரீஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்ய வந்த போது, கோவில் நந்தி சிலையின் காது அறுபட்டு ரத்தம் வருவதை கண்டு திகைத்தாா். பின்னா் தனது தவறினை உணா்ந்து அதே போல் வேறு ஒரு நந்தி சிலையை வடிவமைத்து ஏற்கனவே இருந்த நந்தி சிலையை அகற்றி விட்டு புதிய சிலையை நிறுவினாா், ஆனால் மறுநாள் வந்து பாா்த்த போது அகற்றிய நந்தி சிலை மீண்டும் அதே இடத்தில் இருந்தது.
தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது. வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.
தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
உடலில் மரு உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருக்கள் மறைந்துவிடும். ஆனி மாத அனுஷம் நட்சத்திரத்தில் இத்தலத்தில் கும்பாபிஷேக விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது 1008 திருவிளக்கு பூஜை பிரசிதிபெற்றது. புரட்டாசியில் நவராத்திரி விழா, கார்த்தினை, ஆருத்ரா தரிசனம், தை பவுர்ணமியில் முருகனுக்கு தைப்பூச விழா என வருடம் முழுவதும் இக்கோவில் திருவிழாக் கோலமாக இருக்கும்.
காலை 7.30 முதல் பகல் 1.00 மணி, மாலை 5.00 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர், ஊத்துக்குளி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை