திருமுருகன் பூண்டி , மாதவனேஸ்வரர் (கேது பரிகார தலம் )
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசியில் இருந்து தென்கிழக்கே 5 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடக்கே அமைந்துள்ளது. திருப்பூர் ரயில்நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. திருமுருகநாதர் கோயிலின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.
இறைவன் : மாதவனேஸ்வரர்
இறைவி : மங்களாம்பிகை
தல மரம் : மாவிலங்க மரம்
தல தீர்த்தம் : துர்வாசர் தீர்த்தம்
தல சிறப்புகள் : கருவறையில் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சியளிக்கிறார். கேது பகவான் ஒரு முனிவரின் சாபத்திலிருந்து விடுபட இத்தலத்திற்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி மத்தவனேஸ்வரை வணங்கி சாபம் நிவர்தியானார். ஆகவே இங்கு வந்து வணங்கும் பக்த்தர்கள் கேது தோஷத்திலிருந்து விடுபடுகின்றனர். சிவனின் பிரம்மதாண்டவம் இத்தலத்தில்தான் நடந்தது என்று கூறுகிறார்கள்.
தல வரலாறு : தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது தல புராணம். வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது.
துர்வாச மகரிஷி இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுள்ளார். மாளாதரன் என்னும் வேடுவ மன்னன் வழிப்பட்ட தலம். கேது பகவான் வழிப்பட்ட தலம். ஸ்வாமிக்கு முன்பு நந்திக்கு பதிலாக நாகம் (கேது) உள்ளது. கோயிலின் முன் மண்டபத்தின் மேல் பெரிய நந்தி ஆலயத்தை நோக்கியவண்ணம் உள்ளது. இந்த நந்தி சுதை சிற்பமாகும். ஸ்வாமியின் வலப்புறம் உள்ள பைரவர் விசேஷம். சிறப்புமிக்க பல சிவாலயங்கள் இருப்பினும் பாடல் பெற்ற தலங்களாக விளங்குபவை கொங்கு ஏழு எனப் போற்றப் பெறும் ஏழு தலங்கள்தான். அவற்றுள் திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவிவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று. திருமுருகன்பூண்டி அக்காலத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பேரூராகத் திகழ்ந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரை பூண்டி மாநகர் என திருவாசகத்திலும், அருணகிரி நாதர் கொங்கு ராஜபுரம் என திருப்புகழிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
கோவில் அமைப்பு : நெடுஞ்சாலையை ஒட்டி வடபுறத்தில் முருகநாத சுவாமிக் கோவிலும், தென் புறத்தில் காண்பவர் வியக்கும் வகையில் இன்னொரு சிவாலயமும் அமைந்து, இரட்டைக் கோவில்களாக பரிணமிக்கின்றன. கிழக்கு நோக்கிய இந்தக் கோவிலில் ராஜகோபுரம் இல்லை. ஆனால் மூலவர் வீற்றிருக்கும் கருவறை விமானமே சிவலிங்க வடிவிலும், எதிரே மிகப் பெரிய வெள்ளை நிற நந்தி, மண்டபங்களின் மீது அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டு, வெளியில் இருந்து பார்க்கும் போதே மிகப் பெரிய சிவாலய தோற்றத்தைக் காட்டுவது அற்புதம். கோயில் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மாதவி வனம் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருந்ததை புராணங்கள் வாயிலாக அறியலாம். இக்கோயிலை பழைய கோயில் எனவும் பெரிய கோயில் எனவும் குறிப்பிடுகின்றனர். முதல் பூஜை மாதவனேஸ்வரருக்கும் அடுத்த பூஜை இவ்வூரிலுள்ள முருகநாத சுவாமிக்கும் இன்றும் நடந்து வருவதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையை உணரலாம்.
மாதவனேஸ்வரர் மூலவராக வீற்றிருக்கும் இவ்வாலய மரத்தடியில் நாகர்கள் சூழ, விநாயகர் சர்ப்ப விநாயகராக காட்சி தருகிறார். கருங்கல் ஸ்தூபி ஒன்று கொடிமரமாகக் காட்சி தருகிறது. வரவேற்பு வளைவைத் தாண்டி உள்ளே சென்றதும் மகா மண்டபத்தில் பெரிய கல் நந்தி வீற்றிருக்க, இருபுறமும் கணேசரும், பாலமுருகரும் தகப்பனுக்குத் துணையாக நிற்க, கருவறையில் மாதவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் லிங்கத் திருமேனியாக இறைவன் காட்சி தருகிறார். தேவ கோட்டத்தில் தட்சணாமூர்த்தி தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வடபுறம் துர்க்கையும், சண்டேசரும் எழுந்தருளியுள்ளனர். வெளிப்பிரகாரத்தில் கன்னி மூலை கணபதியும், வள்ளி தெய்வானை சமேத முருகனும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர். ஆலயத்தின் வடமேற்கு மூலையில் ஐந்து தலை நாகமும் மனித உடலுமாக கேது பகவான் தனிக் கோவில் கொண்டு விளங்குகிறார். இங்கே இவர்தான் சிறப்பு மூர்த்தி. ஒரு கோவிலில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் இடத்தினை ஆராய்ந்தால், கேது அங்கே வடமேற்கில்தான் வீற்றிருப்பார். அதேபோல இந்த ஆலயத்தின் வடமேற்கில் கேது சன்னிதி அமைந்திருப்பது மிகச் சிறப்பானதாகும்.
இவருக்கு எதிரே மாவிலங்க மரம் தல விருட்சமாக தழைத்து நிற்கிறது. இங்கே நாகப் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்கள். சுவாமிக்கு இடப்புறம் தனிக் கோவிலில் மங்கள நாயகியாக அம்பிகை அருளாட்சி செய்கிறாள். ஈசானிய மூலையில் நவக்கிரகங்களும், தனி சன்னிதியில் தெற்கு பார்த்தபடி கால பைரவரும் காட்சி தருகிறார்கள். திருக்காளகஸ்தி தவிர, சோழ நாட்டில் கேதுவுக்குத் தனி சன்னிதியுள்ள கீழப் பெரும்பள்ளம், ராகு -கேது ஏக சரீரமாக விளங்கும் திருப்பாம்புரம், மன்னை பாமணி போல கொங்கு நாட்டில் திருமுருகன் பூண்டி கேது பகவானுக்கு தனியான பரிகாரத்தலமாக சிறந்து விளங்குகிறது.
கோயிலுக்கு வெளியே தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் நுழைவு வாயிலின் மேல் தளத்தல் பெரிய அளவில் நந்தியெம்பெருமான் ஈசனை நோக்கி வீற்றிருப்பதை காணலாம். மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் தென்பகுதியில் விநாயகப் பெருமானும் வடபகுதியில் முருகப்பெருமானும் அற்புதமாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கும் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் அருளாட்சி புரியும் சுயம்பு மூர்த்தம். கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். கருவறை கோபுரம் நாகரம் என்னும் வகையைச் சார்ந்த சதுர வடிவ கோபுரம். கோபுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இத்தலத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக சுதைச் சிற்பங்களை மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக நேர்த்தியாக அமைத்திருக்கின்றனர்.
கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் முருகன் சிவபெருமானை வழிபடுதல் மற்றும் மகாரத பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்று இறைவனை வணங்குதல் ஆகிய காட்சிகள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேடுபறி செய்து அருளல் மற்றும் கேது பகவான் பூஜித்தல் காட்சி இடம் பெற்றுள்ளன. மேற்கு முகத்தில் சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிதல் மற்றும் பிரம்ம தாண்டவக் காட்சி உள்ளன. வடக்குப் பக்கத்தில் துர்வாச முனிவர் வழிபடல் மற்றும் மாலாதா வேடன் வழிபடும் சிற்பம் என நான்கு புறத்திலும் எட்டு நிகழ்வுகளை சுதைச் சிற்பமாக வடித்துள்ளது கோபுரத்துக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. கோயில் ஒரு பிரகாரத்தைக் கொண்டது. முன் மண்டபத்தில் பைரவர் சன்னதியும், முன் மண்டபத்தை ஒட்டி தென் பகுதியில் துர்வாசர் தீர்த்தமும் உள்ளன.
பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் விசேஷ அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டம், ராகு காலம் ஆகிய நேரத்தில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. கேதுதிசை, கேது புத்தி நடப்பவர்கள், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், கொள்ளு தானியம் முடிச்சு போட்டு, பல வண்ண நிற திரி போட்டு, நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுகிறார்கள். கொள்ளு சாதம் நைவேத்தியமும் படைக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு கேது பகவானுக்கு, சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடை பெறுகிறது. வேகவைத்த கொள்ளுப் பயறு மற்றும் ஏழு வண்ணத் துணிகள் ஆகியவற்றை இறைவனிடம் வைத்து பூசித்து, கேது பகவானை ஏழு முறை வலம் வந்து வணங்கினால், தோஷம் விரைவில் நீங்கும். பொருள்வசதி இருப்பின், ஐந்து கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து, துர்வாசர் தீர்த்தத்தில் நீராடி, இறை வனை வழிபடலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும், திங்கட்கிழமைகளில் காலை 7.30 முதல் 9.00 மணி வரையிலும் ராகுகால சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை 6.00 முதல் பகல் 1.00 மணி, மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை