திருத்துறைப்பூண்டி, பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டியில் அமைந்துள்ளது.
இறைவன் : பிறவி மருந்தீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தல தீர்த்தம் : மாங்கல்ய தீர்த்தம்
தல சிறப்புகள் : இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இங்கு மரகத லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இவ்வாலயத்தில் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் சிவபெருமானை வழிபடுவதால், இவ்வாலயம் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாக கருதப்படுகிறது. வில்வ மரங்கள் நிறைந்த காடாக விளங்கியதால் வட மொழியில் விஸ்வாரணியம் என்றும், தமிழில் திருத்தருப்பூண்டி என்றும் பெயர் பெற்ற திருத்தலப்பூண்டி தற்போது திருத்துறைப்பூண்டி என மருவி விளங்குகிறது. இங்குள்ள பிறவி மருந்தீசர் கோயிலில் விளங்கும் லிங்கமானது பாதாளலிங்கம் என அழைக்கப்படுகிறது. இச்சிவலிங்கம் தம்மை தரிசிப்பவர்களின் பிறவிப்பிணியை நீக்குவதால் பிறவி மருந்தீசர் என்றும், வடமொழியில் ஸ்ரீபவஔஷதீஸ்வரர் என்றும் அழைக்கப் படுகிறது.
தல வரலாறு : சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது. சோழர்கள் கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. புராணங்கள் படி அரக்கர் குலத்தில் பிறந்த ஜல்லிகை என்ற பெண் சிறந்த சிவபக்தையாக இருந்தாள். அவளுக்கு மனிதர்களை சாப்பிடும் விருபாட்சன் என்கிற ராட்சதன் கணவனாக அமைந்தான். ஒரு முறை அந்தண சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு சிராத்தம் செய்ய கங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான். அந்த அந்தண சிறுவனை சாப்பிட விருபாட்சன் முயற்சித்த போது, அந்தணர்களை கொல்வது மிகவும் பாவமான செயல் என கூறி ஜல்லிகை தன் கணவன் விருபாட்சனை தடுத்தாள். ஆனால் அவளின் பேச்சை கேட்காத விருபாட்சன் அந்த அந்தண சிறுவனை கொன்று, சாப்பிட்டான். அச்சிறுவனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே விஷமேறி இறந்தான் விருபாட்சன். இதை கண்ட ஜல்லிகை தனது கணவன் கொடூரமான ராட்சதன் என்றாலும் அவரின்றி நான் உயிர்வாழ விரும்பவில்லை என்றும், இனி உலகில் அரக்க குணம் இல்லாத மனிதர்களை பிறக்க செய்ய வேண்டும் என அம்பாளிடம் வேண்டினாள். இதை கேட்ட பெரியநாயகி ஜல்லிகையின் சிறந்த பதிபக்தியை போற்றி இறந்த அவள் கணவன் விருபாட்சனை உயிர்ப்பித்ததோடு, அவன் கொன்று சாப்பிட்ட அந்தண சிறுவனையும் உயிர்பித்தாள். தனது விதி முடிந்த பிறகு மீண்டும் தனக்கு உயிர் தந்ததற்கான காரணத்தை அச்சிறுவன் அம்பாளிடம் கேட்க, தந்தை இறந்த பிறகும் அவருக்கு வருடந்தோறும் சிராத்தம் அளிக்கும் மகன் எனது அருளை பெறுகிறான் என்று கூறி ஜல்லிகை மற்றும் அந்தண சிறுவனுக்கு அருளாசி கூறி மறைந்தாள்.
மமதை கொண்ட சில முனிவர்கள் தங்களை சிவபெருமானும், திருமாலும் அவமானப்படுத்தியதாக கருதி அவர்களை அழிக்க, யாகம் செய்து அதிலிருந்து மிகப்பெரும் ஒரு யானை வரவழைத்து அதை சிவன் பெருமாள் மீது ஏவினர். சிவபெருமான் அந்த யானையை கொன்று கஜசம்ஹார மூர்த்தி என்கிற பெயரை பெற்றார். அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சிறப்புக்கள் இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கிய திசையில் இருப்பதும், இங்கு சிவனின் கஜசம்ஹார மூர்த்தி இருப்பதும் இக்கோயிலின் விசேஷ அம்சங்களாகும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் திருமண தடை மற்றும் தாமதங்கள் நீங்கவும், கல்வி பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவும் இத்தலத்தில் வந்து வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். இத்தலத்தில் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திர தினத்தில் வந்து தன்வந்திரி ஹோமம் போன்றவற்றை செய்து கொள்வதால் நோய் நொடிகள் இல்லாத வாழ்வை பெறலாம்.அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த சிவனை வழிபடுபவர்களுக்கு பயம் என்பதே இல்லாமல் போகும்.
தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.
தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.
கோவில் அமைப்பு : அஸ்வினி பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத் தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும். இத்தலபெருமானை வழிபட்டு பேறு பெற்றோர் பிரம்மதேவர் முதல் நாதமுனிவர்வரை அநேகர் எனலாம். இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் ஒன்பது தீர்த்தங்கள் சிறந்து விளங்குவதால் நவதீர்த்தம் என்பர். இங்குள்ள நடராஜ பெருமான் சந்திர சூடாமணித் தாண்டவர் என்று அழைக்கப் பெறுகிறார். நடராஜர் கோயில் வெளிப்பிரகாரத்தில் கோபுரவாயிலுக்கு அருகே உள்ளது.
சுவாமி சந்நிதியின் தென்புறத்தில் உள்ள தியாகராஜர் கோயிலில் உள்ள மகாலிங்கம் விலை மதிப்பற்றது. வழிபடுவோருக்கு வேண்டிய நலன்களை அளிக்கவல்லது. முசுகுந்த பேரரசருக்காக இத்தலத்தில் தோன்றியருளி வீற்றிருந்தருளி அருள்பாலிக்கிறார் மரகலிங்க பெருமாள். இக்கோயிலுள் இருக்கும் பஞ்சமுகவாத்தியம்மிகவும் அபூர்வமானது. இவ்வாத்தியம் தியாகராஜர் உத்ஸவகாலங்களில் வாசிக்க பெறுகிறது. இத்தகைய வாத்தியம் திருவாருர் கோயிலில் தான் உள்ளது. வேறு எங்கும் இவ்வாத்தியம் இல்லை.
முதற்பிரகாரத்தில் வடக்கே கஜம்காரமூர்த்தி தனிக்கோயில் உள்ளது. இப்பெருமான் மிகவும் அழகாகவும், மூர்த்திகரமாகவும் அருள்பாலிக்கிறார். 2ம் குலோத்துங்கன் இக்கோயிலை திருப்பணி செய்திருக்கலாம் என தெரிகிறது. கஜசம்ஹாரமூர்த்தியை வழிபட்டால் தீப்பிணிகள் அணுகாது என்பது மக்களின் நம்பிக்கை. தனிக்கோயிலில் அருள்பாலிக்கும் பெரியநாயகி அன்னையின் உத்சவமூர்த்தி மங்களநாயகி என்று போற்றப்படும் பெரியநாயகி அம்மன் அருளால் ஜல்லியெனும் அசுரப்பெண்ணின் இறந்துபோன கணவன் உயிர்பெற்றெழுந்ததன் காரணமாக இக்கோயிலின் முகப்பிலுள்ள தீர்த்தம் மாங்கல்ய தீர்த்தம் என அழைக்கப் பெறுகிறது. இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.
இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். இக்கோவில் தீர்த்த குளத்தின் கீழ்கரையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் வேதநாயகி உடனமர் வேதாரண்யேசுவர அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு தனிக்கோவிலாக கோயில் கொண்டுள்ளார். இப்பெருமனை வணங்குபவர்களுக்கு திருமணத் தடை நீங்கும். பிறவி மருந்தீசர் கோயிலுக்கு எதிரே பிரம்மாவால் கட்டப்பெற்ற பிரமதீர்த்தம் திருக்குளம் என்று அழைக்கப்பெறுகிறது. இதில் நீராடுபவர்கள் சகல நலன்களையும் பெறுவர்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், நாகப்பட்டினம், நீடாமங்கலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை