ஊட்டத்தூர், சுத்த ரத்தினேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி தாலுகா ஊட்டத்தூரில் திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : சுத்த ரத்தினேஸ்வரர், துய்ய மாமணீஸ்வரர், மாசிலாமணி.
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், நந்தி ஆறு
தல சிறப்புகள் : ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று தேதிகளில் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள் லிங்கத்தின்மேல் படுகிறது. இத்தலத்தில் சிவனைப்பார்த்து மேற்கு திசை நோக்கி ஒரு நந்தியும், கிழக்கு திசைநோக்கி ஒரு நந்தியும் அமைந்திருப்பது சிறப்பு. மூலவர், நவமணிகளுள் ஒன்றான ரத்தினத்தினால் ஆன பாணம் கொண்டு அருள்புரிகிறார். எனவே "சுத்த ரத்தினேஸ்வரர்" என போற்றப்படுகிறார். முழுவதும் ரத்தினத்தினால் ஆன பாணத்தை இக்கோயிலைத் தவிர வேறெங்கும் காண இயலாது. எப்போதும் வற்றாத பிரம்ம தீர்த்தம், நோய்கள் பலவற்றையும் தீர்க்கும் நிவாரணியாக போற்றப்படுகிறது. இந்த தீர்த்தம் மூலவருக்கு நேர் எதிரில் இருப்பது சிறப்பு. மிகவும் அரிதான பஞ்சநதன கல்லினாலான நடராஜர் சிலை உள்ள திருத்தலம். சூரியன் வந்து வழிபடும் திருத்தலம்.
தல வரலாறு:
கோவில் அமைப்பு : கோயிலின் நடுவில் நோய்களைத் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் சக்திவாய்ந்த பிரம்ம தீர்த்தம் உள்ளது. இங்குள்ள பிரம்ம தீர்த்தம் பிரம்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டது. இதன் அருகே காட்சி அளிக்கிறார் நந்தியம்பெருமான். ஸ்ரீபஞ்ச நதன நடராஜர்: பஞ்சநதனக் கல் என்பது, கருங்கல்லைப் போன்ற தோற்றம் இருந்தாலும் பலகோடி சூரியன்களின் சக்தியை உள்ளடக்கியது. பத்து லட்சம் கோடி பாறைகள் உருவாகும்போது, அவற்றுள் ஒன்றே ஒன்றுதான் பஞ்சநதனப் பாறையாக மாறும் வாய்ப்பு உண்டு என்பது சித்தர்கள் வாக்கு. சூரியனிலிருந்து வெளிப்படும் சிற்சபேச கதிர்களை தனக்குள் ஈர்க்கிறது பஞ்சநதனப் பாறை.
இந்த பாறைகளால் பஞ்ச ஸ்வரங்களையும் உருவாக்க முடியும். இந்தப் பாறையைத் தட்டினால், இசையின் அடிநாதமான சப்த ஸ்வரங்களில் ஐந்து ஸ்வரங்களை கேட்க முடியும். பஞ்சநதனப் பாறையின் இன்னோர் அபூர்வமான சிறப்பு, மனிதக் கரங்களால் இதைச் செதுக்கி சிலைகள் செய்ய முடியாது. சித்தர்களின் ஆன்மிகச் சக்தியால், பஞ்சநதனப் பாறைகளில் இறைவனின் உருவங்கள் தானாகவே உருவாகும் என்று சொல்லப்படுகிறது. அவ்வகையில் ஊட்டத்தூரில் அருள்பாலிக்கும் ஆடல் வல்லானின் விக்கிரகம், உளி இல்லாமல் செதுக்கப்பட்டது என்கின்றனர். இதைப்போல பல கோயில்களில் அருள்பாலிக்கும் நந்தி உருவங்கள், தெய்வீக சக்தியால் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் பஞ்சநதனக் கல்லில் உருவான மூர்த்தி ஊட்டத்தூர் நடராஜர் மட்டுமே என்கின்றனர்.
பார்ப்பதற்கு கருங்கல்லை போன்று தோற்றம் இருந்தாலும் சில தருணங்களில் அந்தக் கல்லானது கரு நீலமாகவும், கரும் பச்சை வண்ணத்திலும் கூட காட்சிதரும். பல கோடி சூரியனின் சக்தியை உள்ளடக்கிய கல்லாக இது சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. இந்த பஞ்சநதன பாறையின் மற்றொரு சிறப்பை கேட்டால் எவராலும் நம்ப முடியாது. இந்தப் பாறையில் இறைவனின் திரு உருவத்தை எவராலும் உளியால் செதுக்க முடியாது என்றும், இறைவனின் திருவுருவம் தானாகவே உருவாகும் என்றும், வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் காணமுடியாத பஞ்சநதன கல்லில் உருவான சிலைதான் ஊட்டத்தூர் நடராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்சிணாமூர்த்தி தனித்தன்மையுடன் காணப்படுகிறார். தென்முகக்கடவுளுக்கு பின்புறம் உள்ள மரம் அதிஅற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துர்க்கா தேவியின் திருமுகத்தில் கோரை பற்கள் காணப்படுகின்றன. பொதுவாக இந்த அமைப்பு பிற கோயில்களில் காணப்படுவதில்லை. அம்மன் சன்னதி இரண்டாவது சுற்று சுவர் பாதையில் உள்ளது. வேறெங்கும் இல்லாத வண்ணம், இத்தலத்தில் கால பைரவர் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவர் கிழக்கு நோக்கி அருள்புரியும் கஜலட்சுமிக்கு எதிரில் உள்ளார். இந்த அமைப்பு காண்பதற்கு அரிதே. வீரபத்ர சுவாமி தன் சிரசின் மீது லிங்கத்தை ஏந்தி உள்ளார். பொதுவாக இந்த அமைப்பு பிற கோயில்களில் காணப்படுவதில்லை. திருக்கோயிலிலுள்ள ஒவ்வொரு சிலாரூபமும் தனித்தன்மையுடன் திகழ்வதை உணர முடிகிறது.
தல வரலாறு : தங்களுள் யார் சிறந்தவர் என்ற தர்க்கம் பிரம்ம தேவருக்கும் பெருமாளுக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கு உண்மையை உணர்த்த அவ்விடம் தோன்றினார் சிவபெருமான். தானே நடுவராக இருந்து சிறந்தவரை தேர்வு செய்வதாகக் கூறினார். பிரம்ம தேவரும், பெருமாளும் ஒப்புக் கொண்டனர். தன்னுடைய அடி அல்லது முடியைக் கண்டு யார் முதலில் திரும்புகிறார்களோ அவரே சிறந்தவர் என்று சிவபெருமான் கூறினார். அதன்படி, அடியைத் தேடி பெருமாளும், முடியைத் தேடி பிரம்ம தேவரும் புறப்பட்டனர். மேல்நோக்கி சென்று கொண்டிருந்த பிரம்ம தேவர், சிவபெருமானுடைய சிரசிலிருந்து விழுந்து, நிலம் நோக்கி வந்துக் கொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்தார். அதையே ஐயனின் முடியைக் கண்டதாகக் கொண்டு திரும்பினார். அடியைத் தேடி சென்ற பெருமாள், தன்னால் ஐயனின் அடியைக் காண இயலவில்லை என்று கூறி, தோல்வியை ஒப்புக்கொண்டார். முடியைத் தேடி சென்ற பிரம்ம தேவரோ பொய் உரைத்தார். அவருக்கு தாழம்பூ சாட்சி கூறியது. சினம் கொண்டார் சிவபெருமான். அன்று முதல் பிரம்ம தேவருக்கு பூவுலகில் தனி ஆலயம் எதுவும் ஏற்படாது என சாபம் அளித்தார். தாழம்பூவை சிவபூஜையிலிருந்து நீக்கினார். தவறை உணர்ந்த பிரம்ம தேவர் தான் உய்ய வழிகாட்டி அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமானும் சினம் தணிந்து, பூவுலகிலுள்ள அணைத்து புண்ணிய ஆறுகளின் நீரினால் தன்னை ஆராதித்து வர சாபம் நீங்கும் என்று கூறினார். அவர் வாக்கின்படி, ஊட்டத்தூர் வந்த பிரம்ம தேவர், பூவுலகிலுள்ள அணைத்து புண்ணிய ஆறுகளின் நீரும் ஒரே இடத்தில் ஊற்றாக எழுமாறு செய்து சிவபூஜையில் ஈடுபட்டார். பிற்காலத்தில் ஊட்டத்தூர் என மருவியது.
ஒருமுறை, புனித ஆறுகளாக போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, துங்கபத்திரை ஆகிய ஏழு ஆறுகள், தங்களுள் யார் சிறந்தவர் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டன. தங்களுக்கு தீர்வு கூறும்படி சுத்த ரத்தினேஸ்வரரை வேண்டிக்கொண்டன. ஆறுகளின் வேண்டுதலை ஏற்ற சுத்த ரத்தினேஸ்வரர், அப்பணியை நந்தியிடம் ஒப்படைத்தார். நந்தியும், ஏழு ஆறுகளின் நீரை அருந்திவிட்டு கிழக்கு நோக்கி அமர்ந்து விட்டது. அப்போது நந்தியின் நாசியிலிருந்து ஒரு ஆறு மட்டும் வெளியேறியது. அந்த ஆறு நந்தியின் பெயர் கொண்டு இன்று வரை நந்தி ஆறாக திருக்கோயிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கிறது. நந்தி ஆறு திருச்சி அருகிலுள்ள கொள்ளிடத்தை அடைந்து பிறகு கடலில் கலக்கிறது. இந்நிகழ்வை உணர்த்தும் வண்ணம், திருக்கோயிலில் இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. ஒன்று சுத்த ரத்தினேஸ்வரரை நோக்கியும் மற்றொன்று கிழக்கு நோக்கியும் அமர்ந்துள்ளன.
ஊட்டத்தூரின் மேற்கு திசையில் அமைந்திருக்கும் சோளேஸ்வரம் கோவிலுக்கு ராஜராஜ சோழன் அடிக்கடி வருகை தருவார். ஒருசமயம் மன்னரின் வருகைக்காக, பாதையை சரி செய்யும் சமயத்தில் மண்வெட்டியால் புல்லை வெட்டும் போது, ஒரு இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. பயந்துபோன தொழிலாளிகள் இந்த செய்தியை மன்னனிடம் தெரிவித்தனர். அந்த இடத்தில் இருந்த சிவலிங்கத்தை கண்டுபிடித்து, செய்த பாவத்திற்காக மன்னிப்பும் கேட்டு, அந்த லிங்கத்திற்கு ஊட்டத்தூரில் ரத்தினேசுவரர் திருக்கோவிலை கட்டினார் ராஜராஜ சோழ மன்னர். இன்றும் இத்திருத்தலத்தில் வீட்டிலிருக்கும் லிங்கத்தின் நெற்றியில் வடு தென்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள திருக்கோயில் சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. புதையுண்டு கிடந்த திருக்கோயிலை கண்டறிந்து மீண்டும் வடிவமைத்த பெருமை ராஜ ராஜ சோழனையே சாரும். ஆதியில் கட்டப்பட்ட திருக்கோயில் மண் மூடி நிலத்தினுள் மறைந்து போனது. திருக்கோயில் இருந்த சுவடே இல்லாமல் போயிருந்தது. நிலத்தின் மேல் புற்களும் மரங்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. தஞ்சையிலுள்ள பெருவுடையார் திருக்கோயில் தவிர, பல சிவாலயங்களை எழுப்பி சைவ சமயத்தை வளர்த்தவன் ராஜ ராஜ சோழன். அவற்றுள் ஒன்று ஊட்டத்தூருக்கு அருகில் உள்ள சோழீஸ்வரம் ஆகும். சோழீஸ்வரம் திருக்கோயிலைக் காண வரும் தங்கள் மன்னனான ராஜ ராஜ சோழன், புற்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியை சிரமத்துடன் கடந்து வர வேண்டி உள்ளது. அதனால் அப்பகுதியை சீரமைத்து, மன்னனுக்கு பாதை அமைக்கலாம் என மக்கள் முடிவு செய்தனர். பாதையை சீரமைக்கும் பணியை செவ்வனே செய்து வந்தனர். அப்போது ஒருநாள், நிலத்திலிருந்து ரத்தம் பீறிட மக்கள் அனைவரும் பயந்து போனார்கள். செய்வதறியாது திகைத்தனர். தகவலை தங்கள் மன்னனான ராஜ ராஜ சோழனிடம் தெரிவித்தனர். விரைந்து வந்த சோழன், வீரர்கள் சிலரை அழைத்து, நிலத்தை கவனத்துடன் ஆராயுமாறுக் கூறினான். மன்னனின் கட்டளைக்கேற்ப வீரர்களும் மிகுந்த கவனத்துடன் மண்ணை நீக்கினர். மண்ணிற்குள் புதைந்திருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது. சிவலிங்கத்தின் மேல் வெட்டுக்காயம் ஏற்பட்டு, அதிலிருந்து ரத்தம் பீறிட்டிருந்தது. சோழன் உட்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ராஜ ராஜ சோழன் கட்டளைப்படி மக்களும் வீரர்களும் மண்ணை நீக்கி, சிவலிங்கத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அனைவரது உழைப்பின் பயனாக சிவலிங்கம் மட்டுமல்லாமல், புதையுண்ட திருக்கோயிலும் வெளிப்பட்டது. சிதிலமாகி இருந்த திருக்கோயிலை மீண்டும் புதுப்பித்தான் ராஜ ராஜ சோழன்.
தன் தந்தையான சுந்தர சோழன் மறைந்த பிறகு, அவரது பூதவுடலை தகனம் செய்தான் ராஜ ராஜ சோழன். தந்தையின் சாம்பலை காசியிலுள்ள கங்கையில் கரைப்பதே சிறந்தது என்று எண்ணிய சோழன் காசியை நோக்கி பயணமானான். வழியில், ஊட்டத்தூரிலுள்ள சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயிலைக் கடந்து சென்றான். இரவு பொழுதை திருக்கோயிலுக்கு அருகிலுள்ள நந்தி ஆற்றின் கரையில் கழித்தான். அப்போது, சாம்பல் இருந்த மண் குடத்திலிருந்து பூக்களின் நறுமணம் வெளிப்பதுவதை உணர்ந்து ஆச்சரியம் அடைந்தான். பிறகு காசியை அடைந்த சோழன், மண் குடத்திலிருந்து பூக்களின் நறுமணம் வருவது நின்று, வெறும் சாம்பல் மட்டும் இருப்பதைக் கண்டான். சுத்த ரத்தினேஸ்வரர் பெருமையை உணர்ந்தவனாய், கங்கையில் சாம்பலைக் கரைக்கும் எண்ணத்தை கைவிட்டு, மீண்டும் ஊட்டத்தூரை அடைந்தான். சுத்த ரத்தினேஸ்வரரை வணங்கி, தந்தையின் சாம்பலை நந்தி ஆற்றில் கரைத்து விட்டான். சோழனின் இந்த செய்கைக்குப்பிறகு, "காசிக்கு வீசம் கூட" என மக்கள் கூறத் துவங்கினர். அதாவது, ஒரு மனிதன் இறந்த பிறகு, அவனுக்கு செய்யப்படும் ஈம சடங்கினை ஊட்டத்தூரில் செய்வது காசியில் செய்வதை விட சிறந்ததாகும். திருக்கோயிலிலுள்ள பிரம்ம தீர்த்தத்தின் மகிமையால் தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து ராஜ ராஜ சோழன் நிவாரணம் பெற்றான் என்ற செய்தியும் கூறப்படுகிறது.
நவ லிங்க பூஜை எனப்படும் ஒன்பதுவிதமான பூஜைகளை நிறைவு செய்த பின்னரே, பாறையில் பஞ்சநதன நடராஜர் உருவம் தோன்றும், அதன் பிறகுதான் மனிதர்கள் தரிசனம் செய்யமுடியும்.இவ்வளவு மகத்துவங்கள் மிகுந்த ஊட்டத்தூர் ஆடல்வல்லானை வேண்டினால் அனைத்தும் நிறைவேறும். திருமண தடை நீங்கும். பஞ்ச நதன நடராஜர் சிறுநீரக சம்பந்தமான நோய் நீக்க வல்லவர். இழந்த பதவிகளை மீட்டு தரும் சக்தி படைத்தவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி மாதம் விசாக திருவிழாவின் போது, சூரியனின் கதிர்கள் 3 நிமிடங்கள் மூலவரின் மீது படுவது மற்றொரு சிறப்பு.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து இங்கே கிடைக்கும் வெட்டிவேரை வாங்கி 48 துண்டுகளாக உடைத்து மாலையாக கட்டி நடராஜப் பெருமானுக்கு அணிவிக்க வேண்டும். அடுத்ததாக அவருக்கு உண்டான அர்ச்சனைகளை முறையாக செய்து வழிபட்ட பின்பு, நாம் அணிவித்த அந்த வெட்டிவேர் மாலையை பிரசாதமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். கோவிலில் இருக்கும் பிரம்ம தீர்த்த நீரை ஒரு கேனில் சேகரித்து வாங்கிக் கொள்ளலாம். இந்த தீர்த்தம் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்கு சென்றதும் தினமும், நடராஜர் சிலையில் இருந்து பெறப்பட்ட வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டை எடுத்து, அந்த தீர்த்தத்தில் போட்டு முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த தீர்த்தத்தை எடுத்து குடித்து விடலாம். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வர சிறுநீர் கோளாறு நீங்கும் என்பது இத்தளத்தின் பக்தர்களின் நம்பிக்கையாக கூறப்படுகிறது. பெண்கள் கட்டாயம் மாதவிலக்கு நாட்களில் இந்த நீரை பருக கூடாது. 48 நாட்கள் முடிந்ததும் மீதமுள்ள வெட்டிவேரை ஓடும் ஆற்றில் விட்டு விடலாம். பல பேர் இந்த பரிகாரத்தை செய்து சிறுநீர் கோளாறுகள் முழுமையாக நீங்கிய பின்பு திரும்பவும் இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அபிஷேக அர்ச்சனை ஆராதனை செய்து நன்றி தெரிவித்து விட்டு சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம் உடலில் இருக்கும் எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும், அதை தீர்க்கும் சக்தி, இத்தலத்தில் வீற்றிருக்கும் பஞ்சநதன நடராஜர்க்கு உண்டு. திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். இழந்த பதவியையும் மீட்பதற்கு சிவபெருமானை வழிபடலாம்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சிராப்பள்ளி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை