வாசுதேவநல்லூர், அர்த்தநாதீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் மதுரை-தென்காசி சாலையில் வாசுதேவநல்லூரில் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில். ஆட்டோ வசதி உண்டு.
இறைவன் : சிந்தாமணிநாதர் , அர்த்தநாரீஸ்வரர்
இறைவி : இடபாகவல்லி
தல தீர்த்தம் : கருப்பை நதி
தல விருட்சம் : புளி
தல சிறப்புகள் : சிவன் பாதி அம்பாள் பாதியாக அருள் வழங்கும் சிந்தாமணிநாதர் என்னும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இங்குள்ள புளிய மரத்தின் பழங்கள் இனிப்பு புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.
தல வரலாறு : பிருங்கி என்பவர் சிவம் வேறு சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். பார்வதி சிவனிடம் பிருங்கிக்கு உண்மையை உணர்த்தும்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை. எனவே அவள் சிவனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். ஒரு புளிய மரத்தின் அடியில் தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தன்னுள் ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அர்த்தநாரீஸ்வரரை சிந்தாமணிநாதர் என்று அழைக்கின்றனர்.
அப்போதும் முனிவர் வண்டு வடிவம் எடுத்து அம்மையப்பராகிய ஈசனை மட்டும் வயிற்று பகுதியில் துளைத்து வணங்கினார். இதனால் உமையவள் வெகுண்டார். பிருங்கி முனிவரிடம் இருந்த தவசக்தியை நீக்கிவிட்டார். பிறகு முனிவர் முன் வலப்புற பின் கையில் சூலமும் முன் கையில் கபாலமும் கொண்டார் ஈசன். கழுத்தில் பாதி ருத்ராட்ச மாலையும் இடுப்பில் புலித்தோலுடனும் சிந்தாமணிநாதராக காட்சியளித்தார். இடப்புறமாக பின் கையில் பாசமும் முன் கையில் நீலோத்பவ மலரும் கழுத்தில் பாதி மணி ஆபரணமாகவும் காலை சிறிது முன் வைத்து காட்சி தந்தார் பார்வதி. ஒரு முறை துர்வாச முனிவர் கயிலையில் சிவபூஜை செய்து சிவபெருமானிடமிருந்து அரிய தெய்வீக மலர் ஒன்றைப் பெற்றார். அதனை தகுதிவாய்ந்த ஒருவரிடம் சேர்ப்பிக்க நினைத்து, தன் வெள்ளை யானை ஐராவதம் மீது ஆரோகணித்து வந்த தேவேந்திரனிடம் அளித்தார். இந்திரன் அதனை அலட்சியமாக வாங்கி யானையின் மதகத்தின் மீது எறிய, யானையோ அதனை துதிக்கையால் எடுத்து காலில் போட்டு மிதித்தது. அதனைக் கண்ட துர்வாசர் பெருங்கோபம் கொண்டார். "சிவபிரசாதத்தை மதியாத இந்திரா நீயும் உன் ஐராவத யானையும் பூலோகம் சென்று துன்புறுவீர்களாக," என சாபமிட்டார். உடனே அறிவு தெளிந்த இந்திரன் துர்வாசர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். மனமிரங்கிய முனிவர் பாபவிமோசனம் பெற வழி கூறினார். "பொதிகை மலை அருகில் உள்ள சிந்தை வனம் என்னும் புளியமரக்காட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு திருக்கோயில் கட்டி வழிபட, துன்பம் தீரும்" என கூறினார்.உடனே இந்திரனும் தன் ஐராவதத்துடன் பூலோகம் வந்தான். அங்குள்ள நிட்சேப நதியில் நீராடினான். பின் சிந்தாமணிநாதருக்கு ஆலயம் எழுப்பி சாபவிமோசனம் பெற்றான். இந்திரன் கட்டிய இக்கோயில், 'வாசவன்' அவனது மறுபெயரால் 'வாசவனூர்' என்று அழைக்கப்பட்டது. அதுவே வாசுதேவ நல்லூர் என்றானது.வெள்ளையானையை இந்திரன் கட்டிவைத்த 'வெள்ளை யானைக்கோட்டை' என்ற இடத்தை தற்போதும் வாசுதேவநல்லூர்-தாருகாபுரம் பாதையில் காணலாம். ராமபிரான் சீதையை தேடி வாசவனூர் வழியாக வந்தார். அப்போது மாலைக் கடன் நிறைவேற்ற நேரமாகிவிட்டது. அதற்குத் தண்ணீர் வேண்டும். அவ்விடத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே ராமர் தன் கோதண்டத்தில் சம்பு என்ற பாணத்தை தொடுத்து தரைநோக்கி எய்தார். அம்பு துளைத்த இடத்திலிருந்து நீர் ஊற்று பொங்கியது. அதன்பின் சந்தியாவந்தனத்தை முடித்தார். அவர் பாதம் பதித்த இடம் 'இராமர் பாதமா'க இன்றும் விளங்குகிறது.
இப்பகுதியில் சிவபக்தியுடைய ரவிவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இவனது மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான். மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன். ஒருநாள் அவனைச் சந்தித்த சிவனடியார் ஒருவர் இத்தலத்து சிவனிடம் வேண்ட நோய் நீங்கும் என்றார். அதன்படி மன்னன் இங்கு வந்து வணங்க மகனின் நோய் குணமானது. ரவிவர்மனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. ராஜரிஷியின் ஆலோசனைப்படி இருவரும் 'சோமவார விரதம்' மேற்கொண்டனர். பல சோமவாரங்களுக்குப் பிறகு சிவன் மன்னனின் கனவில் தோன்றினார். "மன்னா, பொதிகை மலை அருகில் சிந்தை வனத்தில் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதன் தெற்கு பகுதியில் நிட்சேபநதி ஓடுகிறது. நீயும் உன் துணைவியும் அங்கு சென்று நதியில் நீராடி அர்த்தநாரீஸ்வரரை 48 நாட்கள் வழிபட்டால் உனக்கு குழந்தை பிறக்கும்" என்று கூறினார். சிவன் ஆணைப்படி மன்னனும், ராணியும் ஒரு மண்டல காலம் நிட்சேபநதியில் நீராடி அர்த்த நாரீஸ்வரரை வணங்க ராணி கர்ப்பம் அடைந்தாள். அன்று முதல் அந்த நதி 'கருப்-பை ஆறு' என்றும் அழைக்கப்படுகிறது. நன்றியறிதலாக மன்னன், இவ்வாலயத்திற்கு சுற்றுப் பிராகாரம் கட்டிக் கொடுத்தான். அதோடு தன் மகன் குலசேகரனின் தொழுநோயையும் இந்த இறைவன் குணப்படுத்தியதால் அவனும் தன் பங்கிற்கு ஆலயத்தில் மண்டபத்தை கட்டித் தந்தான். இம்மண்டப மேற்கூரை கேரள பாணியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வில்-அம்பு சின்னங்களையும் பார்க்கலாம்.
கோவில் அமைப்பு : அர்த்தநாரீஸ்வரரின் தலையில் கங்கை இருக்கிறாள். சிவனுக்குரிய வலப்பாகத்தில் சந்திரனும் அம்பாளுக்கு பின்புறம் ஜடையும் உள்ளது. சிவப்பகுதி கரங்களில் சூலம் கபாலமும் காதில் தாடங்கமும் இருக்கிறது. அம்பாள் பகுதியிலுள்ள கைகளில் பாசம் அங்குசம் பூச்செண்டும் காதில் தோடும் உள்ளன. சுவாமி பகுதி காலில் தண்டம் சதங்கையும் அம்பாள் பகுதி காலில் கொலுசும் இருக்கிறது. சுவாமி பாகத்திற்கு வேஷ்டியும் அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. அம்பாள் பகுதியை இடபாகவல்லி என்கின்றனர். பிருங்கி மகரிஷி இங்கு உற்சவராக இருக்கிறார். ஆனி பிரம்மோற்ஸவத்தின்போது சிவனையும் அம்பாளையும் அருகருகில் வைப்பார்கள். பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் வகையில் பாவனை செய்வார்கள்.
கோயிலுக்குள் நுழைந்தால், வலது புறம் தெப்பக்குளம். அதைக் கடந்து உள்ளே இரு அடுக்காக மண்டபங்கள் காட்சி தருகின்றன. அடுத்து, கர்ப்ப கிரகம். அனுக்கை விநாயகரை தரிசித்துவிட்டு காவல்தெய்வங்களான சண்டி, முண்டியையும் வணங்கலாம். கருவறையில் தேவேந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து, பிருங்கி முனிவரை ஆதரித்த அர்த்தநாரீஸ்வரர் கருணையே வடிமாக தரிசனம் அருள்கிறார். உள்பிராகாரத்தில் 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், பஞ்சலிங்கம், லட்சுமி, சாஸ்தா, சித்தி விநாயகர் என வரிசையாக மூர்த்தங்கள் அருளாசி வழங்குகின்றன. வள்ளி தெய்வானை சமேத சண்முகர் திருவருள் புரிகிறார். இக்கோயிலில் இந்திரன் வழிபட்டதை விளக்கும்வகையில் கர்ப்பகிரகத்தின் கோமுகம் யானை முகத்துடன் காணப்படுகிறது. அடுத்து சனிபகவானையும், சண்டிகேஸ்வரரையும் தரிசிக்கலாம். தனி சந்நதியில் விஷ்ணு துர்க்கை பேரழகு மிளிர திகழ்கிறாள். அம்பிகைக்கு என்று தனிச் சந்நதி இல்லாததை விஷ்ணு துர்க்கை நிவர்த்தி செய்கிறாள்.
பிராகாரத்தில் கன்னி விநாயகர், ஐயப்பன், புற்றுக் கோயில் என அடுத்தடுத்து வணங்கிக் கோண்டே உழவார சேவகர்கள் உருவாக்கிய நந்தவனத்தினை அடையலாம். அதில் அபூர்வமாக ருத்ராட்ச மரம் காணக்கிடைக்கிறது. தனிச்சந்நதியில் காலபைரவர் அருளாசி வழங்குகிறார். எதிரிகளை எளிதாக அழிக்கும் வல்லமை கொண்ட இவரை தேய்பிறை அஷ்டமியன்று பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வந்து வழிபடுகிறார்கள். தனி மண்டபத்தில் காட்சிதரும் பிரமாண்ட நடராஜர் பிரமிக்க வைக்கிறார். புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள நதியில் நீராடி அம்பிகையை வழிபட கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நதி கருப்பை ஆறு என்று அழைக்கப்படுகிறது. பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை. இங்கு நவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : வாசுதேவநல்லூர், தென்காசி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை