விக்கிரமசிங்கபுரம், சிவந்தியப்பர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது.
இறைவன் : சிவந்தியப்பர்
இறைவி : வழியடிமைகொண்டநாயகி
தல தீர்த்தம் : வாணதீர்த்தம், பாணதீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
தல வரலாறு : இப்பகுதியை ஆட்சி செய்த சிவந்தியப்பர் என்ற சிற்றரசர், சிவபெருமானுக்கு சேவை செய்வதை பெரும் பாக்கியமாக கருதினார். தன்னுடைய காலத்திற்குப் பிறகு தன் நாட்டு மக்களுக்கு சிவபெருமான் எப்போதும் அருள்பாலிக்க வேண்டும் என்று விரும்பிய சிவந்தியப்பர், ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கோயில் கட்ட விரும்பினார். இதற்காக முழு முயற்சியுடன் இவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பிரமாண்ட ஆலயத்தையும் எழுப்பினார். மக்களைக் காக்கும் இந்த சிவ பெருமானுக்கு மன்னன் பெயரான சிவந்தியப்பர் என்றே பெயர் சூட்டப்பட்டது.
கோவில் அமைப்பு : சிவன் சன்னதி நுழைவு வாயிலில் பைரவர், அதிகார நந்தி இருவரும் எதிரெதிரே உள்ளனர். பிரகாரத்தில் உள்ள ஆறுமுக நயினாருடன் உள்ள வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்பது சிறப்பம்சம். சிவன், தலையில் தலைப்பாகை கட்டியபடி காட்சி தருகிறார். அம்பாள் வழியடிமை கொண்டநாயகி தனியே தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். இத்தலத்தில் இவர் தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.
சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் வாழும் காலம் சிறப்பாக இருப்பதுடன், வாழ்க்கைக்குப்பிறகு பிறப்பற்ற முக்தி நிலையும் கிடைக்கும் என்பது ஐதீகம். நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். சிவனுக்கு வஸ்திரம் அணிவித்து, வில்வ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது சிறப்பு. புரட்டாசி மாதம்நடைபெறும் பிரம்மோற்சவம், ஐப்பசியில் நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.
காலை 6.00 மணி முதல் பகல் 9.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, அம்பாசமுத்திரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை