கைலாசபட்டி, கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தேனி மெயின் ரோட்டில் கைலாசபட்டியில் இருந்து கைலாசநாதர் கோயில் நுழைவு ஆர்ச் வழியாக 2 கி.மீ பயணித்தால் மலையடிவாரத்தை அடையலாம்.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : சிவகாமியம்மன்
தல தீர்த்தம் : சுனைநீர்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் :
இங்குள்ள மூலவர் இலிங்கத்திருமேனியராக உள்ளார். மேற்கு மலைத் தொடர்ச்சியிலுள்ள இக் கோயிலுக்கும், இமயமலை அருகிலுள்ள கைலாய மலைக்கும் தொடர்பு உண்டு. இக் கோவில் தென்கயிலாயம் என அழைக்கப்படுகிறது
தல வரலாறு : சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான வரலாற்று சிறப்புமிக்கது. அகத்திய முனிவர் இத்திருத்தலத்தை பற்றி கைலாசநாதர் கோயில் கண்டேன். அங்கு ஓர் சுனை கண்டேன் என்று பாடியுள்ளார். இம்மலைக்கு தியான மலை என்ற பெயரும் உண்டு. சட்டநாத மாமுனிவர் இம்மலைக்கு வந்து தியானம் செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. கைலாசநாதர் மலைக்கு திருவாச்சி போன்று மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது சிறப்பு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயிலில் பெரிய தேர் இழுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக மலையில் இரும்பு வடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன.
சட்டமுனி வடகயிலாயம் சென்று வணங்கும் பொழுது குளிர் தாங்க முடியவில்லை. என கூறி வேண்டிக்கொண்டதற்க்கு இண்ங்க சிவபெருமான் காட்சியளித்த திருத்தலம், காட்சியளித்த சிவனார் இனி வடகயிலாயம் வந்து வணங்க இயலாதவர்கள் எம்மை இங்கே காண்லாம், இங்கு எம்மை வணங்கினாலும் வடகயிலாயம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும் எனவும் அருளினார். திருவண்ணாமலைக்கு அடுத்து பெரிய அளவில் கிரிவலம் நடைபெறும் திருத்தலம் ஒரே திருத்தலத்தில் கயிலாயத்தையும், திருவண்ணாமலை திருத்தலத்தையும் தரிசித்து வணங்கிய புண்ணியம் கிடைக்கும், இங்கு வண்ங்கி வேண்டிக்கொள்வோருக்கு உடனடியாக பலன் கிடைக்கும்.
கோவில் அமைப்பு : இது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முந்தய கோவிலென்றும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டு முழுமை அடையாமல் நின்றுபோன இத் திருக்கோயிலை, புதியதாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் முன் மண்டபம், மூலகணபதி சப்தமாதர்கள், இச்சாசக்தி, கிரியாசக்தி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், திருத்தியமைக்கப்பட்ட மூலஸ்தானம் என புதிய வடிவில் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள வெள்ளை விநாயகர் கோயில், குடைவரைக் கோயிலாக அமையப்பெற்றது. பிள்ளையார்பட்டி விநாயகருக்கு அடுத்தபடியாக குடைவரை விநாயகராக இந்த வெள்ளை விநாயகர் சிறப்பு பெற்றவர். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 அடி உயர மலை மேல் அமைந்துள்ளது. இங்கு சப்தகன்னியர்கள் வந்து நீராடி கைலாசநாதரை வணங்குவதாக சொல்லப்படுகிறது. பிராமி - மாகேசுவரி - கவுமாரி - வைஷ்ணவி - வராகி - இந்திராணி - சாமுண்டி எனப்பெயர் பெறுவர். இவர்களுடன் வீரபத்திரை என்ற திருமேனியும்; விநாயகி என்ற திருமேனியும்; திருக்கோயில்களில் இருக்க வேண்டும் ஆனால் தெட்சினாமூர்த்தியும் ,விநாயகரும் உள்ளனர். அடிவாரத்தில் வெள்ளை விநாயகர், சந்திர லிங்கம் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை போன்று கார்த்திகை நாளில் தீபம் எற்றுதலும், கிரிவலமும் நடைபெற்று வருகிறது. கிரிவலம் மலையைச் சுற்றிலும் சுமார் 3 கி.மீ தூரம் உள்ளது. கிரிவலப் பாதையின் எண் திசைகளிலும், இந்திரலிங்கம், அக்னி லிங்கம், இமயலிங்கம், நிருருதிலிங்கம், வாயுலிங்கம், வருணலிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என்று அஷ்டதிக்கு லிங்கங்கள் உள்ளன. இந்த மலையைச் சுற்றிலும், ஓமச்செடிகளும், மூலிகைகளும் நிறைந்துள்ளதினால், உடல் நோய்கள் நீங்கி வருகின்றன.
இம்மலையில் பல சித்தர்கள் உலா வந்துள்ளனர். அவர்களில் சட்டமுனி சித்தர், மௌனகுருசாமி சித்தர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தக் கோயிலில் திரிசக்கர தரிசனம், சதுர்க்கர தரிசனம், ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், கனி அபிஷேகம், மகா சிராத்திரி, சோமவார பூஜை, கார்த்திகை பூஜைகள், பிரதோஷங்கள் போன்றவைகள் நடைபெறுகின்றன. தமிழ்ப் புத்தாண்டின் சித்திரை முதல் நாள், பெரிய குளம் தீர்த்தத் தொட்டியில் இருந்து 108 குடங்களில் கொண்டு வரும் நீரால் கைலாசநாதருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன. அன்றைய நாள் திருவிழாவை கிராமத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்கள் நோய்களை விலக்கி ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் கொண்டது இந்த மலை. அத்துடன் நவகிரகக் குன்றுகளையும் சுற்றி வந்த பலன் கிடைப்பதால், கிரக தோஷங்கள் நீங்கும்.
காலை 6.00 மணி முதல் பகல் 9.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை, திண்டுக்கல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை