அம்மன்குடி, கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் மற்றும் உப்பிலியப்பன் தலத்தின் வழியாக 15 கி.மீ தூரத்தில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : துர்கா பரமேஸ்வரி
தல தீர்த்தம் : பாப விமோசன தீர்த்தம்
தல சிறப்புகள் : இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு : மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள் தனது பாவத்தைத் தீர்க்க இடம் தேடி அலைந்தாள். துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது சூலத்தில் படிந்திருந்த இரத்தக்கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள். துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள். அங்கு அவளுக்கு பாப விமோசனம் ஏற்பட்டது. தீர்த்தத்திற்கு “பாப விமோசன தீர்த்தம்” என பெயர் ஏற்பட்டது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.
அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோயிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ராஜராஜசோழனின் படைத்தலைவர்களான கிருஷ்ணன், இராமன், பிரம்மராயன் ஆகியோர் இங்கு வாழ்ந்துள்ளனர். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.
இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் “தண்டை” என்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்குப் பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இங்கு யோகசரஸ்வதி சிலையும் உள்ளது. சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதற்குபதிலாக தவத்தில் ஆழ்ந்திருப்பது போல் சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் கி.பி.944ல் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது. இங்கு பார்வதிக்கு தனி சன்னதி உள்ளது. சிவனைத் தன்னுள் அடக்கிய துர்க்கை தலம். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். இத்தலத்தில் அம்மனே பிரதானமாக வழிபாடு செய்யப்படுகிறது. இந்த கோயில் பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜா சோஷனின் கிருஷ்ண பிரம்மராயண் கட்டியதாக நம்பப்படுகிறது. எனவே ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை