கதிராமங்கலம், காளஹஸ்தீசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த கோயில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இறைவன் : காளஹஸ்தீசுவரர்
இறைவி : ஞானாம்பிகை
தல சிறப்புகள் : ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் வந்து இறைவனை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு வரும்போது அங்கு செல்லும் பலன் கிடைப்பதாக நம்புகின்றனர். இவ்வூருக்குத் தென் காளஹஸ்தி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கோயிலில் சூரிய விநாயகர் அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலை சூரியன் உதித்ததும் இந்த விநாயகரின் மீது ஒளிபடுகிறது. இதனாலேயே இவர் சூரிய விநாயகர் எனப்பட்டார். பல தலங்களில் சூரிய ஒளி சிலைகள் மீது ஏதாவது குறிப்பிட்ட நாளில் மட்டுமே விழும். ஆனால் இந்த விநாயகரை சூரியன் தினமும் வழிபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைப்பு : மிருகண்டு முனிவர் மற்றும் இக்கோயிலைக் கட்டிய குலோத்துங்க சோழனின் சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. சிவமல்லிகாவனம் எனப்பெயர் பெற்ற இக்கோயிலில் சிவமல்லிகாவுக்கு தனி சிலை உள்ளது. அம்மன் சன்னதி தனியாக உள்ளது. இந்தக்கோயிலில் ஞானாம்பிகை அம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள். இந்த அம்பிகையின் சன்னதியில் குழந்தைகளுக்கென்றே விசேஷ விழிபாடு நடக்கிறது. படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள், அறிவு வளர்ச்சி பெற இங்கு பூஜை செய்கிறார்கள். இதற்காகப் பெற்றோர்கள் நேர்த்திக்கடன் போல, வெண்பொங்கல் வைக்கிறார்கள். வெண்பொங்கலை அம்பாள் சன்னதியில் வைத்து விட வேண்டும். அங்குள்ள அர்ச்சகர்கள் பொங்கலின் மீது வெண்டைக்காயை சிறய துண்டுகளாக வெட்டி வைத்து பூஜை செய்து, குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, குழந்தைகளுக்கு ஊட்டச் சொல்கிறார்கள். இந்த பிரசாதத்தை சாப்பிடும் குழந்தைகள் ஞானாம்பிகையின் அருளால் கல்விவளம் பெறுவார்கள் என்பதும் நம்பிக்கை. பல குழந்தைகள் இவ்வாறு நல்ல நிலைக்கு வந்ததாகவும் புத்திசாலித்தனம் மேலும் பெருகும் என்பதும் இப்பகுதிமக்களின் நம்பிக்கை. இயற்கை எழில் மிக்க இந்த ஊர் கம்பரால் கதிர்வேய்ந்தமங்கலம் என அழைக்கப்பட்டது. சிவமல்லிகாவனம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. இந்த கோயிலில் சிவமல்லிகாவுக்குத் தனியாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிவமல்லிகாவனம் என முன்பு அழைக்கப்பட்டு, தற்போது கதிராமங்கலம் என அழைக்கப்படும்.
பெருமாள் தங்கிச் சென்ற தலம் இது. எனவே இங்கு அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் தரிசித்தால் திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளை தரித்து வந்த பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மொட்டை கோபுரத்தை அடுத்து அகன்ற பிரசாரம். பீடம், நந்தி பகவானின் தனி சன்னிதியைத் தொடர்ந்து அலங்கார மண்டபம் உள்ளது. தென்பகுதியில் சமயக் குரவரான திருஞான சம்பந்தரின் திருமேனி உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். இடது புறம் விநாயகரும், வலது புறம் சுப்ரமணியரும் அருள்பாலிக்க, அடுத்துள்ள அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை காணப்படுகிறது.
கருவறையில் இறைவன் காளஹஸ்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவ கோட்டத்தின் தென்புறம் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் சூரிய பகவானுக்கு காட்சி தந்த சூரிய வரத விநாயகர் தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மற்றும் ஷேத்திர கணபதி, வள்ளி- தெய்வானை, சுப்ரமணியர் ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர், சுவாமிநாதர், தாரக பரமேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன.
அம்மனின் ஆலயம் வடக்குப் பிரகாரத்தில் உள்ளது. அன்னை ஞானாம்பிகை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள் பாலிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சூரியன், அகோரவீரபத்ரர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. ஆலயத்தின் தலவிருட்சம் வன்னிமரம். இந்த ஆலயம் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலயம் அருகே வனதுர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது. கவி சக்கரவர்த்தி கம்பரின் மனம் கவர்ந்த அன்னை இவள். ஒரு சமயம் கம்பரின் குடிசை சீர்கெட்டு போன போது, இந்த அன்னை கம்பருக்கு கூரை வேய்ந்து கொடுத்தாளாம். எனவே இந்த அன்னையை கூரை வேய்ந்த நாயகி என்றும் அழைப்பதுண்டு. அன்னை ஞானாம்பிகையை தரிசிக்க வருபவர்கள், வனதுர்க்கையையும் தரிசித்துவிட்டு வரலாம்.
அன்னை ஞானாம்பிகை ஞானம் தரக் கூடியவள். அன்னைக்கு வெண்டைக்காய் மாலை அணிவித்து, பொங்கல் வைத்து படையல் செய்து, அர்ச்சனை செய்தால் குழந்தை பேறு நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். சோமவாரம், கார்த்திகை, நவராத்திரி, மார்கழி 30 நாட்களும், திருவாதிரை நாட்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. கணவன்-மனைவியின் ஒற்றுமையை காப்பதிலும் படிக்கும் மாணவர்களுக்கு ஞானம் தருவதிலும் அன்னை ஞானாம்பிகைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.
காலை 8.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை, கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை