தாராசுரம், ஐராவதேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது.
இறைவன் : ஐராவதேஸ்வரர்
இறைவி : தெய்வநாயகி
தல தீர்த்தம் : எமதீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இரண்டாம் ராஜராஜன் எடுப்பித்த காரணத்தால் ராசராசேச்சுரம் என்றும் தாரன் என்பவன் வழிபட்டதால் தாராசுரம் என்றும், ஐராவதம் என்னும் வெள்ளை யானை வழிபட்டு பேறு பெற்ற தலமாதலால் ஐராவதேச்சுரம் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. நந்தியின் அருகே அமையப் பெற்று இருக்கும் பலி பீடத்தின் படிகள், இசை ஒலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெவ்வேறு பகுதிகளில் தட்டும்போது "சரிகமபதநி" என்ற சப்த ஸ்வரங்களும் ஒலிக்கின்றன.
தல வரலாறு : முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலும் பெற்றுள்ளது. 1987-ல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2004-ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும், ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன என்பது மேலும் சிறப்பு ஆகும்.
இந்திரனின் பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச முனிவரிடம் அலட்சியமாக நடந்து கொண்டது. துர்வாச மாமுனிவரோ கோபத்துக்கும், சாபத்துக்கும் பெயர் பெற்றவர். அவர் ஐராவதத்தின் அகங்காரத்தை அறிந்து, சாபம் கொடுத்து விட்டார். சாபம்‘ பெற்ற ஐராவதம் தனது பெருமையை இழந்து, நிறம் இழந்து காட்டு யானையாக அலைய வேண்டி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானை வழிபட்டு இறைவன் அருளாலும், கருணையினாலும் பழைய உருவை எய்தி, தனது அகங்காரத்தை விட்டொழித்தது. இவ்வாறு ஐராவதம் பேறு பெறுவதற்கு உதவிய இறைவன், ஐராவதேஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.
இதேபோல் எமன், முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தின் சிறப்பை உணர்ந்தான். உடன் அதில் இறங்கி நீராடினான். வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டதாக வரலாறு கூறுகிறது. கோயிலின் கட்டுமானமும், கம்பீரமும் இன்னமும் இரண்டாம் ராஜராஜ சோழச் சக்கரவர்த்தியின் ராஜகலையை பிரதிபலிக்கிறது. தாராசுரம் கோயிலின் உள்ளே நுழைந்ததும் ராஜ கம்பீரன் திருமண்டபம் உள்ளது.
தாரன் எனும் அரசன் தனது 100 மனைவிகளுடன் வணங்கி சிறப்புற வாழ்ந்த திருத்தலம். ஐராவதம் எனும் வெண்யானை துர்வாசர் சாபத்தால் இழந்து விட்ட வெண்மையை இச்சிவனை வணங்கி மீளப் பெற்றதிருத்தலம். திருக்கோவிலின் முன்பு மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இங்குள்ள இறைவனை இந்திரனின் ஐராவதமும், எமதர்ம ராஜாவும் வழிபட்டு உள்ளதாக புராணம் கூறுகிறது. இங்குள்ள திருக்குளத்தின் பெயர் எமதீர்த்தமாகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலின் சில பகுதிகள் எழுந்தன. ஐராவதேஸ்வரர் கோவில் பிற்காலச் சோழர் காலச் சிற்பக் கலைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
கோவில் அமைப்பு : இக்கோவில் முழுவதும் கல்லாலானது. இரண்டாம் இராஜராஜன் சாளுக்கியரின் கல்யாணிநகர் மீது படை எடுத்து வெற்றி பெற்றார். தமது பரிசாக அங்கிருந்து சாளுக்கிய துவார பாலகர் சிலையைத் தாராசுரம் கோவிலுக்குக் கொண்டு வந்தார். துவார பாலர் சிற்பமும் இதர சில சிற்பங்களும் தற்பொழுது தஞ்சாவூர் சரஸ்வதி மாளிகையில் உள்ள கலைக் கூடத்தில் உள்ளன. ஐராவதேஸ்வரர் கோவிலில் காணப்படும் சில சிற்பங்கள் கல்யாணிச் சாளுக்கியர் கலையின் அம்சங்களைக் கொண்டுள்ளன.
கோனார்க் பாணி வடிவமைப்பு ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும். ஐராவதேஸ்வரர் கோயில் கோனார்க் கோயிலை ஒத்துள்ளது. ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்று வரை இந்தியக் கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ராஜகம்பீர மண்டபத்தின் தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. அதோடு நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டி மீட்டர் அளவிலேயே இங்கு மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. யானையா, காளையா என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒரு அழகியச் சிற்பத்தை அந்தக் காலத்திலேயே வடிவமைத்து இருக்கிறார்கள் கலை வல்லுனர்கள். 63 நாயன்மார்கள் சிலையும் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளன.
இராமாயண காட்சி வாலியும், சுக்ரீவனும் போர் புரிய, மறைந்து இருந்து சுக்ரீவன் மீது அம்பு எய்தும் ராமர், கையில் வீணை இல்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், மூன்று முகங்கள் மற்றும் எட்டுக் கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண்களில் அதிஉன்னதமான, கலை நயமிக்க சிற்பங்கள் உள்ளது. இம்மண்டபம் குதிரைகள் பூட்டிய சக்கரமுள்ள தேர் போன்ற அமைப்பைக் கொண்டதாகும். இம்மண்டபத்தில் பதினாறு கல் தூண்கள் இருக்கின்றன. அனைத்தும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மிக அழகாகத் திகழ்கின்றன. இக்கோயிலில் தாராசுரம் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், அகத்தியர், சரபமூர்த்தி, நரசிங்கமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேசுவரர், கண்ணகி, நர்த்தன விநாயகர் சுவாமி சன்னதிகள் உள்ளன. பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பங்குனி பெருவிழா விமர்சையாக நடைபெறும். ஐராவதேஸ்வரரை வணங்கினால் சாபம் விமோசனம் கிடைக்கும், சகல ஐஸ்வர்யங்களும் செழிக்கும்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை