நல்லிச்சேரி, ஜம்புநாதர் சுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் சாலையில் 12 கி.மி தூரத்தில் நல்லிச்சேரி கிராமம் உள்ளது.
இறைவன் : ஜம்புநாதர் சுவாமி
இறைவி : அகிலாண்டேஸ்வரி, அலங்காரவல்லி
தல விருட்சம் : நாவல்
தல சிறப்புகள் : சப்த மங்கை தலங்களில் வைஷ்ணவி இறைவனை பூசித்து அருள் பெற்ற தலம், அம்பிகை மடந்தை பருவ பெண்ணாக காட்சி கொடுத்த தலம். இறைவன் இங்கு திருவடி கழல் காட்டியருளிய தலம். மேலும் நந்தி பூசித்து பஞ்சாட்சர உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு நமசிவாய மந்திரம் உச்சரித்தால் கோடி மடங்கு பலன் பெறலாம். நந்தி வணங்கியதால் நந்திசேரி எனப்பட்டு பின்னர் நல்லிசேரி ஆனது. நந்தியும் சப்தமங்கையும் பூசித்ததால் நந்திமங்கை எனவும் வழங்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : சிறிய கிராமாக இருந்தாலும், சிவாலயம், வைணவஆலயம், விநாயகர் ஆலயம், மாரியம்மன் ஆலயங்களும் உள்ளன. அழகிய பசுமையான வயல்கள், அதனை ஊடறுத்து செல்லும் வெண் கோடுகளாய் வாய்க்கால்கள், ஊரில் நுழையும்போதே பெரும் இலுப்பை, வேம்பு, அரசு மரங்களின் பக்கத்துணையுடன் நீண்ட செவ்வக வடிவில் மேற்கு நோக்கிய சிவாலயம். இறைவன் மேற்கு நோக்கி அருள்புரியும் தலமாதலால் இக் கோயில் சிறப்பு மென்மேலும் அதிகரிக்கிறது. இறைவனின் எதிரில் ஓர் வாயில் இருந்தாலும் பிரதான வாயில், சாலை இணைப்பு கொண்ட தென்புறமே ஆகும். சுதை வேலைப்பாடுகள் கொண்ட தென்புறம் வழி உள்ளே நுழைந்ததும் அலங்காரவல்லியின் தரிசனம் கிடைக்கும். இடது புறம் இரட்டை விநாயகர் சன்னதி உள்ளது ஒருவர் நிக்கிரக விநாயகர், மற்றொருவர் அனுக்கிரக விநாயகர். ஒருவர் துன்பம் தருபவராகவும், மற்றொருவர் அதனின்று காத்து அருள்பவராகவும் உள்ளது இக்கோயிலில் மற்றொரு சிறப்பு.
இறைவன் ஜம்புநாதர் சன்னதியின் வாயிலில் சுதை துவாரபாலகர் இருவர் உள்ளனர், வாயில் அறுகால் பித்தளை கவசம் போடப்பட்டு அழகுடன் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன், துர்க்கை உள்ளனர். வடபுறத்தில் கஜலட்சுமி சிற்றாலயம் உள்ளது. கிழக்கில் நவகிரகம், பைரவர் உள்ளனர். துர்க்கை எட்டு கரங்களுடன் அழகாக காட்சிதருகிறார். வடபுறம் வில்வமரத்தடியில் சில லிங்க பாணங்கள் உள்ளன. நடராஜர் சிலை பாதுகாப்பகத்திற்க்கு எடுத்து செல்லப்பட்டுவிட்டதால் தென்புற அறை சிறிய நடராஜர் படத்துடன் காட்சியளிக்கிறது.
பங்குனி மாதம் சப்தஸ்தானம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை