கும்பகோணம், ஆதிகம்பட்ட விஸ்வநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - தஞ்சை சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
இறைவன் : ஆதிகம்பட்ட விஸ்வநாதர் சுவாமி
இறைவி : நிதியம்மை/ஆனந்தவல்லி
தல தீர்த்தம் : பாலாவி தீர்த்தம், தூமகேது தீர்த்தம்
தல விருட்சம் : மல்லிகை
தல சிறப்புகள் : சோழர்கள் நாணயம் செய்த இடம் கம்பட்டம், எனவே இங்குள்ள சுவாமி ஆதி கம்பட்ட விசுவநாதர் என்ற பெயர் பெற்றார். மூர்க்கநாயனார் சூதாடிய இடம். புராதனமானதும் புராணச் சிறப்புகள் நிறைந்ததுமான இந்தத் திருக்கோயில், தூமகேது முனிவரால் வழிபடப்பட்டது.
தல வரலாறு : முன்பொரு காலத்தில் இத்தலம் இருந்த இடம் காடாக இருந்தது. இதற்கு மாலதிவனம் என்று பெயர். அப்போது உதயகிரி என்ற ஊரில் தூமகேது என்பவர் சிவனிடம் பக்தி கொண்டு முனிவராகி வாழ்ந்து வந்தார். ஒருநாள் முக்திக்குரிய தலம் எது என பெரியோரிடம் விசாரிக்க அவர்கள் கும்பகோணம் எனக் கூறினார். உடனே சீடருடன் கும்பகோணம் வந்தடைந்தார் தூமகேது. மகாமக குளத்தில் நீராடி, ஆதி கும்பேஸ்வரரை வழிப்பட்டு பின் தென்மேற்கில் சிறிது தூரம் செல்ல அங்கு மாலதிவனம் இருக்கக் கண்டார். இவ்வனத்தின் உள்ளே தூமகேது செல்ல, அங்கே ஒரு சிவலிங்கத்தைக் கண்டார். ஊள்ளம் உருக கண்ணீர் மல்கி பூஜை செய்ய எண்ணினார். நீராட இடம் தேட வருண தீர்த்தம் இருந்தது. இவ்வாறு பல நாள் செல்ல, ஒரு நாள் ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவபெருமான். முனிவரான தூமகேது 'ஐயனே! உலகை காக்கும் ஈசனே' எனக்கெது வேண்டும். நீங்கள் சிவலிங்கமாக இவ்விடத்தில் அமர்ந்திருந்த காரணத்தால் விசுவநாதர் எனப் பெயர் கொண்டு வணங்குவோர்கெல்லாம் ஆனந்தம் தரும் அம்மை ஆனந்தவல்லி என்றும் பெயர் கொள்ள வேண்டும். நான் புதுப்பித்த வருண தீர்த்தம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும் என வேண்ட அவ்வாறே ஆகும் என்ற அருளினார் இறைவன். கம்பட்டம் என்ற சொல்லுக்கு சோழர்கள் காலத்தில் தங்க சாலை என்று அர்த்தம். சோழர்கள் தஞ்சையை தலைநகராக கொண்டு ஆண்டபோது இங்கு தங்க நாணயம் அச்சடித்தனர். எனவே தங்க சாலையில் அதாவது கம்பட்டத்தில் எழுந்தருளியுள்ள விசுவநாதர் கம்பட்ட விசுவநாதர் எனப் பெயர் பெற்றார்.
கோவில் அமைப்பு : இந்தக் கோயிலில் மேற்கு நோக்கிய சூரியன் தனிச் சந்நிதி, வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, நவக்கிரகங்கள், சேக்கிழார், நால்வர் பெருமக்கள், மங்கையர்க்கரசியார் ஆகியோரையும் தரிசிக்கலாம். இங்கே சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு, ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட, திருமணத் தடை நீங்கும்.
அமாவாசை முதலான புண்ணிய தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்வாமி- அம்பாளை வழிபட்டு, பிள்ளையார் சுழி போட்டுத் தங்களின் புதுக்கணக்கைத் தொடங்கினால் அந்த வருடம் அமோக லாபம்தான் என்பது அவர்களின் நம்பிக்கை. சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து, ஆனந்த நிதியாம்பிகையை மனதார வழிபட்டு, தங்களின் வாழ்வு செழிக்க வரம் வாங்கிச் செல்கிறார்கள். இங்கே, பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பங்குனி உற்ஸவம். குதிரை வாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், பூத வாகனம், யாளி வாகனம், பாம்பு வாகனம் என ஒவ்வொரு நாளும் விதவிதமான வாகனங்களில் வீதியுலா வரும் ஸ்வாமியைத் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சி. குறிப்பாக 5-ஆம் நாளன்று ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்தை வலம் வருவதும், அப்போது நடைபெறும் பூஜையும் விசேஷம். அதாவது, ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஸ்ரீஆதிகும்பேஸ்வரரை பூஜிப்பதை, ஈஸ்வரன் தன்னைத்தானே பூஜிக்கும் சிறப்பு நிகழ்வாகப் போற்றுவர். 7-ஆம் நாளன்று ஸ்வாமிக்குத் திருக்கல்யாணம். 8-ஆம் நாளன்று முத்துப்பல்லக்கு இந்த வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசிக்க, கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு