இரணியூர், ஆட்கொண்டநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தஞ்சாவூர் சாலையில் கீழச்சீவல்பட்டி. இங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : ஆட்கொண்டநாதர்
இறைவி : சிவபுரந்தேவி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று. இத்தலம் அஷ்டபைரவ தலங்களில் ஒன்று. இங்கு குபேரன், வாயு பகவான் இருவரும் சுவாமியை வழிபட்டதாக ஐதீகம். இவர்கள் இருவரும் குதிரையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். நவக்கிரக சன்னதி, கஜலட்சுமி சன்னதிகளும் உண்டு. இரண்யனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், "இரணியூர்' என்று அழைக்கப்படுகிறது.
தல வரலாறு : திருமால் இரணியன் எனும் அசுரனை அழிக்க நரசிம்மர் அவதாரத்தினை எடுத்தார். அந்த அவதாரத்தில் மனித உடலும், சிங்க தலையையும் கொண்டிருந்தார். இரணியனை கூரிய நகங்களால் கிழித்து அழித்தார். மிகவும் உக்கிரமாக இருந்த காரணத்தால் பிரகலநாதன் அவரை பாடல்கள் பாடி குளிர்வித்தான். இரணியனைக் கொன்ற பாவத்திற்காக இத்தலத்தில் சிவபெருமானை நரசிம்மர் வழிபட்டார். திருமாலின் உக்கிரம் கண்டு அம்பிகையும் உக்கிரமடைந்தார். அதனால் நவகாளியாக வெளிபட்டு சிவனை வணங்கினார்.[1] சிவனை வழிபட்டு சாந்தம் அடைந்தமையால் சிவபுரந்த தேவி என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவிலேயே முதன்முதலில் மகாத்மா காந்தி அவர்களுக்கு சிற்பம் செதுக்கப்பட்ட இடம் இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி திருக்கோயில்.
நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஒன்பது கோவில்களுள் ஒன்றான இரணியூர் கோவிலில் 1944ஆம் ஆண்டு பிரகார கல்தடித்தூண் திருப்பணி நடந்த போது பாரத மாதா, மகாத்மா காந்தி, இராட்டை சிற்பங்கள் கோவில் பிரகார விதானத்தில் எழுவங்கோட்டை சிற்பிகளை கொண்டு நகரத்தாரால் அமைக்கப்பெற்றது.
கோவில் அமைப்பு : ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம் உள்ளது. மேலும் இங்கு ராஜகோபுர சுவற்றில் குறிப்பிடும் வகையில் குபேரமூலையில் ஐயனார் போல் தோற்றத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்திருக்கும் குபேரன் சிற்பம் இரண்ய மல்யுத்தம், இரண்ய சம்ஹாரம், அஷ்டதிக்பாலகர்கள் , கணபதிக்கு திருமுலைப்பால் புகட்டும் உமையாளுடன் மகேசுவர்ர், இராட்டையில் நூல் நூற்கும் பெண்கள் , மகாத்மா காந்தி , பாரதமாதா மற்றும் எங்கு நோக்கினும் அழகான பூக்கள் பறவைகள் விலங்குகள். இத்தோடு ஆலயத்தின் விதானப் பகுதிகள் முழுக்க முழுக்க கண்கவர் பச்சிலைகள் கொண்டு தீட்டப்பட்ட புராண இதிகாச காட்சிகள் மற்றும் பூக்கள் என்று கண்ணுக்கு விருந்து அளிக்கும்.
அதிகமான சிற்பங்கள் அமைந்திருப்பதால் இச்சிவாலயத்தினை சிற்பக் கோயில் என்றும் அழைக்கின்றார்கள். ஆலையத் தூண்களில் அஷ்டலட்சுமி, வல்லப கணபதி, வீரபத்திரர், முப்புரம் எரித்தவர், நவதுர்க்கை, இரணிய சம்ஹாரம் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இருக்கிறது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணமும் நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அம்பாள் சிவபுரந்தேவி இரண்டே கரங்களுடன், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர், சிவனை வழிபட்டபோது உடனிருந்த அம்பிகை, அண்ணனின் தோற்றத்தைக் கண்டு தானும் உக்கிரம் அடைந்தாள். இவள் உக்கிரமானபோது உருவான திகள், இவளது சன்னதி எதிரிலுள்ள மண்டப தூண்களில் நவ திகளாக காட்சி தருவதாகச் சொல்கின்றனர். அஷ்டலட்சுமி மண்டபம் ஒன்றும் இருக்கிறது. அம்பாள் சன்னதி அருகில் பைரவர் சன்னதி இருக்கிறது. இவர் இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.
கி.பி 713 ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது. பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைச் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை கீறி வழுந்தோர் வேகம் மாற இரணியூர் ஈசனை வணங்கினான். நரசிம்மர் குளிர்ச்சி பொருந்திய நீலமேக பெருமாளாக இத்திருத்தலத்தின் அருகில் கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் தூண்களில் உள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் மிக்க சிற்பங்கள் காண்பவரை வியக்க வைக்கிறது. இக்கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் விமானம் சுவாமி அம்சம் என்பது ஐதீகம். மேலும் சுவாமி சன்னதி கோஷ்ட மூர்த்திகள் அனைவரும் ஐம்பொன் திருமேனிகளாக அமைக்கப்பட்டு உள்ளது என்பது ஒரு தனித்துவம்..
நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. கோவில் முன் மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சாமியையும் விமானத்தையும் தரிசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பம்சம். நரசிம்மர் இரணியனை சம்ஹாரம் செய்த பின் ஆட்கொண்டநாதர் சரபேசராக அவர் உக்கிரம் தணித்த கோயில். அதனால் நரசிம்மரை கண்ட சிவபுரந்தேவியும் உக்கிரமாகக் காட்சி அளிப்பதாகக் கூறுகிறார்கள். இவள் உக்கிரமான போது இவளிடம் இருந்து நவசக்திகள் தோன்றின அவையே நவ துர்க்கைகளாக அம்பாளின் முன் உள்ள மண்டபத்தில் அருள் பாலிக்கிறார்கள். இது துர்க்கை மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் அம்பிகை உக்கிரமாக அருள்வதாக சொல்லப்படுகின்றது.
இங்குள்ள தூர்க்கை மண்டபத்தில் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நவதூர்க்கை சிற்பவல்லுனர்களால் போற்றும் பொக்கிஷமாய் திகழ்கிறது. மேலும் இங்கு ஆலயத்தின் உட்புறம் இருக்கும் தெய்வங்கள் உக்ரமான அமைப்புடனும் ஆலயத்தின் வெளியில் உள்ள முன் மண்டபத்தில் கருணையே வடிவாய் அஷ்ட லட்சுமிகள் அழகுற காட்சிதருகின்றனர். பிற சிவாலயங்களை விட மிக முக்கியமான ஒன்று இத்திருத்தலத்தில் நவக்கிரக சன்னதியின் அருகில் மேலே குபேரர் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தில் காட்சியளிக்கிறார்.
கார்த்திகை மாதத்தில் 6 நாட்கள் சம்பகசூர சஷ்டி விழா நடக்கிறது. அப்போது ஜவ்வாது, புனுகு ஆகிய வாசனைப்பொருட்கள், வாசனை மலர் மாலைகள் அணிவித்து, மார்பில் குளிர்ச்சிக்காக சந்தனம் சாத்தி அலங்காரம் செய்கின்றனர்.இவ்விழாவின் ஆறு நாட்களும் உற்சவமூர்த்தி பைரவர் மூலஸ்தானத்திற்குள் எழுந்தருளி பின்பு, பல்லக்கில் புறப்பாடாகிறார். பிரகாரத்தில் உள்ள விநாயகர் "வித்தக விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். மாணவர்கள் இவரிடம் கல்வி சிறக்க வேண்டிக்கொள்கிறார்கள். பணி, வியாபாரம், தொழில் சிறக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். கோப குணம் உள்ளவர்கள் இங்கு சிவன், பைரவரை வழிபட கோபம் குறையும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, திருவாதிரை, கார்த்திகை மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரைக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை