வைரவன்பட்டி,வைரவன் சுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவிலில் இருந்து 2 கி.மீ தூரத்திலும், திருப்பத்தூர் யோகபைரவர் அருளும் திருத்தளிநாதர் திருக்கோவிலில் இருந்து 6 கி.மீ தூரத்திலும் வைரவன்பட்டி அமைந்துள்ளது.
இறைவன் : வளரொளிநாதர், வைரவன் சுவாமி
இறைவி : வடிவுடையம்பாள்
தல தீர்த்தம் : வைரவர் தீர்த்தம்
தல விருட்சம் : ஏர், அளிஞ்சி
தல சிறப்புகள் : இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத் தூணுடன் அமைந்துள்ளது. நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும். இத்தல இறைவன் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஜோதி வடிவில் அருளியதால் ‘வளரொளி நாதர்’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு சுவாமி சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் நடுவில், தெற்கு நோக்கியவாறு பைரவர் எழுந்தருளி உள்ளார். சூலம், நாகம், கபாலம், டமருகம் தாங்கி, பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் பைரவர் வீற்றிருக்கிறார்.
தல வரலாறு : பழம்பெருமை வாய்ந்த இந்தத் தலம் வீரபாண்டியபுரம் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இத்தலத்திற்கு மேலும் வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன்மூதூர், வயிரவநகர், வயிரவமாபுரம் எனவும் பல்வேறு பெயர்கள் உள்ளன. வைரவன் கோயில் பைரவர், பிரம்மனின் கபாலத்தையும், திருமாலின் தோலையே சட்டையாகவும் அணிந்து காணப்படுவதாக வைரவன்கோவில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார். ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.
முன்னொரு காலத்தில், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்கள் இழைத்த பெருங்கொடுமை தாங்காத தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, அவர் அந்தணர் கோலத்தில் இவர்கள் முன் தோன்றி, கோலவனம், அழிஞ்சில் வனம், புராதன வனம் என பெயர் கொண்ட இடத்திற்குச் சென்று உங்களது துயரங்களை போக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினார். அவ்வாறே தேவர்கள் தன் தலைவனுடன் அந்தணர் சொன்ன இடத்திற்கு வந்த போது, அங்கே வளரொளிநாதரும், வடிவுடையம்பாளும் கோயில் கொண்டிருப்பதைக் கண்டனர். அப்போதுதான் தேவர்களுக்கு, முன்பு திருமாலும், பிரம்மனும் தானே பிரம்மம் என்ற போட்டி வந்த போது ஒளி வடிவமாக சிவன் தோன்றி, பின்பு மலையாகக் குளிர்ந்ததும், அவருக்கே வளரொளிநாதர் என்ற பெயர் உருவானதும் நினைவில் வந்தது. அத்தகைய வளரொளிநாதரே அகந்தை அடங்கிய தேவர்களுக்காக பைரவர் வடிவம் கொண்டார்.
இத்தலம் அழிஞ்சிக்காடாய் இருந்ததாகவே கூறப்படுகிறது. வைரவன்கோயிலில் இரண்டு அழிஞ்சி மரங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இரண்டு விதமான அழிஞ்சி மரங்கள் உள்ளன. ஏறழிஞ்சி மரம், இறங்கழிஞ்சி மரம் என்பன. இக்கோயில் ஏறழிஞ்சி மரம் அதிசயத்தின் ஊற்றாகவே அமைந்துள்ளது. இந்த அழிஞ்சி மரத்து விதைகள் கீழே விழுவதில்லை. அந்த மரத்து காய் கனிகளில் இருந்து வெளிவரும் விதைகள் கீழே விழாமல் நேராகச் சென்று மரப் பட்டைகளில் ஒட்டிக் கொள்கின்றன. அந்த மரப் பட்டைகளில் முத்துக்கள் ஒட்டியதைப் போல இந்தக் காட்சியைக் காணும் போது, உடம்பே ஒரு நொடி சிலிர்த்து எழுகிறது. அந்த பைரவரையும், இந்த அழிஞ்சி மரத்தையும் காணவே எல்லோரும் ஒரு முறை இந்த வைரவன்பட்டி திருக்கோயிலுக்குச் சென்று வர வேண்டும்.
கோயில் அமைப்பு : இங்கு கருவறை கோஷ்டத்தில் இராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி இராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை. அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய், எதிரிபயம் நீங்கும் என்பது நம்பிக்கை. அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் தோஷங்கள் தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாகக் கட்டப்பட்டுள்ளது. தெட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனி மண்டபத்தில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக இது அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், பலி பீடம், கொடி மரம், அம்மன் சன்னதி, பள்ளியறை, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்று பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம், பரிவார சன்னதிகள், யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வயிரவர் பீடம், வயிரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.
இக்கோயில் கணபதி, முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி அருகே தல விருட்சமான அழிஞ்சி மரம் கல்லால் செய்து வைக்கப் பட்டுள்ளது. உள் பிரகாரத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆறுமுகப் பெருமான், வள்ளி, தெய்வயானை, சரஸ்வதி, ஆதி வடிவுடையம்மன், போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. நவக்ரஹ மேடையும் அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தின் எதிரே கோயில் ஊருணி நான்கு படித் துறைகளுடன் மிக அழகாக அமைந்துள்ளது.
வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கருவறை மூலவர் பழங்காலத்தில் அழிஞ்சி மரத்தின் அடியில் அமைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள். இத்திருகோயில் மண்டபங்கள், மற்றும் கோயில் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ள, வெள்ளை கற்கள், வயிரவன் பட்டி, திருமெய்யம், தென்கரை, குன்றக்குடி போன்ற ஊர்களில் உள்ள மலைகளில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. இக்கோயில் மஹா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்ணையும் மனதையும் கவர்கின்றது. மகாமண்டபத்தூண்கள் முழுவதும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வைரவன் கோயிலில் சிறியதும், பெரியதுமாக இரண்டு தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகைப் பகுதியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி வகையைச் சேர்ந்தது. ஆலமரமும், முனிவர்களும் இல்லாமல் தனித்து காணப் படுகிறது. மற்றொரு தட்சிணாமூர்த்தி அளவில் பெரியதாகவும், கருவறை வெளிச் சுவரின் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது. கருமை நிறக் கல்லில் ஆன மரத்தின்கீழே ஆசனத்தில் அமர்ந்து, முனிவர்களுக்கு தத்துவம் போதிக்கும் வண்ணம் உள்ளது. இவரைச் சுற்றி இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிவன் கோயிலில் இராமரது சிற்பமும் ஹனுமனது சிற்பமும் அருகருகில் அமைக்கப்பட்டுள்ளது எங்கும் காணாத அதிசயம். இங்கு கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ஸ்ரீ ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது அதிசயக் கோலம். இராமரது சிலையை விட ஹனுமனது சிலை சற்று பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஹனுமான் இலங்கைக்குச் சென்று சீதா தேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியைக் கொண்டு வந்து ஸ்ரீ ராமரிடம் கொண்டு சேர்த்தார். அந்த நல்ல செய்தி கேட்டு மகிழ்ந்த இராமர் நன்றிப் பெருக்குடன் ஹனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அதிசயக் காட்சி. வேறெங்கும் இல்லாத காட்சி.
கோவிலின் உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் பக்தியின் வெளிப்பாட்டிற்கு மகோன்னதமான உதாரணமாய், பக்தியின் உச்சத்தை விளக்கும், சாதாரண மனிதன் சிவ பக்தியில் உயர்ந்து நாயன்மார் அளவிற்கு உயர்ந்து கண்ணப்ப நாயனாராய் மாறலாம் என்பதை உணர்த்திய கண்ணப்பனின் சிற்பம் சிவபிரானுடன். கானகத்தின் தலைவன் கண்ணப்பன் காளஹஸ்திநாதரின் கண்ணில் வழியும் இரத்தத்தைக் கண்டு பொறுக்காமல் தன் கண்ணை எடுத்து சிவபெருமானுக்கு வைக்கும் நோக்கோடு தனது கண்ணை அம்பால் அகற்றும் வேளையில் அதனை தடுத்தாட் கொள்ளும் சிற்ப வடிவம் கண் கொள்ளக் காட்சி. எதையும் எதிர்பாராத அன்பின் அடையாளம் கண்ணப்ப நாயனார் கடவுளுக்குச் சமமானவர். திருக்கோயிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. எல்லாமே இயற்கையாகக் கிடைக்கும் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ளது. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்சபாண்டவர்களின் உருவங்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய தெய்வங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
முருகப்பெருமான் ஆலயங்களில், கந்தசஷ்டி அன்று அம்பாளிடம் சிவசக்தி வேல் வாங்கி, கந்தபெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் பெருவிழா நடைபெறும். அதுபோல ஆண்டுதோறும் கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியில், சூரபதுமனின் படைத் தளபதிகளான மகாதமிட்டிரன், வக்கிரதமிட்டிரன், கும்பாண்டார் முதலியவர்களை, அம்பாளிடம் சூலம் வாங்கி பைரவர் சம்ஹாரம் செய்யும் பெருவிழா ஒன்று இருக்கிறது. வைரவன்பட்டி திருத்தலத்தில் ‘சம்ஹார சஷ்டி’ என்ற பெயரில் இந்த விழா நடக்கிறது. பைரவருக்கு துணையாக விநாயகரும் போரில் ஈடுபட்டதால், வைரவன்பட்டிக்கு அருகில் பிள்ளையார்பட்டி என்ற ஊரும், கோவிலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பைரவரின் அசுர சம்ஹாரம் முருகப்பெருமான் நிகழ்த்திய சூரசம்ஹாரத்திற்கும் முன்பே நிகழ்ந்த சம்ணஹாரமாதலால் இதனை ‘சம்ஹார சஷ்டி' என்று அழைக்கின்றனர். பைரவர் இத்தலத்தில் அசுரர்களை அழித்த நாள் கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியாகும். இதனால் கார்த்திகை மாதம் இத்தலத்தில் பைரவருக்கு ‘சம்பக சஷ்டி' எனும் சம்ஹார சஷ்டி விழா நடைபெறுகிறது. இந்த சம்ஹார சஷ்டி ஐதீக விழாவில் முதலில் விநாயகரும், நந்தியும், துர்க்கையும், இறுதியாக பைரவரும் போருக்கு எழுந்தருளுகின்றனர். பைரவர் அம்பாளிடம் சூலம் பெறுதல், அசுரனை அழித்தல் முதலியன சிறப்பாக நடத்திக் காண்பிக்கப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரைக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை