மானாமதுரை, சோமேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கைக்கு தெற்கே 18 கி.மீ தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 49 கி.மீ தொலைவிலும், பரமக்குடிக்கு மேற்கே 35 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இறைவன் : சோமேசுவரர்
இறைவி : ஆனந்தவல்லி
தல தீர்த்தம் : மதுகூபம், சந்திர புஷ்கரணி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இங்கு சிவன் வெள்ளை சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சந்திரன் தனிச்சன்னதியில் தனது மனைவியரில் இருவருடன் ஒரே கல்லில் காட்சி தரும் அற்புதத்தலம். சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது தமது அடியார் மாணிக்கவாசகருக்காக இத்தலத்தில்தான் நரிகளைப் பரிகளாக மாற்றிட கயிறு மாற்றிக்கொடுத்தார்.
தல வரலாறு : முனிவர்கள் தவம் செய்ய, சிறந்த இடத்தை தேடி கொண்டு வந்தார்கள். எந்த இடமும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. இப்படியே தேடித்தேடி சென்றதில், மிகப் பெரிய வில்வ மரங்கள் படர்ந்து விரிந்து இருந்தப் பகுதிக்கு வந்தார்கள். வில்வ இலையின் நறுமணம் காற்றில் தென்றலாய் வீசியது. சிவதவம் செய்ய சிறந்த இடமென எண்ணி, மகிழ்ந்து இந்த இடத்தில் தவம் செய்ய ஆரம்பித்தார்கள். பல வருடங்கள் அந்த இடத்தில் முனிவர்கள் தவம் செய்ததால் ஈசன் மகிழ்ந்து, பாதாளத்திலிருந்து இலிங்க வடிவில் வெளிப்பட்டார். பாதாளத்தை பிளந்து பூலோகத்தில் சிவலிங்கம் வந்திருப்பதை கண்ட முனிவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அந்த இலிங்கத்தை வைத்து பூஜிக்க தொடங்கினார்கள்.
இராவணனிடம் இருந்து எப்படி சீதையை மீட்பது என்று வழி தெரியாமல் இராமன் சிந்தித்து கொண்டு இருந்தார். இதற்கு இராவணனை பற்றி நன்கு அறிந்த அகத்தியரிடம் ஆலோசனை கேட்டார். “குளவி தன் குட்டி குளவியின் உணவுக்கு, வெட்டுகிளியின் சிறகுகளை நீக்கி, உயிரோடு அதை தன் குட்டிகளுக்கு கொடுக்கும். இறந்த வெட்டுகிளியைச் சாப்பிட்டால் அதன் உடலில் உள்ள விஷதன்மை தன் குட்டிகளை பாதிக்கும் என்று குளவிக்கு தெரியும். இறைவனைத் தவிர வேறு யார் அந்த புத்தியை குளவிக்கு தந்திருக்க முடியும். குளவி இனத்தை படைப்பதற்கு முன்னதாகவே அதற்கு வெட்டுகிளிதான் உணவு என்று வெட்டுகிளியை முதலில் படைத்தான் இறைவன். இப்படியாக, எந்த ஒரு ஜீவன் பிறப்பதற்கு முன்னதாகவே அந்த ஜீவனுக்கு இவ்வூலகில் தேவையானவற்றை இறைவன் செய்து விட்டுத்தான் பூலோகத்தில் பிறக்க வைக்கிறான். ஆகவே இராமா… நீ எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ஈசனை நம்பு. எல்லாம் நன்மையாகவே நடக்கும்.“ என்று இராமனுக்கு ஆசி வழங்கினார் அகத்திய முனிவர். இராவணனைப் போரில் சந்திப்பதற்கு முன்னதாக வில்வக் காட்டில் இருக்கும் சோமநாத ஈஸ்வரரை வணங்கி ஆசி பெற வந்தார் ராமன். அவருடன் வானர வீரர்களும் வந்தார்கள். காட்டில் சோமேஸ்வரரை இராமன் வணங்கி கொண்டு இருந்தார். பல நாட்கள் நடந்து வந்ததால் வானர வீரர்களுக்கு பசி ஏற்பட்டது. “குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத இந்த காட்டுக்குள் இராமர் அழைத்து வந்துவிட்டாரே” என்று பசி மயக்கத்தால், கோபத்தில் சத்தம் போட ஆரம்பித்தார்கள். அவர்களின் பசியை போக்க ஈஸ்வரரிடம் உதவி கேட்டார் இராமர். சோமேஸ்வரரும் அவர்களுக்கு இந்த ஊரில்தான் தண்ணீருக்கான குளத்தையும், உணவையும் கொடுத்தார்.
மானாமதுரையில் இருக்கும் சோமநாதரை வில்வதினால் அர்ச்சனை செய்து வணங்கினால் பெரும் சிவயோகம் உண்டாகும். இருபத்தேழு நட்சத்திர தேவதையர்களின் கணவனான சந்திரன், ஒரு முறை தனது ஊழ்வினை காரணமாக ரோகிணியின் மீது மட்டும் கூடுதலான அன்பு காட்டி, பிற மனைவியரைப் புறக்கணித்து வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் மிகுந்த துன்பமுற்று, தம் கணவன் சசோதரி ஒருத்தியிடம் மட்டும் அன்பு காட்டி வருவதை தங்களது தந்தை தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கடும்கோபங்கொண்ட அவன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு சயரோகம் பீடிக்கும் படி சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் சயரோக நோயினால் பாதிக்கப்பட்டு நாள்பட அவனது கலைகள் சிறிது சிறிதாகத் தேயத்தொடங்கின.
இதனால் அச்சமுற்ற சந்திரன் தனது சாபம் நீங்கி பழைய பொலிவு பெற்றிட, அகத்தியரிடம் வழி கேட்டான். அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதியின் மேற்கு கரையில் அமைந்த வில்வவனத்தில் அருட்காட்சி தரும் இலிங்கத்திற்குத் தனியே கோயில் எழுப்பி, பூஜிக்க அவனது பிணி தீர்ந்து பழைய நிலை கிட்டும் என கூறி அருளினார். தற்போதைய கோயில் வீற்றிருக்கும் பகுதியில், அகத்தியர் கூறியது போல இலிங்கம் அமைந்திருப்பதைக் கண்ட சந்திரன் பெருமகிழ்வுற்று தனியே தீர்த்தம் ஒன்றினை அமைத்து அத்தீர்த்தத்திலும், வைகையிலும் நீராடி, சிவனை மனம் உருகி தனது கலைகளினால் தொடர்ந்து பூஜித்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தான். அவனது பக்தியில் அகம் மகிழ்ந்த சிவபெருமான் அருட்காட்சியளித்து, அவனது நோயைப் போக்கி அருளினார். மேலும், சந்திரனின் வேண்டுகோளை ஏற்று, அவரே இத்தலத்தில் உமையவள் ஆனந்தவல்லியுடனாய சோமநாதராக காட்சி தருகிறார். பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தினை, இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த இலிங்கத்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்று பின் துவாரகை மீண்டார்.
கோவில் அமைப்பு : ஸ்தூலகர்ணபுரம் என்றும், சந்திரப்பட்டிணம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது. பஞ்ச நிலை கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயிலில் இத்தல நிகழ்வுகள் சிற்பமாகக் காணப்படுகின்றன. சிவனுக்கு மேற்குப் பகுதியில் ரிஷபம், சூலத்துடன் கூடிய சிலை காணப்படுகிறது. ராமர் அகத்தியரின் ஆலோசனையின்படி இங்கு வந்து மூலவரை பூசித்த பின்னர் சேது அமைத்து இலங்கைக்குச் சென்று முடி சூடியதாகக் கூறுவர். ராமர் ராவணனுடன் சண்டையிட்டபோது வானர சேனையின் பசியைப் போக்கிய தலமாகும். பிற்காலத்தில் இந்த கோயில் பிரளயத்தால் அழிந்திட, இறைவனின் அருட்கட்டளைப்படி ஸ்தூலகர்ண மகாராஜா மீண்டும் இக்கோயி்லை புதுப்பித்துக் கட்டினார். பஞ்சநிலை கோபுரம், கோயிலின் ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நடந்த அற்புத சம்பவங்களை விளக்கும்படியாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனந்தவல்லி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. விநாயகர், நாக சுப்பிரமணியர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. சந்திர பகவான் தனது மனைவிகள் ரோஹிணி, கார்த்திகை ஆகியோருடன் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என சிறப்பு பெற்ற இக்கோயிலில் உமையவள், ஆனந்தவல்லி அம்மனுடன் சோமநாதராக சிவன் காட்சி தருகிறார். சதாசிவ பிரம்மேந்திரர் வாயு வடிவில் காட்சி தந்த நான்கு தலங்களில் இதுவும் ஒன்று. கோயிலின் எதிரே சந்திரபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது.
ஆடித்தபசு தினத்தில் சுவாமிக்கு அணிந்த மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்றும், குழந்தை இல்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை போல இங்கும் சித்திரை திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், பிரதோஷ நாட்களிலும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மானாமதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை
சிவபெருமானுக்கு மேற்குப்பகுதியில் விருஷபம், சூலத்துடன் கூடிய சிலை உள்ளது தனிச்சிறப்பாக உள்ளது. ஆனந்தவல்லி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. விநாயகர், நாக சுப்பிரமணியர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. சந்திர பகவான் தனது மனைவிகள் ரோஹிணி, கார்த்திகை ஆகியோருடன் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என சிறப்பு பெற்ற இக்கோயிலில் உமையவள், ஆனந்தவல்லி அம்மனுடன் சோமநாதராக சிவன் காட்சி தருகிறார். சிவனுக்கு மேற்குப் பகுதியில் ரிஷபம், சூலத்துடன் கூடிய சிலை உள்ளது. சதாசிவ பிரம்மேந்திரர் வாயு வடிவில் காட்சி தந்த நான்கு தலங்களில் இதுவும் ஒன்று. கோயிலின் எதிரே சந்திரபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது.