சசிவர்ணத்தேவர் (அ) சசிவர்ணேசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது.
இறைவன் : சசிவர்ணேஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : `சசி’ என்றால் `சந்திரன்’ என்று பொருள். ஒருமுறை சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்திற்காக இத்தலத்தில் சிவபூஜை செய்து நிவர்த்தி பெற்றான். சந்திரனுக்கு அருள் புரிந்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு `சசிவர்ணேஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. `சந்திரசேகரர்’, `சோமசேகரர்’ என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பி, சசிவர்ணேஸ்வரர் என்ற பெயர் சூட்டினார்.
கோவில் அமைப்பு : சிவகங்கைச் சீமையின் முதலாம் மன்னரான சசிவர்ணத்தேவருக்கு அமைக்கப்பட்ட ஒரு பள்ளிப்படையாகும். இதை கட்டியவர் இவரது மகனும் சிவகங்கை மன்னருமான முத்துவடுகத்தேவர் ஆவார். சிவகங்கை அரண்மனையின் வடகிழக்கே கட்டப்பட்டுள்ளது. தன் தந்தை சசிவர்ணத்தேவருக்காக 1751இல் இந்த பள்ளிப்படைக் கோயிலை சிவகங்கை மன்னர் முத்துவடுகத்தேவர் சிற்ப முறைப்படி அமைத்து சிவலிங்கத்தைப் பிரதிட்டைச் செய்தார். இந்த திருக்கோயிலுக்கு திருவிடையாட்டக் காணியாக காத்தாடியேந்தல் வாணியங்குடி, மானங்குடி, முடிக்கரை ஆகிய நான்கு ஊர்களையும் இறையிலியாக வழங்கிய ஆணையே செப்பேட்டில் வெளியிட்டுள்ளார். அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. பிரகாரத்தில் நாகத்தின் கீழே திருநாகேஸ்வரர் இலிங்கம் இருக்கிறது. நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமணத்தடை மற்றும் நாகம் தொடர்பான இதர தோஷத்தால் பாதிக்கப்பட்டோர், ஞாயிறு ராகு காலத்தில் பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கின்றனர். தவிர, இங்கு வில்வ மரத்தடியில் உள்ள நாகர் சன்னதியிலும் வழிபடுகின்றனர். பிரகாரத்தில் சூரியன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், காலபைரவர், சந்திரன் உள்ளனர்.
இங்குள்ள பெரியநாயகி அம்பிகை பிரசித்தி பெற்றவள் ஆவாள். பவுர்ணமியன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். சித்திரைப் பிறப்பன்று இவளுக்கு விளக்கு பூஜையும் உண்டு. அன்று, சுவாமி புறப்பாடாவார். இப்பகுதியிலுள்ள பெண்கள் சுகப்பிரசவம் ஆக இவளிடம் வேண்டிக்கொள்கின்றனர். இதற்காக “மருந்து குடிப்பு” என்னும் சடங்கை இப்பகுதியில் அதிகம் செய்கின்றனர். சுகப்பிரசவமாக அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்து, அதை பிரசாதமாகப் பெற்று பருகுகிறார்கள். ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் இங்கு வந்து இந்த வழிபாட்டைச் செய்கின்றனர். கோயிலுக்கு வரமுடியாத பெண்கள் சார்பில் அவர்களது குடும்பத்தார் வந்து, இந்த வழிபாட்டைச் செய்வதுண்டு. பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதாலும், அழாமல் இருந்தாலும் இங்கு அம்பிகையிடம் வேண்டிக் கொள்கின்றனர். இதற்காக இங்கு வரும் பெற்றோர், அம்பிகைக்கு அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் அதையே பிரசாதமாகத் தருவர். குழந்தையை அம்பாள் சன்னதி முன் நிறுத்தி, அம்பிகையை வணங்கி கோயில் வளாகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். பின், குழந்தை மீது அபிஷேக தீர்த்தத்தை ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார்கள். “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்பர். அம்பிகைக்கு அபிஷேகித்த தீர்த்தத்தால், குழந்தையைக் குளிப்பாட்டுவதால் அதன் பிரச்னை தீரும். திருமணத் தடை நீங்க, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் போன்ற பிரச்னை தீரவும், வயது அதிகமாகியும் உருதுவாகாத பெண்களுக்காகவும் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுகின்றனர். செவ்வரளிப்பூ மாலை, எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபாடு, 27 முறை கோயிலைச் சுற்றி வருதல் என நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிவகங்கை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு