பரமத்திவேலூர், பீமேஸ்வரர் (மாவு ரெட்டி)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது.
இறைவன் : பீமேஸ்வரர்
தல சிறப்புகள் : பீமன் வழிபட்ட தலம்.
தல வரலாறு : பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் இன்னல்களுக்கு ஆளானார்கள். இப்பஞ்சத்தை தீர்க்க என்ன வழி என்று அரசகுருவிடம் கேட்டபோது, அசரீரி மூலம் தகவல் வந்தது. பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் வடதிசை நோக்கி செல்லவேண்டும். அங்கு ஒரு வனத்தில் புருஷாமிருகம் உள்ளது. அது மிகவும் சக்திவாய்ந்தது. சிவன் அருள் பெற்றது. அதனை பிடித்துவந்தால் நாட்டில் கடும்பஞ்சம் தீரும் என்றது. இதனைக்கேட்ட பஞ்சபாண்டவர்கள் வடதிசை நோக்கி அந்த மிருகத்தை பிடித்துவர சென்றனர். அம்மிருகத்தை பிடித்துவரச் சென்றபோது, இவர்களை கடுமையாக தாக்கியது. இவர்கள் பயந்து திருமணிமுத்தாற்றங்கரையில் ஓடிவரும்போது, தருமர் ஒரு இலிங்கம் செய்து வழிபட்டார். அந்த மிருகம் இலிங்கத்தை கண்டதும், சிவபக்தியால் சிவலிங்கத்தை சுற்றிவந்தது. இதனால் அந்த மிருகத்திடமிருந்து தப்பிக்க, திருமணிமுத்தாற்றங்கரையில் ஒன்றன்பின் ஒன்றாக இலிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த மிருகமும் ஒவ்வொரு லிங்கமாய் சுற்றிவந்து கோபம் தணிந்தது. இந்த சம்பவம் நடந்த மாவுரெட்டி என்ற ஊரில் உள்ள இலிங்கம் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டதால் இக்கோயிலுக்கு பீமேஸ்வரர் கோயில் என்று பெயர்.
கோவில் அமைப்பு : திருமணிமுத்தாறு சேலத்தில் உருவாகி பரமத்திவேலூர் நஞ்சை இடையாறு கிராமத்தில் காவிரியோடு சேர்கிறது. இந்த ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர், கரபுரநாதர், வீரட்டீஸ்வரர், பீமேஸ்வரர் , திருவேணீஸ்வரர் ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை. இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். இங்கு சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சனீஸ்வரர், பிரம்மா, நவக்கிரக சந்நிதிகள் தனித்தனியே உண்டு.
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை,பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : சேலம்
உணவு வசதி : சேலம்