கடுத்துருத்தி, மகாதேவர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து வடக்கே 30 கி.மீ தொலைவில், வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் இருந்து 14 கி.மீ தொலைவிலும், ஏற்றுமானூர் மகாதேவர் கோவிலில் இருந்து 14 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இறைவன் : மகாதேவர்
தல சிறப்புகள் : கேரள மாநிலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் மூலஸ்தானத்தில் சிவன் மட்டும் இருப்பார். அம்மன் இருக்க மாட்டார். இதனாலேயே கர்ப்பகிரகத்தை இடமிருந்து சுற்றும் போது கோமுகி வரையிலும் சென்று, பின் அதே வழி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, பின் வலப்புறம் சென்று கோமுகியை வணங்கி விட்டு பின் வெளி வருவார்கள். ஏனென்றால் சிவன் அம்பாளுடன் இல்லாமல் தனியாக கர்ப்பகிரகத்தில் இருக்கும் போது சிவனது சடையில் கங்கை இருப்பாள். அபிஷேக தீர்த்தம் எல்லாம் கங்கா தீர்த்தமாக கோமுகி வழியாக வரும். கோமுகியை தாண்டினால் கங்கையை தாண்டிய தவறு ஏற்படும். எனவே கோமுகியை தாண்ட மாட்டார்கள். ஆனால் கோட்டயத்திற்கு அருகே பழமையான கடுத்துருத்தி மகாதேவர் கோயில் மூலஸ்தானத்தில் சிவன் அம்மனுடன் தம்பதி சமேதராக அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு : தலி கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த காடுதுருத்தி சிவன் கோயில் கேரளாவின் மூன்று முக்கியமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது அழகிய வேம்பநாட் ஏரி பின்னணியில் காட்சியளிக்கும் ஒரு மலை உச்சியில் வீற்றுள்ளது. காரா அசுரா எனும் அசுர வம்சத்து அரசனால் இந்த கோயிலுள்ள சிவன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக புராணக்கதைகள் கூறுகின்றன. கரன் எனும் அசுரனுக்கு மறுபிறவி இல்லாமல், முக்தி தந்த கோவிலாகக் கருதப்படும் மகாதேவர் கோவில், சிவ பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டி கடுந்தவம் இருந்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, அவற்றை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால், முக்தி கிடைக்கும் என்று கூறினார். அசுரனும் ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றா வது லிங்கத்தை வாயில் வைத்தும் எடுத்துச் சென்றான்.
சிவபெருமான், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரை அழைத்து, கரனை பின் தொடர்ந்து செல்லும்படி அனுப்பி வைத்தார். அவரும் அசுரனைப் பின் தொடர்ந்து சென்றார். அசுரன் பயணக் களைப்பில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக, தன் வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு, கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால் அதை அவனால் எடுக்க முடியாமல் போனது. அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கி, அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடத்தில் அமைந்த கோவில் வைக்கம் மகாதேவர் கோவிலானது.
அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் சென்ற போது, இடக்கையில் கொண்டு சென்ற சிவலிங்கத்தை ஏற்றுமானூர் என்ற இடத்தில் நிறுவச் செய்தான். அந்தக் கோவில் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில் ஆனது. பின்னர் அங்கிருந்து சென்ற அசுரன், வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை ஓரிடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டு முக்தியடைந்தான். அசுரன் வாயில் கடித்து இருத்திக் கொண்டு சென்ற சிவலிங்கம் நிறுவப்பட்ட இடம் என்பதைக் குறிக்கும் வகையில், அவ்விடத்திற்குக் ‘கடித்துருத்தி’ என்ற பெயர் ஏற்பட்டது. அங்கிருக்கும் இறைவன், ‘கடுத்துருத்தி மகாதேவர்’ என்று அழைக்கப்பட்டார்.
கோவில் அமைப்பு : மலைக்குன்று ஒன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலய கருவறையில், மூன்று அங்குலம் அளவு கொண்ட மிகச் சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் இருக்கிறது. அசுரன் கரன் கொண்டு வந்த மூன்று சிவலிங்கங்களுள் இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் சிவலிங்கமே மிகச் சிறியது. இருப்பினும், இங்கிருக்கும் இறைவன் இறைவியுடன் இணைந்து அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சி யளிக்கிறார். கோவிலின் உள் மண்டபக் கூரையில், சிவ பெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அர்ச்சுனன் செய்த தவமும், அவனைச் சோதிக்க இறைவன் வேடுவன் உருவில் வந்து அவனுடன் போர் செய்து, பின்னர் அவனுக்குப் பாசுபத அஸ்திரம் வழங்கிய கதையைச் சொல்லும் மரச்சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக் கின்றன. கோவில் வளாகத்தில் கணபதி, தர்மசாஸ்தா, துர்க்கை ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன.
கடுத்துருத்தி மகாதேவர் கோவில் வளாகத் தின் தெற்குப் பகுதியில், ஏற்றுமானூர் மகாதேவர் சன்னிதியும், வடக்குப் பகுதியில் வைக்கம் மகாதேவர் சன்னிதியும் இருக்கின்றன. வடக்கன்கூர் ராஜா தினமும் குதிரையில் பயணித்து வைக்கம் மகாதேவர் கோவில், ஏற்று மானூர் மகாதேவர் கோவில் மற்றும் கடுத்துருத்தி மகாதேவர் கோவில் என்று மூன்று ஆலயங்களிலும் வழிபாடு செய்து வந்தார். வயதான காலத்தில், அவரால் மூன்று கோவில்களுக்கும் சென்று வழிபட முடியாமல் போனது. எனவே அவர், கடுத்துருத்தி கோவிலின் வடக்குப் பகுதியில் வைக்கம் மகாதேவரைக் கிழக்கு நோக்கியும், தெற்குப் பகுதியில் ஏற்றுமானூர் மகாதேவரை மேற்கு நோக்கியும் நிறுவி, ஒரே தலத்தில் வழிபாடு செய்தார். மூன்று கோவில்களுக்கும் செல்ல முடியாதவர்கள், கடுத்துருத்தி மகாதேவர் கோவிலுக்குச் சென்று, மூன்று சிவபெருமானையும் வழிபாடு செய்து, மூன்று தலங்களுக்கும் சென்று வந்த பலன்களை அடையலாம். கடுத்துருத்தி மகாதேவர் கோவிலின் தெற்குப் பகுதியில் கணபதி சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதி வந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. கோட்டயம் அருகில் உள்ள மாஞ்சூர் என்ற இடத்தில் நிறுவுவதற்காகக் கணபதி சிலையைச் செய்து, சிலர் தோணி ஒன்றில் எடுத்துச் சென்றனர். அவர்கள் கடுத்துருத்திப் பகுதிக்கு வந்த போது, மாலை நேரமாகி விட்டது. தோணியில் வந்தவர்கள், இரவு வேளையில் அங்கு தங்கியிருந்து காலையில் மீண்டும் சிலையைக் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கொண்டு வந்த கணபதி சிலையைக் கோவிலுக்குள் ஓரிடத்தில் வைத்துவிட்டு அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில், அவர்கள் கணபதி சிலையை எடுக்க முயன்றபோது, அதை நகர்த்தக் கூட முடியவில்லை. வேறு வழியின்றி, அவர்கள் அந்தச் சிலையை அங்கேயே விட்டுச் சென்றனர். அவர்கள் விட்டுச்சென்ற சிலையே தற்போது கடுத்துருத்தி கோவிலில் தனிச் சன்னிதியில் இருக்கிறது.
வைக்கம் கோயிலில் ஞானம் கொடுக்கும் தட்சிணாமூர்த்தியாகவும், கடுத்துருத்தி கோயிலில் சகல சவுபாக்கியங்களை கொடுக்கும் தம்பதி சமேதராக அனுக்கிர மூர்த்தியாகவும், ஏற்றமானூரில் வெற்றி கொடுக்கும் காட்டாளன் ரூபத்திலும் சிவன் அருள்பாலிக்கிறார். கல்வியில் சிறக்க விரும்புவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், எதிலும் வெற்றி பெற விரும்புவர்கள் ஒரே நாளில் இந்த மூன்று தலங்களையும் தரிசித்தால் சிறந்த பலன் உண்டு என்றும், அவர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது என்பதும் நம்பிக்கை.
இக்கோவிலில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. இறைவன், இறைவியோடு சேர்ந்திருப்பதால் அம்மனுக்குரிய சிறப்பு வழிபாடுகளும் இங்கு பிரசித்தம். மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளில், அருகிலுள்ள பாலிச்சிறை ஆற்றில் இறைவனுக்கு ‘ஆறாட்டு’ நடத்தி ஆண்டு விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாள், மாசி மகம், புரட்டாசி மாதம் முதல் நாள் கோவில் நிறுவப்பட்ட நாள் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. கடுத்துருத்தி மகாதேவர் கோவிலில் சிவபெருமான், இறைவியுடன் சேர்ந்து அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்கு வழிபடலாம். அம்மனையும், சுவாமியையும் வழிபட்டால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களும், வளங்களும் கிடைக்கும்
காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கொச்சின்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோட்டயம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை