பரமக்குடி, எமனேஸ்வரமுடையார்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் இருந்து இளையான்குடி செல்லும் வழியில், 2 கி.மீ., தூரத்தில் எமனேஸ்வரம் உள்ளது.
இறைவன் : எமனேஸ்வரமுடையார்
உற்சவர் : பிரதோஷநாயனார்
இறைவி : சொர்ணகுஜாம்பிகை
தல தீர்த்தம் : எமதீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இத்தலம் எமன் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது.
தல வரலாறு : சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக்காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார். தவறை உணர்ந்த எமன், தான் விழுந்த இடத்தில் ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து, தவறுக்கு மன்னிப்பு வேண்டி வழிபட்டார். அதன்பின்பு சிவன், அவருக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். பின்பு எமன் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். எமனின் பெயரால் “எமனேஸ்வரமுடையார்” என்றும் அழைக்கப்பட்டார்.
கோவில் அமைப்பு : முன்மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் இருக்கின்றனர். பிரகாரத்தில் மல்லிகார்ஜுனேஸ்வரர், நாய் வாகனம் இல்லாத கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் இருக்கிறது. திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த காலசம்ஹாரமூர்த்தியாக அருளும் சிவன், இத்தலத்தில் அனுக்கிரமூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். அம்பாள் சொர்ணகுஜாம்பிகை இரண்டு கரங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் இவளது சன்னதியில் தாலி, வளையல் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியவதாக நம்பிக்கை.
மார்கழி திருவாதிரை, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மாசிமகம், சிவராத்திரி உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். மாசி மகத்தன்று சிவபெருமானின் அம்சமான, முருகப்பெருமான் இங்குள்ள எம தீர்த்தத்தில் எழுந்தருளுகிறார். கார்த்திகை கடைசி திங்கள்கிழமையில் முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். சிவபெருமான் இந்த தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இழந்த பதவி மற்றும் செல்வத்தை மீட்க எமனேஸ்வரமுடையாரை பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர். ஆயுள் விருத்தி பெறவும், சனி தோஷம் நீங்கவும் மூலவரிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது மற்றும் எண்பதாம் திருமணங்கள் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் சொர்ணகுஜாம்பிகை தாயார் சன்னதியில் தாலி மற்றும் வளையல் அணிந்து வழிபடுகின்றனர். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மார்கழியில் பைரவாஷ்டமி, புரட்டாசியில் துர்க்காஷ்டமியன்று பைரவருக்கு விசேஷ ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. நோய் நீங்க பக்தர்கள் பைரவரை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், பைரவருக்கு ருத்ரஹோமம் மற்றும் விசேஷ பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : பரமக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை