பேரையூர்





	


	



























	




 




	








 




9:47:51 PM         Saturday, May 02, 2026

பேரையூர்

பேரையூர்
பேரையூர் பேரையூர் பேரையூர் பேரையூர் பேரையூர் பேரையூர் பேரையூர்
Product Code: பேரையூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                 பேரையூர், நாகநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி சாலையில் திருமயம் வட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் பேரையூர்  உள்ளது. நகரப் பேருந்துகள் இயங்குகின்றன. திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இத்திருக்கோயிலுக்கு நமன சமுத்திரத்தில் இறங்கி மீண்டும் பஸ்ஸிலோ ஆட்டோவிலோ வரலாம்.

இறைவன் : நாகநாதசுவாமி

இறைவி  :  பிரகதாம்பாள்

தல சிறப்புகள் : ராகு-கேது, உருவில்  மனிதத் தலையும் பாம்பு உடலும் மாறி இணைந்திருக்கும். மற்ற கிரகங்களின் மாறுதலினால் மனித வாழ்வில் உண்டாகும் மாற்றங்கள்போல் இவற்றினாலும் தோஷங்கள் உண்டாகும். ராகு-கேதுவால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கினால் வேலை வாய்ப்பு, திருமணத்தடை அகலுதல், குழந்தைப்பேறு உண்டாதல், மாங்கல்ய தோஷம் அகலுதல் மற்றும் அறியாமல் செய்த தவறு எல்லாவற்றிற்கும் பரிகாரத் திருத்தலம்.

தல வரலாறு :   இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் முற்பட்டது. ஒரு குன்றின்மீது அமைந்துள்ளது. கோயில் வாயிலில் ஒரு குளமும் உள்ளே சந்நதிக்கு எதிரே ஒரு சுனையும் உள்ளன. கோயில் பிராகார சுவர், மண்டபம் மற்றும் கோயில் முழுக்க எங்கெங்கும்  நாக சிற்பங்கள் சிறியது, பெரியது, அகலமானது, கனமானது, குட்டையானது என பிரமித்து நிற்கும் அளவிற்கு நிறைந்து இறைந்து  கிடக்கின்றன. பிராகாரத்தில் இருக்கும் தென்னை மரம் கூட நாகத்தைப் போல் தலை வளைந்து காணப்படுகிறது. வரலாற்று  ஆதாரமாகக் கொடை கொடுத்த கல்வெட்டுகள் உள்ளன. இதற்கு பேரையம்பதி, பேரைமாநகர், பேரீச்சரம், பூகிரி, பூசண்டகிரி, ஷெண்பகவனம் என்று பல பெயர்கள் உண்டு. சிவனின் திருமணத்தின்போது அகத்தியர் தெற்கே வந்தார். அப்போது தான் கண்ட தலத்தின் சிறப்பை கௌதமரிடம்  சொன்னார். அதை, வியாசமுனிவர் வடமொழியில், ‘சூத சங்கிதை’ என்ற பெயரில் எழுதினார். சுவாயம்பு மனு மரபில் உதித்த பாண்டிய மன்னன்,  சுவேதகேது. வடநாட்டில் பலதிருத்தலங்களை வழிபட்டு, காசியில் கங்கை நீராடி விஸ்வநாதரை வழிபட்டான். 

அவன் பக்தியைக் கண்ட கங்காதேவி அவனுக்கு காட்சி கொடுத்து, வேண்டும் வரம் ஏதெனக் கேட்டாள். தினமும் சிவபூஜை செய்வதற்கு ஏற்ப கங்கை நதி  தன் நாட்டில்  பாய வேண்டும் என வேண்டினான். அதன்படி கங்கையும் ஒரு சிறுபெண்ணாக அவன் தோளில் அமர்ந்து வந்தாள். வழியில்  பாய்ந்து வரும் காவிரியைக் கண்டதும், தோளிலிருந்து குதித்தோடி காவிரியுடன் கலந்தாள் கங்கை. சுவேதகேது பேரையூர் சென்று இறைவனிடம் முறையிட, சிவபெருமானும், ‘உன் பெயரால் இங்கு  கங்கை, சுவேத நதியாகப் பாயும்,’ என்று அருளினார். 

உலகை அழகு மிக்கதாக  பல்வகைச் சிறப்புகளுடன் படைக்க நினைத்த பிரம்மா, புனித தீர்த்தமாகிய சிவகங்கையை கோயிலின் முன்புறத்தில் உருவாக்கினார். அதில் நீராடி, பேரையூர்  ஈசனை வழிபட்டு, விஸ்வகர்மாக்களைப் படைத்தார்.  விஸ்வகர்மாக்களால் இந்த உலகம்  வலிமையும் அழகும் மிக்கதாக ஆனது. பிரம்மனுக்கு கிருதயுகத்தில் படைப்பின் பேராற்றலைத் தந்தது பேரையூர் திருத்தலம் ஆகும். பேரையூர் திருக்கோயிலின் உள்ளே தென்புறத்தில் ஓர் இயற்கை சுனை, புண்ணிய புஷ்கரணி, பொன்முகரி ஆகிய பெயர்களுடன் விளங்குகிறது. அதன் தென்கோடியில் பிரம்மாவும், விஷ்ணுவும் வந்து நீராடியதாக வரலாறு உண்டு. இத்தீர்த்தத்தின் பெயரை நினைத்தாலும், சொன்னாலும், பார்த்தாலும், தொட்டுப் பூசித்தாலும், சிவபதவி அடைவர் என தலபுராணம் கூறுகிறது பதினெட்டு நாடுகளின் அரசன் சாலேந்திரன், சிவதீக்ஷை பெற்றவன். தினமும் சிவபூஜை செய்பவன். ஒருநாள் சிவபூஜை செய்யும்போது ஒரு நாககன்னியைக் கண்டு மையல் கொண்டான். அவள் நினைவால் சிவபூஜை செய்யும்போது கவனக்குறைவால், வண்டு துளைத்த ஒரு மலரால் பூஜை செய்தான். அரன் அவனை  நாகலோகத்தில் பிறந்து, நாக கன்னிகையை மணந்து வாழ்ந்து சிவபூஜை செய்து தன்னை வந்தடைய அருளினார். அதன்படி சாலேந்திரன் நாகலோகத்தில் நாகராசனுக்கு குமுதன் என்ற பெயருடன் மகனாகப் பிறந்து நாககன்னிகையை மணந்து சிவபூஜை செய்து வந்தான்.

தினமும் ஏழு நாககன்னிகளை பூலோகத்திற்கு அனுப்பி சிவபூஜைக்காக மணம் மிக்க மலர்களை பறித்துவரக் கூறியிருந்தான். அவர்கள் பேரையூர் திருக்கோயில் சுனையின்  பிலத்துவாரத்தின் வழியாக வெளிவந்து இறைவனை வணங்கி கோயிலின் ெசண்பக வனத்திலிருந்து மணம்மிக்க மலர்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். ஒருநாள், பூப்பறிக்க வந்த நாககன்னிகையிடம் பேரையூர் பெருமான், நாகராசனை அழைத்துவரச் சொன்னார். தன் மன்னன்  வரவேண்டுமென்றால், யாராவது ஒருவரை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்று கோரினாள்.  இறைவன் நந்தி தேவரை அனுப்பினார். இறைவனின் கட்டளைப்படி வந்து பேரையூர் பெருமானை வழிபட்டான். இறைவன், அவன் வேண்டும் வரம் என்னவென்று கேட்க, நாகராசனோ, ‘நான் சிவபூஜை செய்யும்போது  தேவர்கள் துந்துபி இசைக்க, நீங்கள் நர்த்தனம் புரியவேண்டும்’ என வேண்டினான். அதன்படி நர்த்தனம் நடக்க, அந்த இசை   பிலத்துவாரத்தின் வழியாக சுனை, கோயில், ஊர், உலகம் என அனைவருக்கும் கேட்க, முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதல் அனைவரும் மகிழ்ந்து பூமாரி பொழிந்தனர். நாகராஜனுக்காக நமச்சிவாயன் நர்த்தனம் ஆடியதால் பேரையூரில் உறையும் தன் பெயரும் இனி நாகநாதன் என வழங்கப்படும் என அறிவித்தார்.

முதன்முதலாக சுனையில் ஒலிகேட்ட நாள், தண்டமிழ்ப் புத்தாண்டாம் சித்திரை முதல் தேதியாகும். ஒவ்வொரு சித்திரை மாதமும் சூரியன் உச்சத்தில் சஞ்சரிக்கும்போது, நாகராஜனுக்காக பேரையூர் ஈசன் நாகலோகம் சென்று அவனது பூஜையை ஏற்று அவனுக்காகத் திருநடனம் புரிகின்றார். அவ்வொலி பிலத்துவாரத்தின் வழியாக பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தமாக எழுகிறது.  இன்றளவும் பங்குனி மாதம் இறுதி அல்லது சித்திரை மாதத்தின் முதல்நாள் இந்த நாகலோக நடன ஒலி கேட்பது ஆன்மிக விந்தை ஆகும். சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வந்து சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து இறைவனை  வழிபட்டு தோஷம் நீங்கியதாக  தலபுராணம் கூறுகிறது. சிவ அபசாரம் செய்த தந்தையின் காலைத் துண்டித்த விசார சர்மனை, அரன் கயிலைக்கு அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய பிதுர் துரோக பாவம் அகல, பேரையூர் சென்று வழிபட்டு பாபவிமோசனம் பெற்றான்.

இந்திரன் அகலிகையைப் பெண்டாளத் துணிந்ததால்  கவுதமர் சாபமிட்டார். அகலிகையைக் கல்லாக மாற, இந்திரனின் உடல் முழுவதும் கண்களாகத் தோன்றியது. அவனுடைய வஜ்ஜிராயுதமும் தொலைந்தது. மனம் நொந்த தேவேந்திரன் பேரையூர் வந்து வெள்ளாறு, சிவகங்கை, புண்ணிய புஷ்கரணி சுனை ஆகியவற்றில் நீராடி பேரையூர் பெம்மானிடம் வேண்ட வஜ்ஜிராயுதத்தை மீண்டும் தந்தருளினார் ஈசன். கிராதன் என்ற வேடன், ஒருநாள் காட்டில் யாரிடமாவது கொள்ளையடிக்கக் காத்திருந்தபோது ஒரு முனிவர் எதிர்ப்பட, அவரிடம் இருக்கும் பொருளைத் திருட முற்பட்டான். அவரோ தான் பேரையூர் பெருமானை தரிசனம் செய்வதற்காகச் சென்றுகொண்டு இருப்பதாகவும் தன்னிடம் பொருள் ஒன்றும் இல்லை என்றும் கூறினார். பேரையூர் என்ற பெயரைக் கேட்டதுமே அவன் சித்தம் தெளிந்து ஞானியானான்; பக்குவமும் அறிவு முதிர்ச்சியும் பெற்றான். அவனும் பேரையூர் வந்தான், அரனை  வணங்கும் முறைகளை அவன் அறிந்திருக்கவில்லை. அதனால் காட்டிலிருந்து கொண்டுவந்த மூட்டையில் இருந்த சாம்பிராணியைத் தீயில் தூவி கோயில் முழுவதும் மணம்பரப்பி, கோயிலின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வந்து விழுந்து வணங்கினான். ஈசன் காட்சி தந்து அவனையும் ஆட்கொண்டார். அது முதல் பேரையூர் ஈசனுக்கு சாம்பிராணி போடும் வழிபாடும் துவங்கியது. அதனால் நாகலோக நடன ஒலி  நாளிலும் சாம்பிராணி வழிபாடு உண்டு.

கோவில் அமைப்பு : கோயில் வளாகத்தில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்ட 6 அங்குலம் முதல் 2 அடி வரையிலான கருங்கல்லால் ஆன நாகங்களைக் காணலாம். அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கைகளில் பலவற்றை கோயில்களின் சுற்றுச்சுவர்களில் அமைத்துள்ளனர். இயற்கை வழிபாட்டின் ஆரம்ப கால நிலையில் நாக வழிபாடும் அமையும். இக்கோயிலில் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கி.பி.1012-1044 கல்வெட்டுக்கள் உள்ளன. பிற சோழ மன்னர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டைத் தொண்டைமான்கள் உள்ளிட்ட பலருடைய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

திருக்கோயிலின் முன்னால் சிவகங்கை திருக்குளம் உள்ளது. குளக்கரையில் விநாயகரும், சுப்ரமணியரும் உள்ளனர்.  கோபுரத்தைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி. இத்திருக்கோயிலுக்கே சிறப்பான புண்ணிய புஷ்கரணியான சுனையைக் காணலாம். எதிரில் கருவறையில் சுயம்புவாய்த் தோன்றிய மூலவர் நாகநாத சுவாமியை தரிசனம் செய்யலாம். அவருக்கு வலப்புறம் அன்னை பிரகதாம்பாள் என்னும் நின்ற கோல நாயகி. அடுத்து வள்ளி மணாளன், ரிஷபாரூடர், நடராஜர். நாகராஜா சமயக்குரவர்கள், மஹாலக்ஷ்மி, நவகிரகங்கள், பைரவர் என தெய்வத் திருதரிசனங்கள் மனதைக் குளிர்விக்கின்றன. நாகராஜர்  சுனைக்கு அப்பால் சந்நதியின் வலப்புறத்தில் அமைந்திருக்கிறார். இவருக்கே அனைத்து பரிகாரங்களும்  மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் இங்குவந்து பிள்ளைப்பேறு வேண்டி வழிபாடு செய்வதும், நாகநாத சுவாமிக்கு கலசபூஜை செய்வதும், அபிஷேக ஆராதனை செய்து நாக பிரதிஷ்டை செய்வதும் தினமும் நடைபெறுகின்றன. நாகப்பிரதிஷ்டை செய்து நன்மக்கட் பேறு பெற்றோர் ஏராளம். நாகதோஷத்தால் தடைபட்டு வந்த திருமணங்கள் பல, நாகநாதனைத் தொழுதபின் மனமகிழ் புதுமண வாழ்க்கையாக மாறியிருக்கின்றன. நாகநாதருக்கு பாலபிஷேகம் செய்தால், பால், வெளிர்நீல நிறமாக மாறிவிடும் அற்புதமும் நிகழ்கிறது.

தற்போது உள்ள மூலக்கோவில் கி.பி. 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் உள்ள மாடங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் அலங்கரிக்கின்றனர். கோவில் விமானம் பிற்காலத்தில் செங்கல்லினால் கட்டி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கருவறையின் முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சுரங்கப்பாதை எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. இது, போர்க்காலங் களில் கோவில் சிலைகளையும், சொத்துக்களையும் மறைத்து வைக்க தரைமட்டத்திற்கு கீழ் கட்டப்பட்ட சிறிய அறையாக இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இங்குள்ள அம்மன் சன்னிதியின் அமைப்பைக்கொண்டு இது விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில்  கட்டப்பட்டதென தெரிய வருகிறது. கோவிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி தொண்டமான் மன்னர்கள், பல்லவராயர் ஆகியோரது கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. காலத்தால் முற்பட்ட கல்வெட்டு ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்ததாகும்.

பல்லவராயர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தபோது இவ்வூர் ‘பேரையூர் நாடு’ என சிறப்புடன் விளங்கியது. பல்லவராயருள் புகழ்மிக்க சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோவில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இக்கோவிலுக்கு வந்து தாங்கள் அணிந்துள்ள ஆடைகளுடன் நீராடி அந்த ஆடைகளை அங்குள்ள தீர்த்த குளத்தில் விட்டு விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு நாகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஐந்து தலைகளுடன் கூடிய நாகச்சிற்பங்களை(கல், வெள்ளி, தங்கத்தில்) காணிக்கையாக வைத்து செலுத்துகின்றனர். பக்தர்கள் இவ்வாறு வைத்துள்ள ஆயிரக் கணக்கான கல்லினால் ஆன நாக சிற்பங்கள் கோவில் வளாகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது. இந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும். அப்போது கடவுள் வழிபாட்டின்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலி கேட்பதாக சொல்லப்படுகிறது. பூமிக்கு கீழ் ஆதிசேஷன் நடத்தும் வழிபாட்டு நிகழ்ச்சியின் ஒலியாகும் இது என கோவிலின் கர்ண பரம்பரை கதை தெரிவிக்கிறது.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிக அளவில் வந்து எலுமிச்சை, தேங்காய், பூசணி ஆகியவற்றில் தீபம் போட்டு நேர்ந்து கொள்வதும், திருமண நிச்சயம், குழந்தை வரம், தாலி பாக்கியம் ஆகியவை பெற்றவர்கள் காணிக்கை செலுத்திவிட்டுச் செல்வதும் வழக்கத்தில் உள்ளன. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வழிபடுவோருக்கு பித்ருதோஷம் நீங்கும் என சொல்லப்படுகிறது.

காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி 

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : புதுக்கோட்டை, திருமயம

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×