நேமம், ஜெயங்கொண்ட சோழீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரம் உள்ள காரைக்குடி சென்று, கீழச்செவல்பட்டி, ராங்கியம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இறைவன் : ஜெயங்கொண்ட சோளீசுவரர்
இறைவி : சௌந்தரநாயகி
தல தீர்த்தம் : சோழ தீர்த்தம்
தல சிறப்புகள் : இத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு.
கோவில் அமைப்பு : இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநந்திபுரம் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். கோயில் முன்பு 66 அடி உயரத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கோயில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் வைரவர் இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அத்துடன் ஜெயங்கொண்ட விநாயகர், வில்லேந்திய முருகப்பெருமான், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகளும் உள்ளன. கோயில் முன்புள்ள சோழதீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபடுவதால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. அசுரர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள தேவர்கள் சிவனை வழிபட வந்தனர். அப்போது யோக நிலையில் இருந்த அவரை எழுப்புவதற்காக மன்மதனை வேண்ட, மன்மதன் சிவன்மீது மலர்க்கணை தொடுத்தார். சிவன் தன் கண்களைத் திறந்து அவரைச் சாம்பலாக்கினார். ஆதலால் மூலவர் ஜெயங்கொண்ட சோளீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.
கயிலாயத்திலிருந்து பொதிகை சென்று கொண்டிருந்த அகத்தியர் இத்தலப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றுள்ளார். இக்கோயில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது. கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார். மீனாட்சி திருக்கல்யாண கோலம், காலசம்ஹார மூர்த்தி, ஊர்த்துவதாண்டவம், மார்கண்டேயர் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன
சிவன் மன்மதனை வெற்றி கொண்ட ஸ்தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடந்தும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்யலாம். சுவாமி, அம்பாள், விநாயகர், நந்தி, கல்யாணகந்தர், உற்சவ மூர்த்தி, வைரவர் ஆகிய ஏழு சுவாமிகளுக்கும் மாலை சாத்த வேண்டும். பலன் கிடைத்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை