குடுமியான்மலை, சிகாநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூர் மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது. சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கிச் சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு.
இறைவன் : சிகாநாதர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தல சிறப்புகள் : நவக்கிரகங்களின் அடிப்படையில் இதை சனித்தலமாகக் கொள்ளலாம். பத்தாம் நூற்றாண்டில் இத்தலம் " திருநலக்குன்றம்' என்று அழைக்கப்பட்டது. சனீஸ்வரனால் சோதிக்கப்பட்ட நளன் இத்தலத்தில் வந்து சிகாநாதரை வணங்கி அருள்பெற்றான் என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது. எனவே சனி பார்வையால் துன்பப்படுபவர்கள் இத்தல இறைவனை வணங்கி அருள்பெறலாம். இத்தலத்து இறைவனை வழிபட்டால் காதல் திருமணம் எந்த தடையுமில்லாமல் கைகூடும்.
தல வரலாறு : 'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்தது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் யாகம் செய்ததால் இவனைக் 'குடுமிக் கோமான்' என்று போற்றி மகிழ்ந்தனர். குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.'உமையாள்வி நாச்சி' என்றபெயருடைய தாசிப் பெண்ணும், இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்குக் கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்துக் கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள்தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை சிலையைப் பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் , காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டுக் கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், குடுமியான்மலைப் பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன.
கோவில் அமைப்பு : இங்குள்ள குகைகளில், பல்லவர் கால கி.பி.ஏழாம் நூற்றாண்டு இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில், சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார். சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது. இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.
இக்கோயில் சிற்பக் கலையின் சிறப்பை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. நுழைவு வாயில் முதல் கருவறை வரை ஏராளமான கலைநயம் மிக்க சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். இத்தலத்தில் துவாரபாலகர்கள் எதிரும் புதிருமாக நின்று வாயிலைக் காப்பது சிறப்பாகும். நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது. இத்தலத்தில்தான் சனீஸ்வரனால் சோதிக்கப் பட்ட நளன் இறைவனை வேண்டி அருள்பெற்றான் என்பது இத்தலத்தின் சிறப்பாகும். சிவாலயமாக இருந்தாலும் பெருமாளின் தசாவதார சிலைகள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. அதிலும் குதிரையில் அமர்ந்துள்ள வீரனின் சிலை கல்கி அவதாரம் என்றே கருதப்படுகிறது. ஒரு குதிரையில் இளைஞனும், மற்றொரு குதிரையில் முதியவர் ஒருவரும் உள்ளனர். கல்கி அவதாரத்தின்போது இளைஞர், முதியவர் என்ற பாகுபாடின்றி, இவ்வுலகத்தில் உள்ளோர் அழிக்கப்படுவார்கள் என்ற நியதியின் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
சங்கீத வித்வான்கள் அவசியம் செல்ல வேண்டிய கோயில் இது. இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் கொண்ட கல்வெட்டைக் காணலாம். கிரந்தத்தில் இங்கு எழுதப்பட்டுள்ளது. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரமமகேஸ்வரன் என்ற மன்னன் இந்த ராகங்களை பாடியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதன் அருகே நெருங்கமுடியாத அளவுக்கு தேனீக்கள் கூடுகட்டி வாழ்கின்றன. பொதுவாக சிவாலயங்களில் துவார பாலகர்கள் கண்டிப்பான முகத்தோற்றத்துடன் கிழக்கு நோக்கி வாயில் காப்பார்கள். ஆனால், இங்கோ தெற்கும், வடக்குமாக நின்ற நிலையில் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் புன்னகை பூத்தநிலையிலும், மற்றொருவர் சற்றே கடுமையான முகத்தோடும் செதுக்கப்பட்டுள்ளனர். இது ஒரு ஆன்மிக அதிசயமாகும். இங்கே அம்பிகை அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். மற்றொரு அம்பிகை சன்னதியும் இங்குள்ளது. உமையாள்நாச்சி என்ற தேவதாசி, அம்மன் சன்னதி ஒன்றை கட்டினாள். அவளுக்கு மலையமங்கை என பெயர் சூட்டினாள். காலப்போக்கில் அது சவுந்தரநாயகி சன்னதியாக மாறியிருக்கக்கூடுமென தெரிகிறது
கண்ணில் பீதியை ஏற்படுத்தும் அதிபயங்கர நரசிம்மர், அதே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் ரதி, மன்மதன் சிலைகள், பதஞ்சலி முனிவர், உலகளந்த விஷ்ணு, அகோர வீரபத்திரர், பத்துதலை ராவணன், மோகினி அவதார விஷ்ணு, வினை தீர்க்கும் விநாயகர் என எண்ணிலங்கா எழில் மிகு சிற்பங்களை பார்த்து ரசிக்கலாம். சிற்பக்கலைஞர்களும் இத்தலத்தை அவசியம் பார்த்து வர வேண்டும். குடுமியான் மலை அமைதியான தலமும் கூட. தியானத்திற்கு ஏற்ற இடம் இது ஒரு சனித் தலம் ஆகும். மலை உச்சியில் நாயன்மார்கள்: நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங் கும் காணமுடியாது. கோயில் பிரகாரம் சுற்றி வரும்போது, இந்தச் சிற்பங்களை மலையுச்சியில் ஏறாமல், கீழிருந்தபடியே தெளிவாகப் பார்த்து தரிசிக்க முடிகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை