வாலிகண்டபுரம், வாலீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவில் உள்ளது. பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் 4 வழிச்சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன் : வாலீஸ்வரர்
இறைவி : வாலாம்பிகை
தல தீர்த்தம் : சரவண தீர்த்தம்
தல விருட்சம் : மாவிலிங்கை
தல சிறப்புகள் : இந்தக் கோவில் கிருதயுகம், பிரம்மபுரீஸ்வரர், பிரகன்நாயகி ஆகிய திருநாமப் பெயர்களை கொண்டதாகவும், திரேதாயுகத்தில் இந்திரன் அம்சமான வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாகவும் திகழ்ந்துள்ளது. இறைவனை அருணகிரி நாதர், ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், ராமலிங்க அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 229 தலங்களை குறிப்பிட்டு பதிகங்களை பாடியுள்ளார்.
தல வரலாறு : கோவிலும் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகை சிறப்புகளும் ஒருங்கே பெற்று திகழ்கின்றன. மகாபாரத காலத்தில் அஞ்ஞாத வாசத்தின்போது பஞ்ச பாண்டவர்கள் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்தனர். இப்பகுதியை ஆண்ட விராட மன்னனிடம் அவர்கள் பணி செய்து வந்தனர். அப்போது ஒருநாள் விராட மன்னருடன் தர்மர் தாயம் விளையாடினார். விராட மன்னர் தவறான ஆட்டம் ஆடினார். இதனால் பஞ்ச பாண்டவர்களுக்கு கோபம் உண்டாகி சண்டை ஏற்படும் நிலை வந்தது. ஆனால் தங்களின் அஞ்ஞாத வாழ்க்கை பிறருக்கு தெரிந்து விடுமே என்பதால் பஞ்ச பாண்டவர்கள் இங்குள்ள ஆற்றில் நீராடி இறைவனை வழிபட்டு தங்களின் கோபம் தணிய பெற்றனர். பாண்டவர்களின் கோபத்தை போக்கிய நதி என்பதால் இவ்வாற்றுக்கு ‘கோனேரி ஆறு’ என்ற பெயர் ஏற்பட்டது. விராடன் ஆட்சி பகுதி என்பதை நினைவூட்டும் வண்ணம் ‘லாடபுரம்’ என்ற ஊர் வாலிகண்டபுரத்தின் மேற்கே அமைந்து உள்ளது.
கோவில் அமைப்பு : சங்க காலத்தில் ஏறத்தாழ கி.பி. 910-ம் ஆண்டில் கண்டீரக்கோ என்ற மன்னர் ஆட்சி புரிந்ததால் ‘கண்டீரபுரம்’ எனப்பெயர் பெற்று வாலியுடன் தொடர்பு கொண்டு மருவி வாலிகண்டபுரம் ஆனதாக இந்த ஆலய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலில் 134 கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஆலயம் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் அழகுறகாட்சியளிக்கிறது. கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு வடக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபம் மற்றும் அவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கின்றன. ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி எதிர்படுகிறது. கட்டிடக்கலையின் அறிவியல் படி ராஜகோபுரத்திற்கு சற்று தாழ்நிலையில் கோவில் கருவறைகள் அமைக்கப்படுவது பெரும்பாலான கோவில் கட்டிடக்கலையின் நுணுக்கம் ஆகும். அதுபோல வாலீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்திற்கு தாழ்வான நிலையில் கோவில் கருவறை மற்றும் இதர சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1761-ல் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ண கோனாரால் இக்குளமும், தர்பார் மண்டபமும் கேரள கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ளது.
கோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் வாலாம்பிகை தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். வாலாம்பிகை சன்னிதியின் எதிரே உள்ள பகுதியில், சிதைந்துபோன நிலையில் சில சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. கி.பி. 18-ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப்கள் வாலிகண்டபுரத்தை மையமாக வைத்து போர்புரிவதற்காக ரஞ்சன்குடியில் கோட்டையை எழுப்பினர். அப்போது வாலீஸ்வரர் கோவிலில் இருந்த சிற்பங்கள் சிதைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.
வாலாம்பிகை சன்னிதியை கடந்து உள்ளே சென்றால், வாலீஸ்வரர் கருவறை உள்ளது. இதில் லிங்க வடிவில் வாலீஸ்வரர் வீற்றிருக்கிறார். வாலீஸ்வரர் கருவறைக்கு வெளிப்பிரகாரத்தில் வடக்கு நோக்கி தண்டத்துடன் காட்சி அளிக்கும் சுமார் 9 அடி உயர தண்டாயுதபாணி சிலை உள்ளது. அதற்கு எதிரே ஒரு லிங்கத்தில் 1008 லிங்கம் வடிவமைக்கப்பட்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் வானரத் தலைவனான வாலி, ஈஸ்வரனை வழிபட்ட இடம் ‘வாலீஸ்வரம்’ என்றும், ராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி சென்ற வழியில் வாலியை கண்ட இடம் ‘வாலிகண்டபுரம்’ என்று பெயர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள தண்டபாணிக்கு, கிருத்திகை விழா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழாவும், திருக்கார்த்திகை விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : பெரம்பலூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை