வில்லியனூர், திருக்காமீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தென்னிந்திய யூனியன் பிரதேசமான புதுவைக்கு தென்மேற்கில் 10 கி.மீ தொலைவில் வில்லியனூர் என்னுமிடத்தில் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இறைவன் : திருக்காமீஸ்வரர், காமேஸ்வரர், மிரமீஸ்வரர், நரசிங்கநாதர், நடுவழிநாதர், வைத்திய நாதர், வில்வனேசர்
இறைவி : கோகிலாம்பிகை, குயிலம்மை, முத்தம்மை
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஹிருத்தாப நாசினி
தல சிறப்புகள் : பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய மூன்று தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் கோவிலின் 2 பிரகாரங்களை கடந்து மூலவராக வீற்றிருக்கும் சுயம்பு லிங்கத்தின் மீது காலை நேரத்தில் விழுகிறது. இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் பிரசவ நந்தி இங்கு உள்ளார்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், தனது அடியையும் முடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். இதில் பிரம்மன் செய்த தவறால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. வருத்தப்பட்ட பிரம்மன் சிவனிடம் தனது பாவத்தை போக்கும்படி வேண்டினார். சிவனும்,”தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும்” எனக் கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார்.
பொதுவாகக் கோயில்களில் தீபாராதனையின் போது மந்திரம் கூறி தீபாராதனை காட்டுவார்கள். இந்த மந்திரத்தில் “காமேஸ்வரோ” என்ற வார்த்தை வரும். எந்தக்கோயிலில் இறைவனை வழிபட்டாலும் அதில் காமேஸ்வரரின் திருநாமம் உச்சரிக்கப்படும். சோழநாட்டில் கமலாபுரி என்ற நகரைத் தருமபால சோழன் ஆண்டு வந்தான். இவனது முன்ஜென்மப் பயனால் வெண்குட்டம் ஏற்பட்டது. இந்த நோய் நீங்க, இத்தலக் குளத்தில் நீராடி, சிவனை வழிபட்டு குணம் பெற்றான். எனவே வில்வவனமாக இருந்த இங்கு ஒரு நகரை உருவாக்கி, சிவனுக்கு கோயில் கட்டி வில்வநல்லூர் என பெயரிட்டான். இதுவே காலப்போக்கில் வில்லியனூர் ஆனது. தேவாரத்தில் இத்தலம் வைப்புத்தலமாக விளங்குகிறது.
இத்தல இறைவனை பிரம்மன், நரசிம்மன், இந்திரன், சூரியன், ஆதிசேடன், மன்மதன், சந்திரன், தருமபாலன், சகலாங்க சவுந்தரி, கோவிந்தன் ஆகியோர் பூஜித்துள்ளனர். பிரம்மனுக்கும், திருமாலுக்கும் சிவபெருமான் ஞாயிறு பவுர்ணமி தினத்தில் காட்சி கொடுத்தார். எனவேதான் இன்றும் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பவுர்ணமியில் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இத் தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்களும் பிரசவ நந்தியிடம் வேண்டிக் கொண்டு அந்த நந்தியை, தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி மாற்றி வைக்கின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறியதும் பூஜை செய்து நந்தியை மீண்டும் திசை மாற்றி வைக்கின்றனர்.
கோவில் அமைப்பு : இந்த கோயில் வளாகம் இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் அதன் அனைத்து கோபுரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் வளாகம் சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் பல்வேறு ஆளும் வம்சங்களிலிருந்து சேர்க்கப்பட்டது. நவீன காலங்களில், இந்த கோயில் புதுச்சேரி அரசாங்கத்தினால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. கோயில் கட்டமைப்பு 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் சேர்க்கைகள் இடைக்கால சோழர்கள் மற்றும் விஜயநகர் பேரரசால் கட்டப்பட்டவை என்று நம்பப்படுகிறது, அதே நேரத்தில் தற்போதைய அமைப்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் தெற்கே ஒரு மொட்டை கோபுரம் உள்ளது, மற்ற அனைத்து கோபுரங்களும் சிறப்பாக கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி உள்ள சன்னதியில் திருக்காமீஸ்வரரின் உருவத்தை லிங்கம் வடிவத்தில் தரிசிக்கலாம். தெற்கு நோக்கி அமைந்திருக்கும் கோகிலம்பா அம்மானின் சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் பிற சிவன் கோயில்களைப் போலவே, விநாயகர், முருகன், நவகிரக, சண்டேகேஸ்வர மற்றும் துர்கா சன்னதிகளும் பிரகாரத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளன. இரண்டாவது பிரகாரத்தில் கோயில் குளமும், தோட்டமும் உள்ளன.
பொதுவாக, சிவாலயங்களில் உள்ள அம்மனின் முன்பு அம்மனை நோக்கி நந்தி அமர்ந்திருக்கும். இத்தலத்திலும் அதே போல் இருந்தாலும் அந்த நந்திக்கு முன்பு ஒரு சிறிய நந்தியும் இருக்கிறது. இதுவே பிரசவ நந்தியாகும். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் அருள்பாலிப்பதால் இத்தலம் முக்தி தலமாக விளங்குகிறது. உயரமான தேரும் இங்குள்ளது. தென்பகுதியில் அமைந்துள்ள இராஜகோபுரம் 97 அடி உயரம் மற்றும் 9 நிலைகளுடன் கட்டப்பட்டுள்ளது. சோழர்களின் சிற்ப கலைநுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கோவிலில் உள்ள சிற்பங்கள், உள்நாட்டினரையும், வெளிநாட்டினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளன. 2 பிரகாரங்களிலும் விநாயகர், முருகன், பைரவர், நவக்கிரகங்கள், முத்துக்குமாரசாமி, துர்க்கை, தட்சணாமூர்த்தி. வலம்புரி விநாயகர், ஆயிரம் லிங்கங்களை உடைய சிவன், ஈசான லிங்கம், பர்ண லிங்கம், நாயன்மார்கள், சோமாஸ் கந்தர், நடராஜர், அறுபத்து மூன்று நாயன்மார்கள் உள்ளிட்ட பல சிலைகளும் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கோவில் திருவிழா வெகு விமர்சையாக 13 நாட்கள் நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தில் இத்தல அம்மனுக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி பிரம்மோற்சவம், தேர்த்திருவிழா. ஆனித் திருமஞ்சனம் ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், கார்த்திகை லட்ச தீபம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக நடத்தப்படுகிறது. குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்களும் பிரசவநந்தியிடம் வேண்டிக் கொண்டு அந்த நந்தி தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி மாற்றி வைக்கின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறியதும் பூஜை செய்து நந்தியை மீண்டும் திசை மாற்றி வைக்கின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம் , புதுச்சேரி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை