பரமத்திவேலூர், நன்செய் இடையாறு எயிலிநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் வட்டத்தில் நன்செய் இடையாறு இடத்தில் உள்ளது.
இறைவன் : எயிலிநாதர்
இறைவி : சுந்தரவல்லி
தல விருட்சம் : வன்னிமரம்
தல சிறப்புகள் : காவிரி ஆற்றுக்கும், அதன் கிளை நதியான திருமணிமுத்தாற்றுக்கும் இடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் “நன்செய் இடையாறு” என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது.
தல வரலாறு : பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர் யாருமில்லை என ஆணவம் மிகுந்து சொல்லித் திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி சிவபெருமான் மனித உடலும், மிருக தலையும் கொண்ட மிருகம் ஒன்றை ஏவினார். அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, “கோவிந்தா, கோபாலா” என கதறிக்கொண்டே ஓடினான்.
சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகிப் பாயும் திருமணி முத்தாற்றின்கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். சேலம் சுகவனேஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுநாதர், பில்லூர் வீரட்டேஸ்வரர், பரமத்தி பீமேஸ்வரர், நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் கோயில்களே அவை சுயம்புலிங்கம் எனப்படுவது தானாகவே தோன்றுவதாகும். இறைவன் தானாகவே விரும்பி அமர்ந்த இடங்கள் சில உண்டு. இவ்வகையில் ஐந்து சுயம்பு இலிங்கத் தலங்களை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தரிசிக்கலாம். இவற்றில் முக்கியமானது பரமத்திவேலூர் அருகிலுள்ள நன்செய் இடையாறு எயிலிநாதர் கோயில்.
கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச்சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாசப் பெருமாள் கோயிலும் உள்ளது. ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி உண்டாகும் என நம்புகின்றனர். இக்கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல் வெட்டு சான்று உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில் கி.பி.10ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், நால்வர், நந்திதேவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இவ்வூர் மக்களுக்கு திருமணம் நடத்த இலவசத் திருமண மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாமக்கல், சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை