புத்தேரி, யோகீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் மேலபுத்தேரி என்றும் கீழபுத்தேரி என்றும் இருபகுதிகளாக விளங்குகிறது. மேலபுத்தேரி ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது
இறைவன் : யோகீஸ்வரர்
தல சிறப்புகள் : கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது. பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று,இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் “கண் திறப்பு வைபவம்” நடக்கும்.வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மூலவராக வணங்கும் சுவரின் மணலையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.
வைகாசி விசாகத்தன்று சாஸ்தா மற்றும் யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். அப்போது மாம்பழம், பலாப்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து சாறு தயாரிக்கப்படும். “மாம்பால்” எனப்படும் இந்த கலவையை சுவாமிக்கு படைத்து வழிபடுகிறார்கள்.
தல வரலாறு : முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில், காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் எழுந்தருளியிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு “பூலா உடைய கண்டன் சாஸ்தா”என்று பெயரிட்டு, சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒருசமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர், இங்கே பலகாலம் தங்கினார்.இங்கேயே ஜீவசமாதியடைந்தார். சிலகாலம் கழித்து, யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. வியந்த மக்கள், புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறைவனாகக் கருதி வழிபட்டனர். இந்தச் சுவரை சிவ அம்சமாகக் கருதிய பக்தர்கள், “யோகீஸ்வரர்” என்றும் பெயர் சூட்டினர். தினசரி பூஜையின்போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.
பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று மட்டும் இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால், “புற்றேரி” எனப்பட்ட இவ்வூர் “புத்தேரி” என மருவியது.
புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டு, மூலவராக வணங்கும் சுவரின் மணலை சிறிதளவு நீரில் கரைத்துச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்புகிறார்கள். யோகீஸ்வரரிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், காவடி எடுத்து காவி வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் “கண் திறப்பு வைபவம்’ நடக்கும். வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நாடோறும் காலையும் மாலையும் இத்திருக்கோயில்களில் முறையே தீபாராதனை வழிபாடுகள் நிகழ்கின்றன. திங்கள் தோறும் வருகின்ற சமய வழிபாட்டு நாட்களிலும் இறைவழிபாட்டு சிறப்பு நாட்களிலும் சிறப்பான சடங்குகளுடன் வழிபாடுகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை தோறும் வழிபாட்டு மண்டபத்தில் பக்தர்கள் கூடி பசனைப் பாடல்களை பாடி சிறப்பு நிகழ்ச்சி செய்து வழிபடுவது முறையாக நிகழும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திங்கள் முதல்நாளிலிருந்து மார்கழித் திங்கள் வரை ஒவ்வொரு நாளும் வெள்ளாளர் சமுதாய உறுப்பினர்கள் முறையாக இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு புரிவர்.
ஆண்டுதோறும் பங்குனி திங்கள் உத்திரநாளில் நடைபெறும் சாஸ்தாகோவில் கொடைவிழா சிறப்பான ஒரு நிகழ்ச்சி. இவ்விழா இரு நாட்களாக தம்பிரான் குதிரை வாகன பவனி மற்றும் நிகழ்ச்சிகளுடன் சிறப்புற நிகழும் இவ்விழாவைத் தொடர்ந்துவரும் வெள்ளிக்கிழமை தொடர்ந்துவரும் வியாழனன்று குருநாதரசம் யோகீஸ்வரருக்கு அன்னக்கொடை புரிந்து குருபூசை செய்து மறுநாள் வெள்ளியன்று புற்றாக விளங்கும் குருநாதர் சமாதியை முற்றுமாக செம்மண் பூசும் திருமேனி பூசும் விழாவும் இரவு கொடைத்திருவிழாவும் இத்திருக்கோவில் ஆண்டுத் திருவிழாக்கள் ஆகும்.
காலை 6.30 முதல் பகல் 7.30 மணி, மாலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகர்கோவில்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை