திருமங்கலம், சொக்கநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் நகரில் அமைந்துள்ளது.
இறைவன் : சொக்கநாதர்
இறைவி : மீனாட்சி
தல தீர்த்தம் : ஆகாயகங்கை
தல விருட்சம் : வில்வம்
தல வரலாறு : சிவபெருமான், மீனாட்சியை மணம் முடிப்பதற்காக கயிலையிலிருந்து மதுரை வந்தார். திருமணத்திற்காக தேவர்களும், பூதகணங்களும் சிவபெருமானிற்கு முன் மதுரை வந்தடைந்தனர். திருமணத்திற்கான தாலி செய்வதற்காக மதுரை நகரின் 18கிமீ. தெற்கிலுள்ள குண்டாற்றின்கரையோரம் பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு,சிவனை வழிபட, தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன்,இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி, காட்சி தந்தார்.எனவே இங்கும் இறைவனை சுந்தரேஸ்வரர் என்றும், சக்தியை மீனாட்சி என்றும் அழைத்து,அந்த இடத்திலும் தங்க வேண்டும் என தேவர்கள் கேட்டுக் கொண்டனர். அங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், அப்பகுதியை தேவர்கள் “திருமாங்கல்யபுரம்” என அழைத்தனர்.காலப்போக்கில் “திருமங்கலம்” எனப் பெயர் மாறியது.
கோவில் அமைப்பு : இடைக்கால பாண்டியமன்னர்கள், இங்கு சுயம்புவாக கிடைத்த லிங்கத்தைக் கொண்டு கிழக்கு நோக்கி இக்கோயிலை எழுப்பினர். சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி உள்ளாள்.பிரகாரத்தில் வில்வவிநாயகர், உஷா, சாயாதேவியுடன் சூரியன், நாகர், மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர், மங்கள தெட்சிணாமூர்த்தி, மயில் மீது அமர்ந்தபடி வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், காசிவிஸ்வநாதர், அஷ்டபுஜதுர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலத்தில், யோகசனீஸ்வரர் தனிச்சன்னதியில் தெற்குநோக்கியபடி அருளுகிறார். இவரை, சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் எள்விளக்கு போட்டு, காக்கைக்கு அன்னமிட்டு மனமுருக வேண்டிக்கொண்டால், துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். இங்கு வில்வமும், வேம்பும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருக்கிறது. இதனடியில் வில்வவிநாயகர் உள்ளார். சுவாமியுடன் அம்பாளாக, கருதப்படும் விருட்சங்களின் மடியில் இவர் அமர்ந்திருப்பதால் இவரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறும். இவருக்கு அருகம்புல் மாலையிட்டு, கொழுக்கட்டை நைவேத்யம் செய்து வணங்கினால் கல்வி,கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம், உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும்.
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை