சோழவந்தான், திருமூலநாத சுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன் : திருமூலநாத சுவாமி
உற்சவர் : நடராஜர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தல தீர்த்தம் : சுவர்ண புஷ்கரணி குளம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : முகப்பில் அதிகார நந்தி நின்ற கோலத்தில் துணைவியாருடன் காட்சி தருகிறார். இத்தலத்தில் விநாயகர் கோட்டை விநாயகர் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சதுர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
சிவன் முதன் முதலாக காட்சி தந்த தலமென்பதால், ஆதி சிதம்பரம் என்ற பெயரினைப் பெற்ற தலம் என தல புராணம் கூறுகிறது. அகத்தியர் பொதிகை மலை சென்ற போது மூலநாதரால் உபதேசம் பெற்ற தலம். இத்தலத்தில் புலி சாபம் பெற்ற கந்தர்வன், சாப விமோசனம் பெற்றான். காசிக்கு சென்றால் முக்தி என்பது போல இத்தலத்திற்கு சென்றாலும் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் மூலவராக சிவன், ஜலதாரையின் மேல் பிரம்மா, கன்னி மூலையில் விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளனர். ஜனகாதி முனிவர்கள் முக்தி பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.
தல வரலாறு : நூற்றாண்டுகளுக்கு முன்பு, மக்கள் இறை பக்தியில் நாட்டம் இல்லாது இருந்தபோது, அவர்களை இறை பக்தியில் ஈடுபடுத்திட வேண்டுமென ஈசனும் உமையாளும் முடிவெடுத்தனர். அதன்படி மக்களிடம் இறை உணர்வினை ஏற்படுத்திட யாரை அனுப்புவது என நந்திகேஸ்வரரிடம் கேட்டபோது சுந்தரரை அனுப்பும் படி அவர் கூறினார். அதன் படி சுந்தரர் பூமிக்கு வர ஓரிடத்தில் மாடு மேய்ப்பவன் ஒருவன் இறந்து கிடக்க அவனைக் சுற்றி மாடுகள் அழுது கொண்டிருந்த காட்சியைக் கண்டு மனம் இறங்கி அவனது உடலில் புகுந்து மாற்று உரு பெற்றார். அவனது உருவிலேயே வீட்டிற்கு சென்ற அவர் வந்த காரியம் நிறைவேற்றாது இருந்தார். இதனைக் கண்ட ஈசன் சுந்தரரின் வேலையினை உணர்த்த முனிவர் வேடத்தில் சென்று அவரிடம் யாசகம் கேட்டார்.
சுந்தரர் உணவு கொண்டு வர, அங்கு முனிவர் வேடத்தில் இருந்த ஈசனைக் காணாததைக் கண்டு கலங்கினார். அப்போது அங்கே தரையில் கால் தடம் இருந்ததைக் கண்டு அதனைப் பின் தொிடர்ந்தார். அத்தடம் நேரே சிதம்பரம் சென்றடைய, அங்கே சிவனே முனிவர் வடிவில் வந்ததை உணர்த்தி இன்று தலம் வீற்றிருக்கும் தென்கரை பகுதியில் திருமூலநாதர் அசரீரி ஒலித்தது. அதன் பின் இப்பகுதியில் திருமூலநாதர் எனும் பெயரிலேயே சிவாலயம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இத்தலத்தில் உள்ள திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரி அம்பாளை வணங்கிட, குழந்தைப் பேறு கிட்டும், தீராத நோய்களும், குஷ்ட நோய்களும் தீரும். கல்யாண முருகனை வேண்டி வர திருமணத்தடை நீங்கும், துர்க்கையை அபிஷேகம் செய்து துதித்திட நோய்கள் விலகும், சுரதேவரை அபிஷேகம் செய்து வணங்க தீராத காய்ச்சல் தீரும் என்பதும்,பைரவரை வணங்கி வர கண் திருஷ்டி நீங்கும், கோட்டை விநாயகரை வணங்கிட எண்ணிய காரியங்கள் நிறைவேறும். எண்ணிய காரியங்கள் நிறைவேறினால், திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரிக்கு அபிஷேகங்கள் செய்து, தொட்டில் கட்டி, வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணமும், சுரதேவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து மிளகு பத்து இட்டு, மிளகு, சீரகத்தை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
சிவபெருமான், மூலநாதராக வீற்றுள்ள இத்தலத்தில் தனியாக உள்ள அகிலாண்டேஸ்வரி சன்னதியின் எதிரே சுவர்ண புஷ்பகரிணி எனும் தீர்த்த குளம் உள்ளது. இதன் கரையில் அம்பாள் அகிலாண்டேஸ்வரி தவம் புரிந்து சிவனைண மணம் புரிந்ததாக வரலாறு கூறகிறது. குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மன்னன் வீரபாண்டியன் இக்குளத்தில் நீராடி தன் நோயினைத் தீர்த்துக் கொண்டதாகவும், அதன் பின் கோயிலை அவன் சீரமைத்ததாகவும் கூறப்படுகிறது. இக்குளத்தி்ல் நீராடினால் தீராத நோய்கள் தீர்வதாகவும், இந்த நீரினை தொடர்ந்து 48 நாட்கள் விரதமிருந்து ஓரிடத்தில் ஊற்றி வர அவ்விடத்தில் வில்வ மரம் முளைக்கும் எனவும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் எனவும் இன்று வரையிலும் நம்பப்படுகிறது.12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.ராஜகோபுரத்தை அடுத்து சுவாமி கோயிலில் நூற்றுக்கால் மண்டம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன. ஆடி வீதியில் சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதி, நவக்கிரகங்கள், மேற்குதிசையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசபெருமாள், வடக்கில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, துர்க்காதேவி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சிஅம்மன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரி அம்மன் என ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.அம்மன், சுவாமி சன்னதி முன் நந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பூர்ணபுஷ்பகரணியான புனித தெப்பக்குளம் அம்மன் சன்னதி முன் உள்ளது. அம்மன் கோயிலில் அனைத்து சித்தர்களின் பலவண்ண ஓவியங்கள் காட்சியளிக்கின்றன.
திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், விசாகம், சித்திரை பிறப்பு, நவராத்திரி உற்சவம், ஐப்பசி உற்சவம், சங்காபிஷேகம், அஷ்டமிசப்பரம், திருவாதிரை உற்சவம் நடக்கின்றன.திருமணம், குழந்தைவரம், வியாபார விருத்தி, உடல் ஆரோக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், மூன்று திங்கட்கிழமைகளில் நெய்விளக்கேற்றி, பொங்கல் படைத்து பூஜை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை