தென்திருவாலவாய், சொக்கநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ளது.
இறைவன் : சொக்கநாதர்
இறைவி : மீனாட்சி
தல தீர்த்தம் : சிவதீர்த்தம்
தல விருட்சம் : அரசமரம்
தல சிறப்புகள் : திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம் இது. இங்குள்ள சிவமூர்த்தி அளவில் பெரியவர். இது எமன் வழிபட்ட கோயில். இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர். மதுரையில் உள்ள பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையிலும் நன்மை தருவாருரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு கோயில்களுக்கும் நடுவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரரைவழிபட்டால் இந்நான்கும் பலன்களும் ஒருசேர கிடைக்கும்.
இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது. மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.
மதுரை மாநகரில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவ சமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயை தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் செய்து அந்த திருநீற்றைல எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது.
கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது. இங்குள்ள தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை விலகுகிறது. இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கும். இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம், குழந்தை வரம் ஆகியன கிடைக்கின்றன. சுவாமிக்கு வஸ்திரம் வழங்கினால் பெரிய அளவில் புண்ணியம் கிட்டும். கல்வி வரம், எடுத்தகாரியம் நடைபெற இத்தலத்தில் வழிபடலாம்.
காலை 6.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு