செக்கானூரணி, ஏகநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலத்தில் உள்ளது.
இறைவன் : ஏகநாதர்
இறைவி : ஆனந்தவல்லி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இங்குள்ள ஏகநாதர் கோவிலில், சித்தர்கள் மூவரது ஜீவசமாதிகள் உள்ளன. இந்த மடத்தை அருளானந்தம் சுவாமிகள் பராமரித்து வருகிறார். இந்த மடத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், சிற்பக்கலை, உலோக சிலைகள், ஓவியக்கலை, போர் கருவிகள் தயாரிப்பு, ராஜயோகம் உள்பட 16 வகையான பயிற்சிகளை அளிக்கும் இடமாக இருந்துள்ளது.ஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து பாண்டிய மன்னரை சந்திக்கும் முன்னர் இந்த மடத்தில் தங்கியிருந்ததாக செவிவழி செய்தி உள்ளது. மேலும் பாரதியார், மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேரும் முன்னரும், பணியில் இருந்து விலகிய பின்னரும் சிறிது காலம் இந்த மடத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு : சில ஆயிரம் வருடங்களுக்கு முன், திருபூலா நந்தீஸ்வரபுரத்தில் இன்றைய சின்னமனூர் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர் அருளானந்தம். அப்போது, பழனி போகரின் சீடர் புலிப்பாணியின் இரண்டாவது சீடரிடம் பயிற்சி பெற்ற 17 பேர், மானசரோவர் அனுப்பப்பட்டனர். ரிஷிகளின் வழியில் பயிற்சி பெற்ற அச்சீடர்களில், அருளானந்தம் மட்டும் சதுரகிரி யமவனத்தில், மணிப்புறா வாழும் பாறையில் தவம் செய்தார். அதன்பிறகு, நாகமலை நடுப்பகுதியில் காகபுஜண்டர் சித்தர் தவம் செய்ததாகக் கூறப்படும் குகை ஒன்றில் இறுதி தவம் செய்தார். அந்த அருளானந்தமே பின்னாளில் சத்குரு என்றழைக்கப்பட்டு, கிண்ணிமங்கலத்தில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்குக் கீழ் ஜீவசமாதி அடைந்தார். அவருடைய சீடர்களான மாணிக்கவாசக தம்பிரான் கன்னி மூலையிலும், சபாபதி தம்பிரான் வாயு மூலையிலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.
ஏகநாதர் கோவில் மண்டபத்தின் கீழ் நவபாஷான கிண்ணி உள்ளது. கோவிலைச் சுற்றி 16 சீடர்களும் ஆனந்தவல்லி அம்பாளின் 16 கோணங்களில் அமைந்துள்ளனர். இவர்களில் மூன்றாவது சீடர்தான் இக்குருகுல மடத்தை உருவாக்கினார். இவர் திருமணம் செய்து, தன்னுடைய சுற்றத்தாருக்காக ஊரை உருவாக்கி, கிண்ணிமங்கலம் என்றும், இம்மடத்தினை கிண்ணிமடம் எனவும் பெயர் சூட்டி, 117 -ஆவது வயதில் சமாதி அடைந்தார்.
கோவில் அமைப்பு : இந்த கிராமத்தில் உள்ள ஏகநாதர் பள்ளிப்படை கோவிலும், அதையொட்டிய மடமும் காணப்பட்டுள்ளது. பள்ளிப்படை கோவில் என்பது மன்னர்கள் அல்லது பெரும் வீரர்கள் நினைவாக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் கோவில் ஆகும். கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அந்த கோவில் அருகே நிலத்தை தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கிடைத்தது. அதை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர், அங்குள்ள தூண்களில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து காந்திராஜன் கூறியபோது, அந்த கல்தூணில் ‘ஏகன் ஆதன் கோட்டம்‘ என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டு கி.மு. 6-ம் நூற்றாண்டிற்கும் கி.மு. 2-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். பொதுவாக, பாண்டிய நாட்டில் உள்ள குன்றுகளில் பல தமிழ் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு இருந்தாலும், தூண் ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் தமிழ்நாட்டில் முதல்முறையாக இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மதுரை கீழடியிலும், அதையொட்டியுள்ள அகரம் கிராமத்திலும் தொடர்ச்சியாக தொல் பொருட்கள் கிடைத்துவரும் நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளும் சூழலில் மேலும் பல பழங்கால சின்னங்கள் கிடைக்கும் என்றார்.
காலை 6.00 மணி முதல் பகல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை