கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது
இறைவர் : குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்
இறைவி : தர்மசம்வர்த்தினி
தல தீர்த்தம் : குசலவ தீர்த்தம்
தலமரம் : பலா
தலச் சிறப்புகள் : சுவாமியும்,தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள், அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது. நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம்.
சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது. “குசலவம்’ என்றால் “குள்ளம்’ என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.
தல வரலாறு : கி.பி. 985 முதல் 1014 வரை ஆண்டு ஜெயம்கொண்ட சோழ மன்னர் இந்த கோவிலை பெரிய கற்கோவிலாக கட்டியதாக கூறப்படுகிறது. விஜய நகர மன்னர்களும் இங்கு திருப்பணி செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணிய தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.
குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் வால்மீகி முனிவர் ஆசிரமமாக இருந்தது. அங்கே லவன் - குசன் என்ற தன் குழந்தையுடன் சீதை வாழ்ந்தாள். வனவாசம் முடிந்து இராவணனுடன் போரிட்டு வெற்றி அடைந்தாயிற்று. சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. இவ்வளவுக்கு பிறகு நாட்டு மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டார் ராமர். ஒரு ஒற்றனை அழைத்தார். ‘நாடு நகரம் முழுவதும் சுற்றிவா, மக்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வா” என்றார். புறப்பட்டு போன ஒற்றன் சில நாட்கள் கழித்து திரும்ப வந்தான். ‘சொல்.. மக்கள் என்ன நினைக்கிறார்கள்” என்று கேட்டார் ராமர். சுவாமி அது ஒரு துணி வெளுக்கும் தொழில் செய்யும் குடும்பம். மனைவி ஒரு நாள் இரவு நேரத்தில் சூழ்நிலை காரணமாக தன் கணவனைப் பிரிந்து வெளி இடத்தில் தங்க நேர்ந்தது. மறுநாள் காலையில் கணவனிடம் திரும்பி வந்தாள். அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர் சேர்த்துக் கொணடது போல் உன்னை சேர்த்துக் கொள்ள நான் தயாராக இல்லை” என்றான். குடிமகனின் குரலுக்கு மதிப்பளிக்க எண்ணி ராமர், தனது சகோதரன் லட்சுமணனை அழைத்து, ‘சீதையை அழைத்துப் போய் காட்டில் விட்டு வா” என்று கூறினார்.
அன்று சீதை காட்டில் விடப்பட்டார். அந்த காட்டில் வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். நிஷ்டையில் இருந்த அவர் கானகத்தின் அசைவுகளைக் கொண்டே மனித சஞ்சாரம் நிகழ்ந்துள்ளதை அறிந்து கொண்டார். சீதையைக் கண்டார். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார். சீதையின் புதல்வர்களான லவன் -குசன் என்கிற இரு குழந்தைகளும் காட்டிலேயே வளர்ந்து அவர்கள் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர். ஒருநாள் கம்பீரமாக குதிரை ஒன்றுடன் சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்ற போது அவர்களை லவனும் - குசனும் தடுத்து நிறுத்தினர்.
இது அஸ்வமேத யாகத்திற்காக தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக ஸ்ரீராமர் அனுப்பி வைத்த குதிரை” என்றனர் வீரர்கள். ஆச்சரியப்பட்ட சகோதரர்கள், அந்த வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி விட்டு, குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர். குதிரையை மீட்க வந்தவர்களை லவ குசர்கள் தோற்கடித்து விரட்டினர். அனுமான் வந்து விஸ்வரூபமாய் நின்றார். அவரை ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர். கடைசியில் ராமரே வந்தார். வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து உக்கிரமாய் போரிடவே தகவல் வால்மீகிக்கு போனது. ஒடோடி வந்து அவரிடையே புகுந்து சமாதானம் செய்து வைத்ததுடன் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு வால்மீகியிடம் வேண்டினார் லவ-குசர்கள். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும் என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர்.
லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்று பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும். பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம்.
கோவில் அமைப்பு : கி.பி. 985 முதல் 1014 வரை ஆண்டு ஜெயம்கொண்ட சோழ மன்னர் இந்த கோவிலை பெரிய கற்கோவிலாக கட்டியதாக கூறப்படுகிறது. விஜய நகர மன்னர்களும் இங்கு திருப்பணி செய்துள்ளனர். கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் 40 தூண்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில்தான் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுவாமி சன்னதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. கோயில் நந்தவனத்தில் இரு வில்வ மரங்களுக்கு இடையே வேப்ப மரம் ஒன்று பிணைந்து இணைந்து நிற்கின்றது. அரிய அமைப்பிலான இந்த விருட்சங்களை வழிபடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். கோபுரத்திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர் காணப்படுகிறார்.
குறுங்காலீஸ்வரர் கோவில் 226 அடி நீளம், 137 அடி அகலம் கொண்டது. கோவில் இடது பக்கத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில் உள்ளது. சைவ-வைணவ ஒற்றமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இத்தலத்துக்குள் வால்மீகி முனிவர் தவக் கோலத்தில் உள்ளது போன்ற சிற்பம் உள்ளது. அருகில் சீதை, லவன், குசன் உள்ளனர். நுழைவாயிலில் 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தை தாண்டி சென்றால் கொடி மரம், பலி பீடங்களை காணலாம். அடுத்து 4 கால் மண்டபத்தில் நந்தி உள்ளார். நந்தியை கடந்து சென்றால் 40 தூண்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபத்தை அடையலாம். இந்த மண்டப தூண்களில் ஏராளமான கண்கவர் சிற்பங்கள் இருப்பதை காணலாம். லவ, குச இருவரும் அஸ்வமேதயாக குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்துக் கொண்டிருக்கும் சிற்பம் கலை நயம் மிக்கது. இந்த மண்டபத்தின் நுழையும் பகுதியில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சன்னதியும், சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன. சன்னதி இடது பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரும், வலது பக்கம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் சுமார் 4 அங்குல உயரமே கொண்ட லிங்க பாணத்தை கண் குளிர காண வேண்டும். லவனும், குசனும் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட இந்த லிங்கத்தை மனம் உருகி வழிபட்டால் எத்தகைய பித்ரு தோஷம் இருந்தாலும் விலகி விடும். இங்கு ஈசன் வடக்கு பார்த்து இருப்பதால் கருவறை கோஷ்டத்திலும் மாறுதலை பார்க்கலாம். விநாயகர், பிரம்மா, ஈஸ்வரனுக்கு பின்புறம் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை உள்ளனர். இந்த உள் பிரகாரத்தின் தொடக்கத்தில் நடராஜர், சூரியன், சந்திரன் உள்ளனர். கோமுக தீர்த்தம் விழும் இடத்துக்கு அருகில் சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது. இவரைத் தொடர்ந்து விக்னேஸ்வரர், ஜுரகேசுவரர், அகஸ்தீசுவரர், கணேசமூர்த்தி, சாஸ்தா, கார்த்திகேயன், லிங்கம், திருமகள், சைவநால்வர், ஞானவாணி, நாகர்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். ஈஸ்வரனின் இந்த பிரகார வலம் முடிந்து அம்பாள் சன்னதிக்கு செல்லலாம். பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார். பக்தர்களின் துயர் தீர்க்க அம்பாள் புறப்படுவது போல அறம் வளர்த்த நாயகியின் தோற்றம் உள்ளது. இவளை வழிபட திருமணம் கை கூடும். வியாதிகள் தீரும். மனக் குழப்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை. அம்மன் பிரகாரத்தை வலம் வந்து வழிபட்ட பிறகு அருகில் உள்ள நவக்கிரகங்களை வழிபடலாம். தாமரை பீடத்தில் நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் மனைவியுடன் சூரியன் உள்ளார். கீழே மற்ற கிரகங்கள் உள்ளன. வெளி சுற்றில் நந்தி சன்னதிக்கு வலது பக்கம் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளார். இவரை அருணகிரி நாதர் பாடியுள்ளார். இந்த சன்னதி அருகில் அண்ணாமலையார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். வெளி பிரகாரத்தை சுற்றி வந்தால் வில்வ விநாயகர், மடப்பள்ளி யாக சாலை ஆகியவற்றை காணலாம். லவன், குசன் இருவரும் உருவாக்கிய லவகுச தீர்த்தம் சிவால யத்துக்கும், பெருமாள் கோவிலுக்கும் பொதுவான தீர்த்தமாக உள்ளது.
ஒரு தடவை நந்தி சித்தம் கலங்கி தவித்தார். அவருக்கு ஈசன் தெளிவை உண்டாக்கினார். இதனால் நந்தி, ஈசனுக்கு கட்டுப்பட்டவர் போல மூக்கணாங்கயிறுடன் காணப்படுகிறார். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் இந்த நந்தியிடம் இருந்து தான் பிரதோஷ நிகழ்வு தோன்றியதாக கருதப்படுகிறது. இதனால் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு பிரதோஷம் பார்த்தால் ஆயிரம் பிரதோஷம் பார்த்ததற்கு சமமாகும். அதுபோல ஒரு சனி பிரதோஷத்தில் பங்கேற்றால், அது கோடி பிரதோஷத்தில் பங்கேற்று தரிசனம் செய்த பலனை தருமாம்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது. சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர். இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்” என்கிறார்கள். இத்தலத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசிமகம், சிவராத்திரி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
காலை 5.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை எழும்பூர், சென்ட்ரல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு