மாடம்பாக்கம், தேனுபுரீசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் தாம்பரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தாம்பரம் வேளச்சேரி முக்கிய சாலையில் வடக்கு நோக்கிச் சென்று ராஜகீழ்ப்பாக்கம் அருகே மாடம்பாக்கம் முக்கிய சாலையில் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம்.
இறைவன் : தேனுபுரீஸ்வரர்
இறைவி : தேனுகாம்பாள்
தல விருட்சம்: வில்வ மரம்
தல தீர்த்தம் : கபில தீர்த்தம்
தலச் சிறப்புகள் : மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சிவகாமி அம்மையுடனும் மாணிக்க வாசகருடனும் நடராசர் காணப்படுகிறார். கஜபிருஷ்ட விமானத்துடனமைந்த கருவறை யானையின் பின்புறம் போன்ற அமைப்பு இக்கோயிலின் சிறப்பு.
கோவில் அமைப்பு : கோயில் முன்மண்டபத்திலுள்ள 18 தூண்களும் அவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் குறிப்பிடத் தக்கவை. சுவாமி சன்னிதியிலுள்ள தட்சிணாமூர்த்தி ஆலமரத்தடியில் இல்லை. துர்க்கை கையில் கிளி காணப்படுகிறது. ஒரு தூணில் வடிக்கப்பட்டுள்ள சரபேசுவரருக்கு ஒவ்வொரு ஞாயிறன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது உற்சவரும் புறப்பாடாகிறார். ஒரு தூணில் விநாயகர் கையில் வீணையுடன் காட்சி தருகிறார். மற்றொரு தூணில் முருகன், யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இடது கையில் சேவல் இருக்கிறது. சிவனை வணங்கியபடி திருமால் மற்றும் பிரம்மா, கங்கா பார்வதியுடன் சிவன், வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமரையில் அமர்ந்த சிவன், மனைவியருடன் தெட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதம் தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை. இங்கு வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. முருகன், வடுக பைரவர், சரபேஸ்வரர் ஆகியோர் பிரார்த்தனை மூர்த்திகளாக இருக்கின்றனர். கிரக, நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சரபேஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
தல வரலாறு: கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். ஒரு லிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்களைத் தூவினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, “”மணலில் லிங்கத்தை வைக்க மனமில்லை,” என்றார். சிவன் அவரிடம், “”கையில் லிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியல்ல,” எனச் சொல்லி அவரை பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார். பசுவாக பிறந்த கபிலர், இங்கு சிவனை வழிபட்டு முக்திபெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, “தேனுபுரீஸ்வரர்’ எனப்பட்டார். “தேனு’ என்றால் “பசு’. இவருக்கு “உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்’ என்றும் பெயர் உண்டு.
சுந்தர சோழரின் அமைச்சரான அன்பில் அநிருத்தர் இக்கோயிலைக் கட்டியதாகவும் பின்னர் முதலாம் குலோத்துங்கனால் இது கற்றளியாக்கப்பட்டதாகவும், முன்மண்டபமும் அதிலுள்ள தூண்களும் பல்லவர்கள் காலத்தியது என்றும் விசய நகரப் பேரரசாலும் இக்கோயில் பராமரிக்கப்பட்டது என்றும் இக்கோயிலில் தற்காலத்திய கற்பலகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கற்பலகை கோயிலின் முன்புறம் திறந்து வைக்கப்பட்டுள்ள புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இறைவனும் இறைவியும் `சிற்றேரி ஆளுடைய நாயனார்' என்றும் `நம்பிராட்டியார்' என்றும் கூறப்பட்டிருக்கிறார்கள்.
ஜாதகரீதியாக வக்கிர தோஷம் உள்ளவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிறிய லிங்கத்திற்கு மல்லிகைப்பூ மாலை அணிவித்து, வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவிக்கிறார்கள். இவருக்கு வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றுவதும் சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, ஆலமரம் இல்லாமல் உள்ளார். சுவாமிகளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.00மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம், வேளச்சேரி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை