குன்றத்தூர், ஸ்ரீ கந்தழீஸ்வரர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் குன்றத்தூர் முருகன் கோயிலின் அடிவாரத்தில் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாகச் சென்றால் அடையலாம்.
இறைவன் : கந்தலீஸ்வரர்
இறைவி : நகைமுகை வல்லி
தல விருட்சம் : அரச மரம்
தலச் சிறப்புகள் : பெரிய வடிவ லிங்கமேனியில் சதுரவடிவ ஆவுடையாரில் வீற்றியிருக்கிறார். கண்ணப்ப நாயனார் சிவனின் கண்களில் காலை வைத்திருக்கும் கல் சிற்பம் அமைந்துள்ளது.
தல வரலாறு : பெரிய புராணம் எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கிவிட்டு, காவிரிக்கரையில் உள்ள கடவுளர்களை தரிசித்துவிட்டு, பாலாற்றங்கரையில் அருளும் இறைமூர்த்தங்களையும் பிரார்த்தித்துவிட்டு, குசஸ்தலை நதி பாயும் ஊரை நெருங்கினார். வழியில், அற்புதமான சிவாலயத்தைக் கண்டார். அது சோழ மன்னனால் கட்டப்பட்ட கோயில். வாழையும் தென்னையும் அதிகம் பயிராகும் பூமி அது. மலையும், குளிரும் கைகோர்த்த மண்டலம் அது. மலையின் அடிவாரத்தில் உள்ள இறைவனைத் தரிசித்து, அங்கேயே சில காலம் தங்கி தவம் செய்வது என்று முடிவு செய்தார் அந்தச் சிவனடியார். பிரமாண்டமான சிவலிங்கமூர்த்தத்தின் சாந்நித்தியத்தில் தன்னை இழந்தார். தனது சிந்தனைகள் முழுவதையும் சிவபாதத்துள் குவித்து சமர்ப்பித்தார். தன்னையே சிவனாரிடம் ஒப்படைத்தார். இதைத்தான் சரணாகதி என்கின்றனர்.
1000 வருடங்கள் மேற்பட்ட கோயில் , சோழர்களால் கட்டப்பட்ட கோயில் , கி.பி 1241 திரிபுவன சக்கரவத்தி ஸ்ரீ ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கோயில் . அதன் பிறகு கிருஷ்ண தேவராயர் இவ் கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .
பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் இவ் வழியே வரும்போது இக்கோயிலை கண்டு பெரிய திருமேனியுடன் வீற்றியிருக்கும் ஈசனிடம் சரணாகதி அடைந்தார். அவரையே நினைத்து தவம் செய்தார். ஈசனுடன் சரணாகதி ஆனார் அப்போது ஒருநாள் இறைவன் அவருக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். அந்த கணமே அவருக்கு தன் கர்வம் தொலைந்தது போல் உணர்ந்து மெய்சிலிர்த்து போனார் . உடனே இறைவனை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். தன் பற்றுதலை அழைத்ததால் கந்தழீஸ்வரர் என்று பெயர் சூட்டினார். கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம் , கந்தலீஸ்வரர் என்றால் பற்றுதல் நீக்கியவர் என்று அர்த்தம்.
ஒரு காலத்தில், சைவ,வைணவ, சாக்த, கொளமார வழிபாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்ட இடம் குன்றத்தூர் ஆகும். 'கந்து' என்றால் மரம். ஆதிகாலத்துமுதல், மரத்தைக் கடவுளாக பாவித்து வந்த மக்கள், பின்னர் அம்மரம் முதிர்ந்த பின் அதை மையமாக வைத்துக் கோவில் எழுப்பியுள்ளனர். அந்தக் கோயிலே கந்தழீஸ்வரர் ஆலயம்.
தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழித்து பின் மனம் அமைதி பெற திருத்தணி நோக்கி புறப்பட்ட முருகன் குன்றத்தூர் மலையில் தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது. ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரகாரத்தில் நர்த்தன விநாயகர் தட்சிணாமூர்த்தி துர்க்கை ரிஷபாரூடர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் அருகே சேக்கிழாருக்கென தனிக்கோயில் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் மகளை மணந்த அழகிய சீலன், இக்கோயிலை நன்கு பேணினான். அவனே சிதம்பரம் நடராசர் ஆலயத் தெற்கு கோபுரத்தையும் கட்டினான். காஞ்சியைசுற்றியுள்ள பல கோவில்கள் சீரமைக்கப் பட்டதில், கந்தழீஸ்வரர் கோவிலும் ஒன்று.
சிவராத்திரி, பிரதோஷம் சிவராத்திரி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள அம்மனை வழிபட்டால் நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு