தரப்பாக்கம், ஸ்ரீ கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை நகரின் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம், அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் தரப்பாக்கத்தில் பொழிச்சலூர் அகத்தீஸ்வரர்கோயில் அருகில் அமைந்துள்ள சிவத்தலமாகும். மதுரவாயல் இருந்து பெருங்களத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன் : ஸ்ரீ கைலாசநாதர்
இறைவி : ஆனந்தவல்லி
தலச் சிறப்புகள் : ஆவுடையார் சிறியதாக இருக்கிறார் . இறைவனின் இடது புற சன்னதியில் ஆனந்தவல்லி தயார் உள்ளார். இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் பொழுது கிரகண பூசை செய்யப்படுகிறது.பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில்களின் நடை அடைக்கப்படும். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத்திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.
கோயில் விஜயநகர கட்டடக் கலை பாணியில் உள்ளது. பவுர்ணமியன்று மாலையில் பிரத்யங்கிரா, காயத்ரி மற்றும் சுதர்சன ஹோமம் நடக்கிறது. படிப்பு நன்றாக இருக்க விரும்புவோர் இதில் பங்கேற்கின்றனர். ஒரு சமயம் பெருமழை பெய்யவே, கோயில் அருகிலுள்ள அடையாறில் வெள்ளம் பெருகி, ஊருக்குள் புகும் அபாயம் உண்டானது. இவ்வேளையில் கரையில் இருந்த கோயில் தேர், ஆற்றின் குறுக்கே விழுந்தது. இதனால், வெள்ளத்தின் திசை மாறி, மக்கள் காப்பாற்றப் பட்டனர். இவ்வாறு, இக்கட்டான சூழ்நிலைகளில் பக்தர்களைக் காப்பவராக இங்குள்ள சிவன் அருளுகிறார்.
தல வரலாறு: முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த சித்தர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காலப்போக்கில் வழிபாடு நின்று, லிங்கம் மண்ணில் புதைந்து போனது, பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், இங்கு லிங்கம் இருப்பதை உணர்த்தினார். கைலாசநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தொன்மையான காலத்தில் பற்பல சித்தர்கள், இத்திருத்தலத்தில் தங்கி, சிவபெருமானை உருவாக்கி வழிபட்டு நின்றனர். சித்தர்கள் சித்தி பெற்று தமது எண்ணம் பூர்த்தியான பிறகு மறைந்திருந்து மாற்று பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வந்தனர். அப்போது அவர்கள் உருவாக்கி வழிபட்ட லிங்கமே இன்று நமக்கு கைலாசநாதராக வடிவெடுத்து நிற்கின்றார். அத்ரி போக மூல ஞானப் பொய்யா உரோம வகத்திய ரேத்திய அய்யங் கயிலாயநாதனே கருதிய வானந்தவல்லி யம்மையாளையாண்டனே தரவாக்க தலைமுறைவானே மறவா னேயொரு பொழுதுமே என்றார் கருவூர் சித்தர். இத்திருக் கயிலாயநாதனை, ஆனந்தவல்லி அம்பிகை மணாளனை அத்ரி, போகர், திருமூலர், பொய்யாமொழியார், உரோமர், அகத்தியர் என எண்ணற்ற சித்தர்கள் தொழுதிருக்கிறார்கள்.
தோடங் கறுக்கியே மங்களத்தை கூட்டியே தனத்தை பீறிட வைப்பாள் பொற்பாதம் போற்றுதுமே’’ - என்றார் குதம்பைச் சித்தர். தோஷம் எதுவாயினும் அழிக்கும் ஆற்றல் உடையவள் இந்த ஆனந்தவல்லி அம்பிகை. செவ்வாய் தோஷம், நாகதோஷம், புத்திரதோஷம், காலசர்ப்ப தோஷம், சனி தோஷம் போன்ற நூற்றி அறுபத்து எட்டு தோஷங்களையும் தம்மை தொழுது நிற்கும் பக்தனுக்கு போக்கியருள்பவள் என்பது சித்தர் வாக்கு.
கைலாச நாதர் மேற்கு நோக்கி அருள்பாலிப்பதினால் சனியினால் உண்டாகும் அவதி இவரை ஆராதிப்போர்க்கு கட்டாயம் அகலும். ‘‘மந்தனால் பட்ட கொடுமை யோடுமே படுந்துயரகலுமே பஸ்ஸிமமே யருளும் கயிலாய நாதனை கிரகணகாலத்து அபிஷேகித்து நிற்பார் தமக்கே’’ என்றார் காக புஜண்டர் எனுஞ் சித்தர். மேற்கு நோக்கி அருளும் கயிலாயநாதரை கிரகணகாலத்தில் அபிஷேகம் செய்து ஆராதிப்போர்க்கு சனிபகவான் நல்லருள் சுரந்து ஏற்றமான வாழ்வை தருவான் என்பதாகும். இது கிரகணகோயில் என்பதற்கு அடையாளமாக சூரிய-சந்திரரை ராகு-கேது விழுங்கும் சிற்பம் இங்குள்ளது. முழுமதி தன்னில் ப்ரத்யங்கிரா காயத்ரி மற்றும் சுதர்சன யாகம் செய்தால் கல்வி விருத்தி, செல்வ விருத்தி, விரோதிகள் நாசம் ஏற்படும் என்றார் கோளர் எனுஞ் சித்தர்.
கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம், மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : பல்லாவரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு