சேலையூர், அமிர்தகடேசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வேளச்சேரி முக்கிய சாலையில் கேம்ப்ரோடு சந்திப்பு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஐந்து நிமிட நடைப்பயணத்தில் கோயிலை அடையலாம்.
இறைவன் : அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அபிராமி
தல தீர்த்தம் : அமிர்த புஷ்கரணி
தலச் சிறப்புகள் : மூலவர் அமிர்தகடேசுவரர் சுயம்பு லிங்கமாகவும் அபிராமி அம்மனும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று இந்த 18 நதிகளிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு இச்சிலைகளுக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றபின் அந்நதிநீர்கள் குளத்தில் ஊற்றப்படுகின்றன. திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி போன்று இங்கும் நடைபெறுகிறது. தை அமாவாசையன்று, மாலை அபிராமி அந்தாதி பாடப்படுகிறது. இங்குள்ள அம்மன் ஒரு அடி முன்னே எடுத்துவைத்தது போல இருப்பது ஒரு சிறப்பு.
கோயில் அமைப்பு : இக்கோயிலின் இராஜகோபுரம் மூன்றுநிலை கொண்டுள்ளது. கோயிலுக்குள்ளாக அமிர்தபுஷ்கரிணி செவ்வக வடிவில் அமைந்துள்ளது. அதன் மூன்று உட்சுற்றுச் சுவர்களில் கங்கை முதல் பொருநை வரையான 18 நதிகளின் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அந்தந்த சிலைகளுக்கருகில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. சிலைகளிலிருந்து நீர் கொட்டுவதுபோல அமைந்துள்ளது. சுவாமி மற்றும் அம்மன் சன்னிதியை அடுத்து அமைக்கப்பட்டுள்ள சோடச மகாலட்சுமி மகாமண்டபத்தின் பதினாறு தூண்களில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, கீர்த்திலட்சுமி, ஞானலட்சுமி, சௌபாக்கியலட்சுமி, புஷ்பலட்சுமி, சௌந்தர்யலட்சுமி, சக்திலட்சுமி, வராகிலட்சுமி, சாம்ராஜ்யலட்சுமி, ஆரோக்கியலட்சுமி, சியாமளலட்சுமி, மேதாலட்சுமி, வித்யாலட்சுமி, சாந்திலட்சுமி பதினாறு இலட்சுமியரின் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. உட்சுற்றுச் சுவரில் நர்த்தன விநாயகர், மகா விஷ்ணு, பிரம்மா, தட்சிணா மூர்த்தி, துர்க்கை சன்னிதிகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், சீனிவாசன் -பத்மாவதி தாயார், வள்ளி-தேவானை உடனுறை சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், கால பைரவர், சூரியர், சந்திரன், ஐயப்பன், ஆஞ்சநேயர் மற்றும் ஆதிபராசக்தி ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனி சன்னிதிகள் இங்குள்ளன.
தல வரலாறு : ஒரு காலத்தில் மண்மேடாக இருந்த இந்த இடத்தில் மண்ணை அகற்றும் போது அமிர்தகடேசுவரர் மூலச்சிலையும்அருகிலுள்ள முத்தாலம்மன் கோயிலில் கிடைத்த சில சிலைகளில் அபிராமி அம்மன் சிலையும் கிடைத்தன. சிலைகள் கிடைத்ததால் இவ்வூர் சிலையூர் எனப் பெயர்பெற்று நாளடைவில் அப்பெயர் சேலையூர் என மாறிவிட்டது. 1972 ஆம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அபிராமி என்றாலே, சட்டென்று எல்லோருக்கும் நினைவுக்கு வரும் ஊர் திருக்கடவூர். தை அமாவாசை நாளில் திருக்கடவூர் சென்று அன்னையைத் தரிசிக்க இயலாதவர்கள், இங்கு சென்னை அடையாறில் அமைந்திருக்கும் மத்ய கைலாஸ் என்றறியப்படும் நடுக்கயிலாயத்தில் சென்று அன்னையைத் தரிசிக்கலாம். இங்கு அன்னை அபிராமிக்கு தனிச் சந்திதி அமைத்துள்ளார்கள். இச்சந்நிதியில் அபிராமி பட்டர் மற்றும் மகாகவி பாரதி இருவருக்கும் உத்ஸவ சிலைகள் அமைத்திருப்பதும் தனிச் சிறப்பாகும். இங்கு சென்று அன்னையைத் தரிசிக்கலாம். அன்றைய நாள் மாலை அபிராமி அந்தாதி பாராயணம் இத்திருக்கோயிலில் நடைபெறுகிறது. இதேபோன்று சைதை காரணீஸ்வரர் கோயிலில் அன்னை சொர்ணாம்பிகையையே அபிராமியாக அன்றைய நாளில் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணமும், நிலவுக் காட்சியும் காட்டுவார்கள். சைதை செட்டித் தெருவிலுள்ள காமாட்சி அம்மன் கோயிலிலும் நிலவுக்காட்சி காட்டப்படுகிறது. மேலும், சென்னையின் திருக்கடவூர் என்றே அறியப்படும் அன்னை அபிராமியின் திருக்கோயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சேலையூர் கேம்ப் ரோடில் அமைந்துள்ள அபிராமி கோயிலுக்கும் சென்று தரிசிக்கலாம்.
பழங்காலத் தமிழ் மன்னர்களான பல்லவர் காலத்தில், திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலைப் போலவே கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோயில் அதன்பின்னர் மன்னர்களிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக நிறுத்தப்பட்டு அப்படியே மண்மேடாக மாறியிருக்கலாம் என்றும், படையெடுக்கும் காலத்தில் இந்தச் சிலைகள் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
1994 முதல் பிரதோஷ பூஜை நடைபெற்று வருகிறது. 1996-ல் பதினாறு கால் மண்டபம் எனப்படும் ஷோடச லக்ஷ்மி மஹா மண்டபம் ஷோடச லக்ஷ்மியுடன் அந்தந்த லக்ஷ்மியின் யந்திரங்கள் பதிப்பிக்கப்பட்டு, மண்டபத்தைக் கட்டி முடித்தோம். 1998-99ல் நடராஜர் சிலையை வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன்படியே நடராஜர் சிலையும் அமைக்கப்பட்டு வருடத்தில் ஆறுமுறை அவருக்கு அபிஷேகம் நடத்துகிறோம். இதன்பின் அபிராமி அமிர்தகடேஸ்வரருக்கு ஐம்பொன் சிலைகளை உருவாக்கினோம். அபிராமி அந்தாதி பாடியவாறே பொற்குழம்பை ஊற்றி அபிராமி ஐம்பொன் சிலையை உருவாக்கினார்கள். அதேபோன்று தேவாரம் பாடியவாறே அமிர்தகடேஸ்வரர் சிலையை உருவாக்கினார்கள். பங்குனி உத்திரத்தன்று அபிராமி அமிர்தகடேஸ்வரரின் திருக்கல்யாண வைபவத்தை ஆரம்பித்தோம். திருக்கல்யாண வைபவத்துக்குப்பின் அபிராமி அமிர்தகடேஸ்வரர் திருவீதி உலா வருவார்கள். நடராஜர் ஆருத்ரா தரிசனத்தன்று திருவீதி உலா வருவார்.
இதற்குப்பின்னர் கோயில் அருகில் அபிராமி அமிர்த புஷ்கரிணியை (திருக்குளம்) அமைக்க முடிவு செய்தனர். மக்களின் நன்கொடையால் திருக்குளப் பணிகள் இனிதே நடைபெற்றது. திருக்குளத்தைச் சுற்றிவர நடைபாதை அமைத்து, சுற்றுச்சுவர்களில் வடக்கே கங்கை முதல் தெற்கே காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவது போல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று சிறப்பாக இந்த நதிகளுக்கு விழாவும் கொண்டாடுகிறார்கள்.
அபிராமிக்குச் சிறப்பான தை அமாவாசையன்று, மாலை 4.30-5க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த புஷ்பாஞ்சலியில் உதாரணத்துக்கு 300 பேர் பங்குபெறுகிறார்கள் எனில், ஒரு பாடலுக்கு 3 கூடை புஷ்பங்களை அம்பாளுக்குச் சமர்ப்பிப்பார்கள். இவ்விதம் புஷ்பாஞ்சலியுடன் நடைபெறும். அபிராமி அந்தாதி பாராயண நிறைவில் அம்மனுக்கு 9 வகையான பிரசாதங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மாசிமகம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று பதினெட்டு நதிகளின் நீர் கொணரப்பட்டு, அத் தீர்த்தத்தால் பதினெட்டு நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் திருக்குளத்தில் கலக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் 18 நதிகளிலும் தனித்தனியாக கொட்டும் தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடிக் கடைசியில் 18 நதி நீரும் கலந்துள்ள திருக்குளத்தில் நீராடி அமிர்தகடேசுவரரையும் அபிராமி அம்மனையும் வணங்குவர். அம்மனை ஒருதரம் சுற்றிவந்தால் ஷோடச மண்டபத்தில் அமைந்திருக்கும் பதினாறு லட்சுமிகளை வலம் வரும் பலனுண்டு. ஞாயிற்றுக்கிழமை மாலையில் சரபேசுவரருக்குச் சிறப்பு பூசை நடைபெறுகிறது.
காலை 8.00 முதல் முதல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு