கீழ்படப்பை, வீரட்டேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் தாம்பரம்-காஞ்சிபுரம் சாலையில் படப்பை என்ற கிராமத்தில் கீழ்படப்பையில் ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தாம்பரத்திலிருந்து கீழ்படப்பை சென்று அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயிலை அடையலாம்.
படப்பை என்றால் பூஞ்சோலை என்று பொருளாகும். பூக்கள் நிறைந்த சோலையில் இறைவர் இருப்பதால் இவ்விடம் படப்பை என்றழைக்கப்படுகிறது. இது உப வீரட்டத்தலமாகக் கருதப்படுகிறது. இத்தலம் வழியாக ஞானசம்பந்தர் விருத்தாச்சலம் சென்றபோது இவரை வணங்கி இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளதால் தேவார வைப்புத்தலமாகும்.
இறைவன்: வீரட்டேசுவரர்
இறைவி : சாந்தநாயகி
தல விருட்சம் : மாமரம்
தலச் சிறப்புகள் : மூலவர் சதுர வடிவில் ஆவுடையாருடன் லிங்கத் திருமேனியாகக் காட்சியளிக்கிறார். மூலவரை சந்திரன் வழிபட்டதால் முன் மண்டபத்தில் இரு கைகளில் மலரை வைத்தபடி சந்திரனின் புடைப்புச் சிற்பம் உள்ளது. திருச்சுற்றில் தாமரை பீடத்தில் நவக்கிர மண்டபம் உள்ளது. இங்குள்ள விநாயகர் தாயின் பெயர் இணைந்த நிலையில் சாந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். அகோர வீரபத்திரர் வடக்கு நோக்கிய நிலையில் உள்ளார். அம்பாள் தனி சன்னதியில் தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவரது பாதத்தின்கீழ் ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டுள்ளது.
இவளே, இங்கு பிரதானமானவள் ஆவாள். எனவே, கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் இவளை வணங்கிவிட்டே, சிவன் சன்னதிக்குச் செல்கிறார்கள். இதற்காக, நுழைவு வாயிலை அடுத்து அம்பாள் சன்னதி முதலில் அமைக்கப்பட்டிருக்கிறது.அம்பாளை வெளியில் இருந்து பார்க்கும்போது, முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சற்றே குனிந்து பார்த்தால்தான் அம்பிகையை முழுமையாக தரிசிக்க முடியும். பணிவை உணர்த்தும் விதமாக இவளது சன்னதி இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பணிவு குணம் உண்டாகவும், எதற்கும் விட்டுக்கொடுக்கும் தன்மை உண்டாகவும் இவளுக்கு அபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
பொதுவாக பிள்ளைகளின் பெயருடன், தந்தையின் முதல் எழுத்தையோ அல்லது அவரது பெயரையோ பெயருடன் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால்,இத்தலத்தில் உள்ள விநாயகர், தன் தாயின் பெயருடன் சேர்த்து அழைக்கப்படுகிறார். பார்வதியால், உருவாக்கப்பட்டவர் என்பதால் விநாயகர், அம்பிகையின் செல்லப்பிள்ளை ஆகிறார். எனவே, இவர் இத்தலத்து அம்பிகை சாந்தநாயகியின் பெயரால், சாந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையின் மீது காட்சி தரும் இவர், தன்னை வணங்கும் பக்தர்களின் கோபங்களைக் குறைத்து, சாந்த குணத்தை தருபவராக அருளுவதாலும் இப்பெயரில் அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.
தல வரலாறு : தட்சனின் பிள்ளைகளான கிருத்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 பேரை சந்திரன் மணந்தாலும் ரோகிணி மீது மட்டுமே அன்பு காட்டியதால் மற்றவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது. இதனைப் பற்றி தம் தந்தையான தட்சனிடம் அவர்கள் எடுத்துக் கூறினர். தட்சன் சந்திரனின் கலைகள் தேயும்படி சாபமிட்டான். விமோசனம் தேடி சந்திரன் பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டான். அவ்வாறே இங்கும் ஒரு லிங்கத் திருமேனியை வைத்து வழிபட்டான்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இத்திருக்கோயில் சிதிலமடைந்திருந்த காரணத்தினால் இதனை சீரமைக்க இக்கிராம மக்களின் முயற்சியாலும், பரமேஸ்வரப் பெருமானின் திருஉளப்படியும் முழுவதும் கருங்கல் திருப்பணியாக நடைபெற்று வருகிறது. சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மணிமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு சிற்றரசர்கள் ஆண்டு வந்துள்ளனர். அக்காலத்தில் போர்புரிய பயிற்சியளிப்பதற்கான ஊராக படப்பை இருந்துள்ளது. அதன்படியே போரில் வெற்றி பெறும் பொருட்டு சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே வீரட்டேஸ்வரர் திருக்கோயிலாகும். அந்தப்போரில் வெற்றிபெற்ற பின்னர் இக்கோயில் கற்றளியாக கட்டப்பட்டது. அதன்பிறகு அவ்வூரில் குடியேறிய கைத்தறி நெசவாளர்களால் இக்கோயிலில் வழிபாடுகள் செய்யப்பட்டது.
கோவில் அமைப்பு : இத்திருக்கோயில், மஹாமண்டபம், அர்த்தமண்டபம், அந்தராளம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி வீரட்டேஸ்வரர் அமைந்து அருளுகின்றார். சுவாமிக்கு பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவமைப்பு உள்ளது சிறப்பு. மஹா மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பிகை சாந்தநாயகி அபய, அஸ்தம் தாங்கி வரத முத்திரையோடு அருளுகின்றார். வெளிச்சுற்றில் நந்திமண்டபம், கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, தட்சாணமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை அலங்கரிக்கின்றனர். மேலும், கன்னிமூலை கணபதி, காசி விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், சந்நிதிகள் அமைந்துள்ளன. ஈசான்ய பகுதியில் வடகிழக்கில் பைரவர் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளன. சூரியன், சந்திரன் நால்வர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் ஓரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
சந்திரன், இங்கு வழிபட்டதை உணர்த்தும்விதமாக, கோயில் முன் மண்டபத்தில் இரு கைகளில் மலர் வைத்தபடி, சந்திரன் காட்சி தருகிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் தாமரை பீடத்தில் நவக்கிரக மண்டபம் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு. அகோர வீரபத்திரர், தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியிருக்கிறார். பவுர்ணமிதோறும் இவருக்கு வெற்றிலைக் காப்பிட்டு, விசேஷ பூஜை செய்கின்றனர். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு நான்கு கால பூஜையும் நடக்கிறது. காளத்தீஸ்வரர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோரும் உள்ளனர்.
அரசாங்க வேலை, தனியார் துறையில் வேலை வேண்டி, இத்தல ஈசனை வழிபட்டால் பரிபூரணமான திருவருள் கிட்டும். மாமியார், மருமகள் இடையே ஏற்படும் மனக்கசப்புகள் நீங்க வழிபடவேண்டிய தலமாகும். சகோதரர்களிடையே ஏற்படும் தோஷங்கள் தீர, இங்கு வந்து வழிபடவேண்டிய தலம். தந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பின் அவரது பிள்ளைகள் சுவாமியை மனமுருகி வழிபட அந்நோய் குணமாகும். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்களின் குறைபாடுகள் இத்திருக் கோயிலிலுள்ள சந்திரனை வழிபட நீங்கும்.
சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தில், திருநாவுக்கரசர் குருபூஜை, ஆடி மாத சுவாமி நட்சத்திரத்தில் சுந்தரர் குருபூஜை விழா நடக்கிறது. இந்த விழாக்களின் போது நாவுக்கரசர், சுந்தரருக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் புறப்பாடாவர். சுந்தரர், வெள்ளை யானையில் கைலாயம் சென்றதால், இவ்விழாவின்போது யானை வாகனத்தில் எழுந்தருளுவார். இந்த தரிசனம் கண்டால், முக்தி கிடைக்கும். இவற்றுடன் கார்த்திகை, மகாசிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. மனதைரியம் அதிகரிக்கவும், பயம் நீங்கவும், செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றவர்கள் மன அமைதிக்காகவும், தீயவர்களிடமிருந்து விலகியிருக்கவும் வீரட்டேஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்தில் வேண்டிக்கொண்டு, பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வில்வ இலை அர்ச்சனை செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம், காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு