அழிசூர், அருளாலீசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேருரிலிருந்து 9 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அழிஞ்சல் மரத்தடியில் அகத்தியர் இறைவனை வழிபட்டதால் இவ்விடம் அழிசூர் என்றழைக்கப்படுகிறது.
இறைவன் : அருளாலீசுவரர்
இறைவி : அம்புஜ குசலாம்பாள்
தலச் சிறப்புகள் : மூலவர் சன்னதி கஜபிருஷ்ட வடிவில் உள்ளது. இறைவி அபய முத்திரையுடன் தனி சன்னதியில் உள்ளார்.அருளாலீஸ்வரர் ஸ்ரீ அகஸ்திய முனிவரால் வழிபடப்பட்டவர். இறைவன் அருளாலீஸ்வரர் அழிஞ்சில் மரத்தால் ஆனதாக கூறுகிறார்கள்.
கோவில் அமைப்பு : கி. பி 1122 ம் ஆண்டு விக்கிரம சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ அருளாலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. செய்யாறு நதியின் தென்கரையில் அமைந்துள்ள கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. கல் தூண் துவஜஸ்தம்பமாக உள்ளது. வெளிச்சுற்றில் நந்தி மற்றும் பலி பீடம் ஆகியவை உள்ளன. சோழர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. பின்னர் கி.பி.1123இல் விக்கிரம சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோயில் உள்ளது. முதல் திருசசுற்றில் சிங்கத்தூண் மண்டபத்தில் சக்கர விநாயகர், கோயில் குளம், கோயில் மரம், நந்தி மண்டபம், அலங்கார மண்டபம் ஆகியவை உள்ளன. மகாமண்டபம், நவக்கிரக சன்னதியை அடுத்து பலி பீடமும் சிங்க மண்டபமும் உள்ளன. இக்கோயிலுக்கு மதில் சுவர்கள் இல்லை. இதற்கு மாற்றாக கற்பலகைகளால் ஆன சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன் எல்லைக்கு வெளியே விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் கொடிமரம் கல் தூணில் எழுப்பப்பட்டுள்ளது. கோயிலின் தென்புற நுழைவாயிலில் மங்கள விநாயகர் காட்சி தருகிறார். இடிபாடுகளுக்குள் சிக்கயுள்ள ஈசனைக்காணும்போது நம் கண்கள் பனிக்கின்றன. முருகன், பைரவர் சன்னதிகளும் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சிலைகளே இல்லாத இரு சன்னதிகள் காணப்படுகின்றன. அங்கு எந்த மூர்த்தங்கள் இருந்தன. எங்குமில்லாத சிறப்பாக ஸ்ரீ அருளாலீஸ்வரர் கருவறை அருகே ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப்பெருமாள் காட்சி தருவது வியப்பை அளிக்கிறது.
தல வரலாறு : இந்த சிவாலயம் முன்னொரு காலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று சிறப்புற விளங்கியது என்பது இங்குள்ள கல்வெட்டுகளிருந்து தெரிகிறது. தொடர்ந்து வந்த படையெடுப்பாலும் பராமரிபின்மையாலும் கால ஓட்டத்தில் இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கோயில் தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. சுவாமி விமானம் சில மாதங்களுக்குமுன் இடிந்து விழுந்துவிட்டது. கற்குவியலுக்கு இடையில் லிங்கத்தின் மேல் பகுதி மட்டும் தெரிகிறது. கோயிலில் எங்கு நோக்கினாலும் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இந்த ஆலயத்தின் நந்தியம்பெருமானை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். காளை ஒன்று வயலில் மேய்ந்துவிட்டு மர நிழலில் படுத்து ஏகாந்தமாக அசை போட்டுக்கொண்டிருக்கும் காட்சி எப்படி இருக்குமோ அதே கலை அம்சத்துடன் சிற்பி இந்த நந்தியை வடிவமைத்துள்ளான். இந்த நந்தியம்பெருமானை வில்வம், அருகம்புல், வெல்லம், ஏலம் கலந்த பச்சரிசி கொண்டு வழிபட்டால் வேண்டும் வரம் கிட்டுமாம். பிரதோஷ காலத்தில் வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்குவதோடு நோயற்ற வாழ்வு கிட்டும் என்று கூறுகிறார்கள். சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு