ஆனூர், அஸ்திரபுரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து 12 கி.மீ. தொலைவில் பாலாற்றின் கரையில் பொன்விளைந்தகளத்தூர் அருகே ஆனூர் அமைந்துள்ளது. மேற்கிலிருந்து கிழக்காக பாயும் பாலாறு செங்கல்பட்டை அடுத்து வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து ஆனூரை வளமாக்குகிறது.
இறைவன்: அஸ்திரபுரீசுவரர்
இறைவி : சௌந்திரநாயகி
தலச் சிறப்புகள் : அர்ஜுனன் சிவ அஸ்திரம் பெற தவம் இருந்த தலங்களில் இதுவும் ஒன்று. கருவறை நுழைவு வாயிலின் அருகே இடது பக்கச்சுவரில் ருத்ராட்ச மாலை அணிந்த அடியவர் சிற்பமொன்று அமர்ந்த கோலத்தில் வலது கரத்தில் ஓலைச் சுவடியைத் தாங்கியும் அருகில் விபூதி கலயம் போன்ற பூஜை பாத்திரத்துடனும் காணப்படுவது சிறப்பாகும்.
தல வரலாறு : இன்று ஆனூர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்ததைக் காண்கிறோம். பிற்கால பல்லவர், சோழ மன்னர்கள் காலத்தில் இந்தக் கோயில்கள் சிறப்பான வழிபாட்டில் இருந்து வந்த தகவல்களைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் ஆனூர் ஆகிய சத்தியாசிரய குல கால சதுர்வேதி மங்கலம் என்ற இவ்வூர் சிறப்புப் பெற்று விளங்கியிருக்கிறது. ஆனூரில் வேத பாடசாலை செயல்பட்டு வந்து, அதில் மாணவர்கள் பயின்று வேத சாஸ்திரங்களில் தேர்ந்து விளங்கி இருக்கிறார்கள் என்கிற அரிய செய்தியையும் காண முடிகிறது. சிவன் கோயில் திருவம்பங்காட்டு மகாதேவர் என்றும், பெருமாள் கோயில் சித்திரமேழி விண்ணகர் என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. பல்லவ மன்னன் கம்ப வர்மன், பராந்தக சோழன், ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன் ஆகிய மன்னர்கள் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில்லைப் போற்றி, வழிபாட்டுக்கு தானம் அளித்த செய்திகளைக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. ஆனூர் ஆளும் கணம் அதாவது கிராம நிர்வாக சபையின் உறுப்பினராக இருந்த ஸ்ரீதர கிரமவித்தன் என்பவன், இக்கோயிலில் விளக்கெரிக்க தானம் அளித்திருக்கின்றனர். ஆனியூர் மகா சபையினர் ராஜராஜ சோழன் காலத்தில் அந்தணர் ஒருவருக்கு, பட்ட விருத்தியாக நிலம் அளித்தனர். அவர் சாம வேதத்தில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இக்கோயிலில் நான்கு மாணவர்களுக்கு வியாகரணம், இலக்கணம் முதலிய பாடங்களை சொல்லித் தர வேண்டும் எனவும், மாணவர்களுக்கு நாள்தோறும் உணவும் வழங்க வேண்டும் எனக் கல்வெட்டு குறிக்கிறது. நிலவருவாயிலிருந்து இக்கோயிலில் கல்விப்பணி நடைபெற்றதையும் அறிகிறோம்.
இந்தக் கிராமத்தின் அருகே இருக்கின்ற ஒரு மலையை அஸ்திர மலை என்றே குறிப்பிடுகிறார்கள். அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்த ஊர் என்பதால், இங்கே குடி கொண்டுள்ள ஈசனுக்கு அஸ்திரபுரீஸ்வரர் என்கிற திருநாமம் வந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். கிழக்கு நோக்கிய திருக்கோயிலின் முன்பாக திருக்குளம் காணப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் தீபஸ்தம்பமும் அதன் அடிப்பகுதியில் விநாயகர், முருகன், அதிகார நந்தி, திரிசூலம் ஆகிய அழகிய வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுர வாயிலில் இதனை அடுத்து, அழகிய வேலைப்பாடு மிக்க தாமரை வடிவ பலிபீடம் அமைந்துள்ளது. அடுத்து நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ள மண்டபம் உள்ளது. பிரதோஷ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் பொதுமக்களால் மிகவும் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்படுகிறது. திருக்கோயில், சந்திநி முன்மண்டபம், மகாமண்டபம், கருவறை, அம்மன் சந்நிதி என்ற அமைப்புகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத் தூண்களில் சிவன் மற்றும் திருமாலின் பல்வேறு வடிவங்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன. மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கி அம்மன் சந்நிதி உள்ளது.
கோவில் அமைப்பு : திருக்கோயிலின் முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளது. கருவறை தேவ கோட்டங்களில் யோக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை வடிவங்களைத் தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் சண்டிகேசுவரர் வடிவம் மிகவும் தொன்மை சிறப்புடையது. ஆலயத்தின் சுவரில் விநாயகர், ஜேஷ்டாதேவி சிற்பங்கள் புதைத்து வைத்து கட்டப்பட்டுள்ளன. தொன்மையான சிறப்பு வாய்ந்த இக்கோயில், காலந்தோறும் பல மாற்றங்கள் அடைந்ததை இவை எடுத்துக்காட்டுகின்றன. தட்சிணாமூர்த்தி இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு மேற்கரங்களில் அட்சமாலை, மலர் தாங்கியும் கீழ்வலக்கரம் சின்முத்திரையுடனும் இடது கரத்தில் ஓலைச்சுவடி தாங்கியும் புன்னகைத் தவழ காட்சி தருகிறார் திருக்கோயிலின் கிழக்கு வாயில் சிதிலமடைந்து மரங்கள் முளைத்துக் காணப்படுகிறது. தெற்குப்பக்கச் சுவரில் ஜேஷ்டை சிற்பமும் விநாயகர் சிற்பமும் புதைத்து கட்டப்பட்டுள்ளன. "சங்கீத விநாயகர்' எனப்படும் இவ் விநாயகர் கீழிரு கரங்களில் இடது கரத்தினை தொடையில் தாளம் போடும் பாவனையிலும் வலது கரத்தில் பழத்தைத் தாங்கியுள்ளவாறும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், "திருவம்பங்காட்டு மகாதேவர்' என அழைக்கப்படுவதைக் கல்வெட்டுகளில் காணலாம்..
இசை ஞானம் பெற இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள சங்கீத விநாயகரை வழிபடுவது சிறப்பாகும். பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. வழக்கு விவகாரங்கள் நீங்கவும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் வாழவும் இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர். இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு