உள்ளாவூர், அகத்தீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அருகில் சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள உள்ளாவூர் எனும் கிராமத்தில் காணப்படுகிறது. இவ்வூர் அகஸ்தீஸ்வரபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது.
இறைவன் : இராமலிங்கேஸ்வரர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
உற்சவர் : சந்திரசேகர், பார்வதி தேவி
தல விருட்சம் : சரக்கொன்றை
தல தீர்த்தம் : தாமரை குளம்
தலச் சிறப்புகள் : ஸ்ரீ அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசன். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆறுமுகர், ஜேஷ்டாதேவி ஆகிய சன்னதிகள் உள்ளன. இங்குள்ள தீர்த்தம் ஸ்ரீ அகஸ்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம். அகத்தீஸ்வரர் இறைவனை நேரில் காண்பதற்காக, இங்கு அமர்ந்த நிலையில் தவம் புரிந்துள்ளார். இவருக்கு, சிவ பெருமான் நேரில் காட்யளித்து, வர அளித்ததாக வரலாறு கூறுகிறது.
கோயில் அமைப்பு : கோயிலுக்கு முன்னால் தாமரை தீர்த்தம் அமைந்துள்ளது. கோயிலின் முகப்பில், சித்தி விநாயகர் வீற்றிருக்கிறார். மூலவர் விமானத்தில் பின்னால், சண்டிகேஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதியின் இருபுறமும், துவரா பாலகர்கள், வலதுபுறத்தில் முருகபெருமான் 12 கைககளுடன் காட்சியளிக்கிறார், இடது புறத்தில் அம்மன் சன்னதி அமைந்துள்ளது. மூலவருக்கு நேர் எதிரில் நந்தி பெருமான் காட்சியளிக்கிறார். நந்தியின் வலது புறத்தில், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1300 ஆண்டுகள் பழமையான இந்த சிவாலயம். 800 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. போரில், பல்லவர்களை வென்ற பாண்டியர்கள், தங்களது வெற்றியை குறிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோயில்களை புதுப்பித்து, தங்களது ஆட்சியை பறை சாட்டும் வகையில் அதில், மீன் சின்னங்களை பொறித்துள்ளனர். இதேபோல், இந்த கோயிலிலும் இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவன் திருவடி பட்ட பூமி என்பதால், பல்வேறு கால நிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்திலும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், வறட்சி இன்றி நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது. பாண்டியர்கள் பல கோயில்களைக் கட்டுவித்தும், புதுப்பித்தும் உள்ளனர். இக்கோயில் அவர்களால் கட்டப்பட்டதாகும். அவர்களது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் பல இடங்களில் மீன் சிற்பங்கள் காணப்படுகின்றன.
பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். சர்க்கரை நோய்க்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் நோய் குணமாகும். தினசரி ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது.
காலை 8.00 மணி முதல்10.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு