சீட்டஞ்சேரி, காலீசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சீட்டஞ்சேரி என்னுமிடத்தில் உள்ளது. யாதவ குலத்தைச் சேர்ந்த சீட்டண்ணன், குரும்பண்ணன், சாத்தண்ணன் தத்தம் பசுக்கூட்டங்களோடு வாழ்ந்த இடங்கள் முறையே சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி என்றழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
இறைவன் : காலீசுவரர்
இறைவி : சிவகாமசுந்தரி
தல விருட்சம் : முக்களா மரம்
தல தீர்த்தம் : திருக்குளம்
தலச் சிறப்புகள் : இங்கு காலீசுவரர் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். சீட்டணஞ்சேரியில் எழுந்தருளியுள்ள திருக்காலீசுவரரை கண்ணபிரானும் தரிசித்து வழிபட்டுள்ளார். மிகவும் அரிதான மணிபுங்க மரத்தடியில் சுயம்புலிங்கமாய் எழுந்தவரே இந்த காலீசுவரர்.
கோவில் அமைப்பு : ஐந்து நிலையைக் கொண்ட ராஜ கோபுரம், இரண்டு கொடி மரங்கள், அருகில் பச்சைக்கல் நந்தி ஆகியவை காணப்படுகின்றன. மணிபுங்க மரத்தின் அடியில் சுயம்புவாய் இறைவனின் திருமேனி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். மகாமண்டபம், உற்சவ மண்டபம், ஊஞ்சல் மண்டபம், யாகசாலை மண்டபம், அர்த்த மண்டபம், சிறிய தான மண்டபம் ஆகிய மண்டபங்களைக் கொண்டு கோயில் உள்ளது. கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதிகள் உள்ளன. அதிகார நந்தி, அறுபத்துமூவர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. வெளிச்சுற்றில் திருக்குளம் நிறையப் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
காளை ஈசுவரர் என்பதே பிற்காலத்தில் காலீசுவரர் என்றும் மருவியிருக்கலாம். கண்ணன் மட்டுமல்ல, பரத்வாஜ முனிவரோடு, பாண்டவர் ஐவரும் காலீசுவரை வணங்கி வழிபட்டுள்ளனர். கிருஷ்ணபுரம் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு. முக்காளமரம் மூன்று இலைகளோடு செழிப்பாக கம்பீரமாக நிற்கிறது. மிகப்பெரிய பிராகாரம், ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் விண்ணைத் தொட்டிட, ஒரே நேர்கோட்டில் அமைந்த இரண்டு கொடி மரங்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னதிகளுக்கு எதிரே தனித்தனியே கொடி மரங்கள் அமைந்திருப்பது, ஒரு சில திருக்கோயில்களில் மட்டுமே. கொடிமரத்தின் அருகில் பச்சைக்கல் நந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார். எட்டடி உயரம் கொண்ட துவாரபாலகர் இருபுறமும் கம்பீரமாக நிற்க, சன்னதியை நோக்கி உள் சுற்றில் விரைகிறோம். காசிவிசுவநாதரைப் போன்ற சிறிய சிவலிங்கத் திருமேனியராய் திருக்காலீசுவரர் கருவறையில் எழுந்தருளியுள்ளார்.
தல வரலாறு: யாதவ குலத்தைச் சேர்ந்த மூவர், சீட்டண்ணன், குரும்பண்ணன், சாத்தண்ணன் ஆகியோர், தங்கள் பசுக்கூட்டங்களோடு இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். அந்த இடங்களே சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தண்ணஞ்சேரி என்று வழங்கலாயின. மணிபுங்க மரத்தினடியில் பசுக்கூட்டம் ஒன்று, சிவலிங்கத் திருமேனிமீது பாலைப் பொழிந்து வருவதை மிளகு, கிராம்பு சுமையுடன் இவ்வழியே வந்த வியாபாரி ஒருவர் கண்டு அதிசயித்தாராம். அவர் கனவிலும் ஈசன் தோன்றி ஆலயம் அமைக்கப் பணித்தாராம்.
பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி, சித்திரை திருவிழா உள்ளிட்ட விழாக்கள் இங்கு பெரு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. குடும்பம் செழிக்கவும், மன அமைதி பெறவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு