காரைக்காடு, கவுதமேஸ்வர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் ஆற்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : கவுதமேஸ்வரர்
இறைவி : கிருபாம்பிகை
தல சிறப்புகள் : காரைக்காட்டில் கவுதமேஸ்வரர் ஏகாந்தமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். கவுதமரிஷி வழிபட்ட ஈசன் இவர். பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலம் காரை மரங்கள் நிறைந்திருந்ததால், “காரைமரைக்காடு” என்றழைக்கப்பட்டது. தற்போது இப்பெயரே “காரை” என்று சுருங்கிவிட்டது. ஒரே சமயத்தில் சிவன், அம்பிகை இருவரையும் தரிசிக்கும் வகையில் இருக்கிறது. கோயில் முகப்பில் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் உள்ளார்.
கோவில் அமைப்பு : தன் மனைவி மீது ஆசை கொண்ட இந்திரனை கவுதம முனிவர் சபித்து விட்டார். இச்சம்பவம் அவரது மனதை மிகவும் பாதித்தது. மன அமைதிக்காக லிங்க வழிபாடு செய்தார். அபிஷேகம் செய்வதற்காக கங்கையை இவ்விடத்தில் பொங்கச்செய்தார். கவுதமரின் வேண்டுதலுக்காக வந்த இந்நதி, “கவுதமி” எனப் பெயர் பெற்றது. காலப்போக்கில், பாலாற்றில் இந்த நதி ஐக்கியமாகி விட்டது. கவுதமர் பூஜித்த சிவன் இங்கு “கவுதமேஸ்வரர்” என்ற பெயரில் அருளுகிறார். அம்பாள் கிருபாம்பிகை சிவன் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் காட்சி தருகிறாள். சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் உக்கிர மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரைக் குளிர்விப்பதற்காக அருகில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். பைரவருக்கும் சன்னதி இருக்கிறது. உற்சவர் அம்பிகையுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். பிரதோஷ வேளையில் இவரை தரிசிப்பது விசேஷ பலன் தரும். இது சிறிய கோயில் கோபுரம், கொடிமரம் கிடையாது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் இருக்கிறார். சுவாமி விமானத்தில் தெட்சிணாமூர்த்தி, கிருஷ்ணரின் சுதை சிற்பங்கள் மட்டும் உள்ளன.
தல வரலாறு: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. ஆதியில் அன்னை பார்வதிதேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணம் முடிக்க காஞ்சிபுரத்தில் எழுந்தருளினார். இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் தேடினர். அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன. பக்தர்கள் சிவராத்திரியன்று இத்தலத்தையும், மேலும் இப்பகுதியிலுள்ள மேல் விஷாரம், வேப்பூர், புதுப்பாடி, குடிமல்லூர், வன்னிவேடு, அவரக்கரை ஆகிய தலங்களையும் தரிசிப்பர். இதற்காக இக்கோயில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் சரபேஸ்வரர், விநாயகருக்கு விசேஷ அபிஷேக பூஜை நடக்கும். சிவன் கவுதம மகரிஷிக்கு ஒரு பவுர்ணமி நாளில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில் பவுர்ணமியன்று மாலையில் சிவனுக்கு ஏழு வகையான அபிஷேகமும், கவுதமருக்கு பாலபிஷேகமும் செய்கிறார்கள். கவுதமேஸ்வரர் இங்கு தீராத நோய்களை தீர்த்து வைப்பவராக அருளுகிறார். எனவே இவரை பக்தர்கள், “வைத்தியர்” என்று அழைக்கிறார்கள். தீராத நோய் உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம், வில்வ இலை மாலை அணிவித்து சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் சேர்ந்த கலவையை படைத்து வழிபடுகின்றனர். இந்த மருந்தையே பிரசாதமாக பெற்று சாப்பிடுகிறார்கள். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு