புங்கனூர், ஆத்மலிங்கேசுவரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு வட்டம் திமிரி அருகே உள்ள புங்கனூரில் அமைந்துள்ளது.
இறைவன் : ஆத்மலிங்கேசுவரர்
இறைவி : உமாமகேசுவரி
தல விருட்சம் : அவிஞ்சமரம், எட்டிமரம், வில்வ மரம்
தல தீர்த்தம் : தாமரை தீர்த்தம்
தல சிறப்புகள் : இங்குள்ள லிங்கத்தை குபேரன் பூஜித்தார் என்பதும் இதை காஞ்சி மகா பெரியவாள் ஆன்மீக பயணத்தின்போது இக் கோவிலைக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரிஷபம் கற்சிற்பம் வைப்பதறக்கு பீடமாக பயன்படுகிறது. அவிஞ்சமரம், எட்டிமரம், வில்வ மரம் ஒன்றாக இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
தல வரலாறு : பாண்டிய நாட்டு அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரை வாங்குவதற்குச் சென்றார். அப்போது குருந்த மரத்தடியில் இருந்த சிவன் அவரை ஆட்கொண்டார். தன்னிடமிருந்த பொருள்களைக் கொடுத்து ஆத்மநாதருககு திருப்பெருந்துறையில் கோயில் கட்டி வழிபட்டார். அப்பெயரே இத்தலத்து இறைவனுக்கும் உள்ளதால் இக்கோயிலில் உள்ள இறைவனை வழிபட்டால் திருப்பெருந்துறை சென்ற பலன் கிடைக்கும் என்று நம்புகின்றனர். நிருபதுங்க பல்லவனால் 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கலை நயம் மிக்க பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் உமாமகேஸ்வரியுடன் ஸ்ரீ மகாதேவர், ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். பலகை கல்லில் பல்லவ மன்னன் நிருபதுங்க மன்னன் 17வது ஆட்சியாண்டு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் புன்கனூர் என்று ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு : கோவிலின் அதிஷ்டானம் சுவர் ஆகியவை கருங்கல்லாலும் விமான சிகரம் வேசர விமானம் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. வடக்குபுற குமுத படையில் முதல் ராஜராஜ சோழனின் 5வது ஆட்சியாண்டில் 989-90 கல்வெட்டு குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் படூர் கோட்டத்து பெருந்திமிரி நாட்டு புங்கனூர் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் இறைவன் பெயர் புங்கனூர் மகாதேவன் என குறிப்பிடப்படுகிறது. மகாதேவருக்கு அணையாத விளக்கு எரிக்கவும் 3 சாந்தி காலங்களில் பெருந்திரு அமிர்ந்து நைவேத்தியம் படைக்கவும் நிலம் வாங்க வேண்டும் என்று ராஜராஜ சோழன் இலாடா ராயர் வீரர் சோழனுக்கு திருமுகம் அனுப்பியுள்ளான். அதன்படி இலாடா ராயர் வீரச்சோழர் இலாடா பெருந்தேவியார் படூர் கோட்டத்திற்கு நிலத்தை விலைக்கு வாங்கி கோவிலுக்கு தானமாக கொடுத்தார். தான் இங்கு தோன்றி சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாகவும், தான் இந்த நாட்டின் முதன் முதலில் காளையார் கோவிலில் கால் பதித்ததாகவும் பின்னர் இத்திருகோவிலில் கால் பதித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை இங்கு குபேரன் வந்து பூஜை செய்ததாக கூறினார். இந்த இடத்தில் கோவில் எழுப்பினால் நிறைந்த செல்வமும் எல்லா வளங்களும் கிடைக்கும் என்று கூறினார். பின்னர் இத்திருக்கோவில் நிருபதுங்க பல்லவனால் கட்டப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டது. பின்னர் ராஜராஜசோழன் மற்றும் குலோத்துங்க சோழனால் பராமரிக்கப்பட்தற்கான சான்று கல்வெட்டுக்களில் உள்ளது.
பின்னர் இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்தது. பின் அந்த ஊரின் சுபிஷமும் பாழடைந்து போனது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது கோவில் இருந்த பகுதியில் தினமும் ஒரு நாகம் தோன்றி படமெடுத்து யாருக்கும் தீங்கிழைக்காமல் ஆடியது. இதனை கண்ட மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த வேலையில் தெய்வமானிட ரூபத்தில் அவ்வழியாக பாதயாத்திரை வந்த மகா பெரியவர் இத்திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அனைவரையும் அழைத்து சென்று பூஜித்து இகோயிலின் பெருமையை கூறினார்
மேலும் பல லிங்கங்கள் கோவிலை சுற்றியுள்ளதாக தெரிவித்தார்.
தல மரங்களை தொடர்ந்து 24 வாரங்கள் தொடர்ந்து பூஜை செய்து வந்தால் செல்வம், கல்வி, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பதும் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம், நீண்ட ஆயுள் பெறலாம் என்பது வருபவர்களின் தீராத நம்பிக்கை. இந்த மரங்கள் சிவசக்தி ஸ்ரூபமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குள்ள சிவபெருமானிடம் பக்தர்கள் தங்கள் குறைகளை காலையில் சொன்னால் பின்னால் இருக்கும் பார்வதி தேவி இரவில் அக்குறைகளை எடுத்துக்கூறுவார். உடனே சிவபெருமான் பக்தர்களின் குறைகளை தீர்ப்பார் என்பது இத்தலத்தின் ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை