புதுப்பாடி, பரத்வாஜீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில், ஆற்காட்டில் இருந்து கிழக்கு புறத்தில் 6 கி.மீ. தொலைவில் ஆற்காடு செய்யாறு சாலையில் உள்ளது.
இறைவன் : பரத்வாஜீஸ்வரர்
இறைவி : தர்மசம்வர்த்தினி
தல சிறப்புகள் : பாலாற்றின் தென்கரையில் உள்ள இந்த கிராமம் பழங்காலத்தில் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. எனவே சுதவனம் என்று அழைக்கப்பட்டதாக தெரிகிறது. பரத்வாஜ முனிவரால் பூஜிக்கப்பட்டதால், இங்குள்ள இறைவர் பரத்வாஜீஸ்வரர் என்றும் கோவிலில் பரத்வாஜ முனிவர் பிம்பம் உள்ளது.
தல வரலாறு: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. ஆதியில் அன்னை பார்வதிதேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணம் முடிக்க காஞ்சிபுரத்தில் எழுந்தருளினார். இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் தேடினர். அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன. ஆற்காட்டில் இருந்து கார், ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனத்தில் சென்று கோயில்களை தரிசிக்கலாம். பேருந்து வசதிகள் எல்லா கோயில்களுக்கும் இல்லை.
பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி, ஆவணி வளர்பிறை பஞ்சமி உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. மகாளய பட்சம் மற்றும் அமாவாசை போன்ற நாள்களில் இறைவனுக்கு சிறப்பு பூசை நடைபெறுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை