கோலியனூர், வாலீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி விழுப்புரம் சாலையில் 7.5 கி.மீ தொலைவில் உள்ளது. புதுச்சேரி மார்கத்தில் செல்லும் அணைத்து பேருந்துகளும் கோலியனூரில் நின்று செல்லும். கோலியனூரை அடைந்து தேரடி சாலை உள்ளே சிறிது தூரத்தில் கோவிலை சென்றடையலாம்.
இறைவன் : வாலீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தலச் சிறப்புகள் : மூலவர் மேற்கு நோக்கியவாறு சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோவில்களில் தட்சிணாமூர்த்தி சனகர், சானதனர் உள்ளிட்டோருடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி சப்தகன்னியருடன் காட்சியளிக்கிறார். தனி சன்னதியில் சனி பகவான் வீற்றுள்ளார். மேற்கு நோக்கியவாறு உள்ள இந்த சிவாலயத்தில் பெரிய நாயகி அம்பாளுடன் சிவபெருமான் மூலவராகக் காட்சியளிக்கிறார். வாலி தன் தம்பியின் மனைவியை அபகரித்த தோஷம் நீங்க இத்தலத்தில் வழிபட்டதால் மூலவருக்கு வாலீஸ்வரர் என பெயர்சூட்டப்பட்டுள்ளது. பிரகாரத்தில் முருகன், விநாயகர், சனீஸ்வரர், லட்சுமி நாராயணர் ஆகியோரும் இருக்கின்றனர். வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.
தல வரலாறு : மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களை துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். சப்தகன்னியர்களும் மகிஷாசுரன் வதம் செய்தனர். ஆனால், அவர்களுக்குத் தோஷம் உண்டானது. இந்த தோஷம் நீங்க கையிலாயத்தில் இருந்து சிவனிடம் முறையிட்டனர். வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் பூலோகத்தில் உள்ள இத்தலத்தில் தன்னை வழிபட்டால் பிடித்த தோஷம் நீங்கும் என அறிவுறுத்தினார். அதனை ஏற்ற சப்தகன்னியர்கள் இங்கு வேண்டி தன் சாபத்தை நீக்கிக் கொண்டனர். மேலும், அவர்களது பாதுகாப்பிற்காக, தனது அம்சமான வீரபத்திரரையும் அனுப்பி வைத்தார். சிவன் அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, "கன்னியர் குரு' என்று அழைக்கிறார்கள்.
வாலி மிகச் சிறந்த சிவ பக்தன். ஒரு சமயம் வாலி சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான். இதைக் கேள்விப்பட்ட இராவணன் தன்னை விட சிறந்த சிவ பக்தனான வாலி மீது பொறாமை கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க எண்ணி பின்புறமாக மறைந்து வந்து தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க முயற்சித்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் ராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்து விட்டார். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர்.
பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராஹ்மிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவளை வழிபடுகிறார்கள். மகேஸ்வரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள்.
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக சனிக்கிழமைகளில் வைஷ்ணவியையும், தீராத நோய்கள் விரைவில் குணமாக புதன்கிழமையில் வாராஹியையும், தோஷ நிவர்த்தி பெற வியாழக்கிழமைகளில் இந்திராணியையும், திருமணத்தடை நீங்க வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டியையும் வழிபடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு கன்னியரையும் வணங்கும் போது அவர்களுடன், தட்சிணாமூர்த்திக்கும் நைவேத்யம் படைக்கிறார்கள். இதனால், தங்களின் குருவின் கட்டளைப்படி பக்தர்களுக்கு சப்தகன்னியர் அருளுவதாகச் சொல்கிறார்கள். பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
தலைவிதியே சரியில்லை என வருத்தத்துடன் வாழ்நாட்களை கழித்துக் கொண்டிருப்பவர்கள் இத்தலத்தில் உள்ள வாலீஸ்வரரை வழிபட்டு அர்ச்சனையும், அபிஷேகம் செய்தால் தலைவிதி மாறி விருப்பமான வாழ்க்கை கிடைக்கம் என்பது தொன்நம்பிக்கை. அடுமட்டுமின்றி, செவ்வாய் தோஷம் நீங்க, இல்லறத்தில் ஐஸ்வர்யம் பெருக, தீராத நோய்கள் விட்டு விலக இத்தலத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகிறது. நேர்த்திக்கடன் வேண்டியவை நிறைவேறியதும், மூலவருக்கும், தட்சிணாமூர்த்தி மற்றும் பெரியநாயகி அம்மையாருக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்து, அன்னமிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். சிவராத்திரி, பஞ்சமி நாட்கள் உள்ளிட்ட தினங்களில் வீரபத்திரருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். மேலும், பங்குனி உத்திரத்தன்று பல்வேறு சிறப்பு வழிபாடு மற்றும் நிகழ்ச்சிகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு