பொன்னூர், திருக்காமீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வந்தவாசியிலிருந்து கீழ்புத்தூர், வங்காரம் ஆகிய இடங்களிலிருந்தும் பேருந்துகளில் பயணித்து பொன்னூரை அடையலாம். நேரடிப் பேருந்துகளும் உள்ளன. தற்போது இக்கோயிலுக்குச் செல்பவர்களுக்கு உணவு வசதி, தங்கும் வசதி அனைத்தும் வந்தவாசியில் உள்ளது.
இறைவன் : திருக்காமீஸ்வரர்
இறைவி : சாந்த நாயகி
தல விருட்சம் : சரக்கொன்றை
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல சிறப்புகள் : ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார். அவரது தோஷம் நீங்க அருளிய சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. பிரம்மனுக்கு பொன்னன் என்ற திருநாமமும் உண்டு. பொன்னன் எனக் கூறப்படும் பிரம்மன் வழிபட்டதன் காரணத்தால் இத்தலம் பொன்னன் ஊர் என்றிருந்து, மருவி பொன்னூரானது. பிரம்மன் வழிபட்ட காரணத்தினால் இத்தல இறைவனுக்கு பிரம்மேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
தல வரலாறு : இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி சுந்தரமூர்த்தி சுவாமிகளால் வைப்புத்தலமாக போற்றப்பட்ட சிறப்புடையது. சுந்தரரும் பொன்னார் நாட்டுப் பொன்னார் என இப்பகுதியைப் போற்றுகின்றனர். பராசர முனிவர் இங்கு தவமிருந்து இத்தல பெருமானை பூஜித்து, பேறு பெற்றுள்ளார். தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது இந்தப் பொன்னூர். ஐந்து தனித்தனி உலோகங்கள் பொன்னன் என்கிற பெயர் பிரம்மனுக்கும் உண்டு. நவகிரகங்களில் ஒன்றான குருவுக்கும் உண்டு. மேலும் இந்தத் தலத்து சிவபெருமானே பொன் போன்ற பொலிவோடு இருக்கிறார். இந்தக் காரணங்களால் "பொன்னூர்' ஆனது.
இந்த ஆலயத்தில் உள்ள விக்ரஹங்கள், தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஐம்பொன் சிலைகளில் சேர்க்கப்படும் உலோகங்களைத் தனியே பிரித்து, ஒவ்வொரு உலோகத்துக்கு ஒரு விக்ரஹமாய் வார்த்துள்ளமை ஓர் அதிசயமாகும். அந்த ஐம்பொன்களின் பெயர்களைக் கொண்டு இத்தலத்தைச் சுற்றியுள்ள சில ஊர்களின் பெயர்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. பொன்னூர், கீழ் வெள்ளியூர், பாதிரி, செம்பூர், இரும்பேடு என்கிற ஐம்பொன் உலோகப் பெயர் கொண்ட ஊர்கள், பொன்னூரின் 20 கி.மீ. சுற்றளவில் உள்ளன. மேலும், பொன்னை உருக்கிட பயன்படும் "வங்காரம்' என்ற பெயரிலும் பொன்னூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் ஒரு ஊர் உள்ளது. பொன்னூரைச் சுற்றிலும் ஏரி, காடு, மலை என இயற்கை கைகோத்து எழிலூட்டுகிறது. ஊரின் வடகிழக்கு திசையில் ஒரே வளாகத்தில் சிவன் கோயிலிலேயே, பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. இது சைவ- வைணவ ஒற்றுமையை மேலோங்கச் செய்கின்றது.
பல்லவர்கள் ஆட்சிக் காலத்திலேயே இவ்வாலய வளாகத்துள் உள்ள பெருமாள் சந்நிதியும் கட்டப் பெற்றுள்ளது. இச்செய்தியினை பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டின் மூலம் அறியப் பெறலாம். "மீண்டும் வென்று மண்கொண்ட சம்புவராயரின்' 14வது ஆட்சிக் காலத்தில், அதாவது கி.பி. 1336ல் விஷ்ணு சந்நிதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது ""ஸ்ரீ விண்ணகர்'' என்று அழைக்கப் பெற்ற இப்பெருமாள் ஆலயம், தற்போது "அழகப் பெருமாள் கோயில்' என்றழைக்கப் பெறுகிறது. சிவாலயத்தின் வடபுறம் ஏழு அடி உயர மகாவிஷ்ணு சிலை ஒன்று உள்ளது. இச்சிலையே பழைய பெருமாள் சிலையாகும். மேற்கு நோக்கியிருக்கும் இத்திருமால் ஆலயம், ஒரு சுற்று கொண்டுள்ளது. மூலவர் சிலை அத்தி மரத்தால் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு தைல சேவை மட்டுமே அபிஷேகம் கிடையாது அரசர் காலத்தில் ""ஸ்ரீ கரண விண்ணகர எம்பெருமான்'' என்று அழைக்கப்பட்ட இப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராகக் காட்சி தருகின்றார். இவரின் கீழே சௌந்தர்ய வரதராஜப் பெருமாளின் கற்சிலை சிறிய அளவில் உள்ளது. இப்பெருமானுக்கு அபிஷேகம் உண்டு. பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், ராஷ்டிரகூடர், விஜயநகர மன்னர்கள், சம்புவராயர்கள் ஆகியோர்களின் காலத்துக் கல்வெட்டுகள் சிவாலயத்திலும், பெருமாள் ஆலயத்திலும் பற்பல இடங்களில் காணப்படுகின்றன. அவற்றில் இவ்வாலயத்திற்கு வழங்கிய கொடை மற்றும் மானியங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.
கோவில் அமைப்பு : சிவன் சன்னதியும் அம்பிகை சன்னதியும் ஒரே சபா மண்டபத்தைக் கொண்டு அமைந்துள்ளதால் ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம். இறைவன் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னதி தென்முகமாகவும் உள்ளது. கோயில் வளாகத்தில் வடக்கே சுமார் 7 அடி உயர மகாவிஷ்ணு சிலை ஒன்றுள்ளது. இதுவே பெருமாள் கோயிலின் பழைய மூலவராகும். இவரது சிலை அத்தி மரத்தினால் மிகவும் கலை நயத்துடன் செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்றதாகும். பெருமாளின் திருநாமம், அழகர் பெருமாள். ஸ்ரீகரண விண்ணகரப் பெருமாள் எனவும் போற்றப்படும் இவர், ஸ்ரீ தேவி பூமிதேவியுடன் காட்சி தருகின்றார். இச்சிவாலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்று, சோழர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சம்புவராய மன்னர்கள் கோயிலைச் சீரமைத்துள்ளனர். விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் சபா மண்டபம் கட்டப்பட்டு கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரே வளாகத்துள் மேற்கு நோக்கியவாறு பெருமாள் சன்னதியும், கிழக்கு நோக்கியவாறு சிவன் சன்னதியும் அமைந்திருப்பது சிறப்பு. ஒரு திருச்சுற்றுடைய இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. ஈசன் சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அந்தராளம், மூலஸ்தானம் ஆகிய அமைப்போடு அமைந்துள்ளது.
பிரம்மேஸ்வரர் கிழக்கு முகம் பார்த்தபடி தேஜோமயமாக அருட்காட்சி அளிக்கின்றார். ஐம்பொன்னில் சேர்க்கப்படும் பொன்னாலான சிலைக்குப் பதில், சிவலிங்கமே "பொன்னார் மேனியனாக' இவ்வாலயத்தில் வீற்றிருக்கிறார். கற்பூர ஒளி லிங்கத்தின் மீது பட்டு எதிரொளிக்கின்றது. சாந்தநாயகி, சாந்தமே உருவாய் அருளை வாரி வழங்குகின்றாள். இத்தல தீர்த்தமாக ஆலய தென்கிழக்கு மூலையில் 80 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்ட திருக்குளம் அமைந்துள்ளது. பிரம்மா ஏற்படுத்தியதால் இது "பிரம்ம தீர்த்தம்' என்று போற்றப்படுகிறது. தற்போது இத்தீர்த்தக் குளம் பழுதடைந்து, படிகள் சரிந்து, பயனின்றிக் கிடக்கின்றன. இவ்வாலய கோஷ்ட தெய்வங்கள் யாவும் சுற்று முறையில் இன்றி, வரிசை முறையில் மகா மண்டபத்தில் காணப்படுகின்றன.
நெடுநாளைய பாவங்கள் தீர்ந்திட சரக்கொன்றை மலரால் திருக்காமீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, பலனடையலாம். பராசர கோத்திரமுடையவர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது. ஒரு கால பூஜை மட்டும் நடக்கும் இவ்வாலயத்தில் பிரதோஷத்தைத் தவிர வேறெந்த விசேஷமும் நடைபெறுவதில்லை.
தினமும் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மேல் மருவத்தூர், திண்டிவனம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை