மடவார் வளாகம், வைத்தியநாதசுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : வைத்தியநாத சுவாமி
இறைவி : சிவகாமி அம்பாள்
தலச் சிறப்புகள் : திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலமாக விளங்குகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 24 திருவிளையாடல்கள் இக்கோயிலில் நடத்தப்பட்டுள்ளது. இக்கோயிலின் வைத்தியநாதர் நோய் தீர்க்கும் பெருமான் என்பதால் இங்கு மகா அஷ்டமியன்று பக்தர்கள் சாப்பிட்ட இலைமீது அங்கப் பிரதட்சினம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆடல் பாடல்களில் சிறந்த இரு பெண்கள் இத்தலத்தில் தங்களது ஆடல், பாடல் மூலம் இறைவனுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தனர். அவர்களுக்குப் பொருளும் இருக்க வீடும் கிடைக்கச் செய்து அருளிய திருவிளையாடல் நிகழ்த்திய தலம் இது என்பதால் மடவார்வளாகம் என அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : இத்திருத்தலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்திருக்கோயிலுக்கு மூவேந்தர்களும், திருமலை நாயக்கரும் திருப்பணி செய்துள்ளனர். திருமலை நாயக்கர் காலத்தில் உருவான மூலிகை ஓவியங்கள் இன்றும் அழியாமல் பல கதைகளைச் சொல்லுகின்றன. இத்திருக்கோயிலில் கொடி மரத்தின் முன்னர் இருக்கும் ஆமைக் கல் 7 அடி உயரத்தில் இருப்பது சிறப்பு. மேலும் இத்திருக்கோயிலில் மூலவர் சந்நிதியின் மேற்கூரையில் ‘வாஸ்துபுருஷரும் 27 நட்சத்திரங்களும்’ இருப்பது தனிச்சிறப்பு. அதுபோல இறைவி சிவகாமி அம்மன் சந்நிதிக்கு முன்னே உள்ள மேற்கூரையில் ‘ஸ்ரீ சக்கரமும் 12 ராசிகளும்’ காட்சி தருகின்றன. இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தின் முதல் 3 நாட்களிலும், புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்திலும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழுவதால், சூரியனே வைத்தியநாதரைப் பூஜிப்பதாக ஐதீகம் திருமலை நாயக்கரால் இக்கோவில் திருப்பணி செய்யப் பெற்றது. திருமலை நாயக்கரின் மிகப்பெரிய உருவச்சிலை இக்கோவில் உள்ளது. திருவில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது. மடவார் விளாகத்தில சிவன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் காணப் படுகின்றன.
மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கு குன்ம நோயினால் பெரும் வயிற்று வலி ஏற்பட்டபோது இத்திருக்கோவிலில் தங்கியிருந்து வைத்தியநாத ஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்கு காணிக்கையாக மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் திருமலை நாயக்கர். இன்றும் வைத்தியநாதர் வைகாசி விசாகத்தின் போது நடைபெறும் பல்லக்கு ஊர்வலத்தில் திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.
அந்தக் காலத்தில் மடவார் வளாக கோயில் உச்சிக் கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச் செய்து அந்த ஒலி மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்தபின்தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். இதற்குச் சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் உள்ளதைக் காணலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள இக்கோவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுக்கும் பிடித்தமானது இக்கோவில். இக்கோவில் கோபுரத்தில் சிற்பங்களே இல்லாதது மற்றொரு சிறப்பு.
தல வரலாறு : ஒரு ஏழைத் தம்பதியினர் குழந்தை வேண்டுமென சிவனிடம் வேண்ட அவர்கள் மீது கருணைகொண்ட சிவனின் அருளால் அப்பெண் கருவுற்றாள். மகப்பேறுகாலம் நெருங்கியது. உதவிக்கு வருவதாக இருந்த அவளது தாய் வராததால் அப்பெண் தன் தாயின் இருப்பிடம் நோக்கித் தனியே சென்றாள். சிறிது தொலைவு சென்றதும் அவளுக்கு வலி கண்டது. உதவி செய்ய யாரும் அருகில் இல்லை. தன்னைக் காக்கும்படி அவள் ஈசனை வேண்ட, ஈசன் அவளது தாயின் உருவில் வந்து அவளுக்கு உதவினார். குழந்தையும் சுகமாகப் பிறந்தது. விரலால் பூமியில் கீறி நீரை வரவழைத்து அவளை அருந்தச் செய்து அந்நீரே அவளுக்கு மருந்து என்றும் கூறினார். நீரை அருந்தியவள் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாரும் இருக்கவில்லை. அப்போது அவளது தாய் ஓடோடி வந்து கொண்டிருந்தாள். யாருமே இல்லாத அந்த இடத்தில் தனது பெண் சுகமாக குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கண்டு வியந்தாள். ஈசன் சிவகாமி அம்மையுடன் காளை வாகனத்தில் தோன்றி, அவள் தன்னிடம் கொண்ட பக்தியின் காரணமாகத் தான் வந்து அவளுக்கு உதவியதாகவும், அவளது தாகத்திற்கும் காயத்திற்கும் மருந்தாக அமைந்த அவ்விடத்துத் தீர்த்தம் காயக்குடி ஆறு என அழைக்கப்படும் எனவும், அவ்வாற்றில் முழுகி எழுந்து ஈசனை வழிபடுவோரின் நோய்கள் விலகும் எனவும் கூறி மறைந்தார். அதனால் சுயம்பு மூர்த்தரான வன்னி வனநாதரின் திருநாமம் வைத்தியநாதஸ்வாமி என உருமாறியதாம்.
மதுரை வணிகர்கள் மதுரையிலிருந்து கேரளத்திற்கு இத்தலம் வழியாகச் செல்வர். முத்து, ஆடைகள், ஆபரணங்களை மதுரையிலிருந்து எடுத்துச் சென்று கேரளத்தில் விற்றுவிட்டு, திரும்பும்போது அங்கிருந்து மிளகு, வாசனைப் பொருட்களை வாங்கி வருவர். ஒருமுறை அவ்வாறு வண்டிகளில் மிளகு மூட்டைகளை ஏற்றி வந்தபோது மதுரைக்குள் நுழையும் முன் வரிசெலுத்தாமல் தப்பிப்பதற்காக மூட்டைகளில் இருப்பது உழுந்து என அதிகாரிகளிடம் பொய் சொல்லி ஏமாற்றி நுழைந்தனர். இருப்பிடம் சென்று பார்த்தபோது அத்தனை மூட்டைகளிலும் உண்மையாகவே உழுந்தாகவே இருந்தது. செய்த தவறை உணர்ந்த வணிகர்கள் ம்துரை சொக்கநாதரிடம் சென்று தமது பாவச்செயலுக்கு மன்னிப்பு வேண்ட, அவரோ மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமியிடம் சென்று முறையிடுமாறு கூறினார். அவ்வண்ணமே அவர்களும் வேண்டித் தங்கள் பாவத்திலிருந்து மீண்டனர்.
இத்திருக்கோயிலில் பூஜைகள் செய்து வந்த, ஏழை அர்ச்சகரான நம்பியாருக்கு உதவ எண்ணிய வைத்தியநாதர், அவரின் கனவில் தோன்றி, “தினமும் என் கோயில் வாயிற்படியில் உனக்காக பொற்காசுகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி அனுதினமும் எனக்கு பூஜை செய்” எனக் கூறி அருளினார். மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் இறைவன் சொன்னதுபோல வாயிற்படியில் பொற்காசு இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார் நம்பியார். இதுபோன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் அரங்கேற்றியிருக்கிறார் எம்பெருமான் வைத்தியநாதஸ்வாமி. இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி பரிசு கொடுக்கச் சொல்லியது என வைத்தியநாதஸ்வாமி எப்போதுமே பக்தர்களின் நாயகனாகத் திகழ்கிறார். பண்டைய மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்கு ‘குன்ம நோயினால்’ பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இத்திருக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் திருமலை நாயக்கர். இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் ‘பல்லக்கு ஊர்வலத்தில்' திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்து, வாகன, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்த பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவில்லிபுத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை