திருமூலஸ்தானம், கைலாசநாதர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில் அருகே திருமூலஸ்தானம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : காமாட்சி
தல சிறப்புகள் : சித்திரை முதல் வாரத்தில் மூலவர்மீது சூரிய ஒளி விழுகிறது. சிவலிங்கத்தை அகத்தியர் வழிபடும் சன்னதி இங்கு உள்ளது.
கோவில் அமைப்பு : கி.பி., 710ல் நுசசோழன் என்பவன் இக்கோயிலைக் கட்டினான். முற்கால சோழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. வழுவழுப்பான சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. முற்காலச் சோழர்களின் கட்டடக்கலைச் சான்றாக உள்ள இக்கோயிலில் அழகான சிற்பக்ள் உள்ளன. ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற சுவற்றில் கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் செடிகளும், முட்புதர்களும் காணப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளது. சுவாமி சிலைகளின் பீடங்கள், கல் தூண்கள், கோயில் மரக்கதவுகள், சுவர்கள் உட்பட அனைத்துப் பகுதிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. கொடிமரம், வாகன மண்டபங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே காணப்படுகிறது. கலசங்கள் இல்லாமல் விமானங்களும் மொட்டையாக காணப்படுகிறது. ஊர் பொதுமக்கள் இணைந்து ஒரு கால பூஜை மட்டும் நடத்தி வருகின்றனர்.
பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது. சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம்அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை.
துர்க்கை, இலட்சுமி, சரசுவதி ஆகிய மூவரும் உலக இன்னல்கள் தீர இறைவனை வழிபட்டுள்ளனர். சிவ பார்வதி திருமணத்தைக் காண உலக உயிர்கள் அனைத்தும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தபோது வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயரவே, சிவன் அகத்தியரை அழைத்து நிலையைச் சரிசெய்வதற்காக தென் பகுதிக்குச் செல்லும்படி பணித்தார். அகத்தியர் தான் சென்ற இடங்களில் லிங்கத் திருமேனிகளை அமைத்து வழிபட்டுச் சென்றார். அவ்வாறான லிங்கத்திருமேனிகளில் இக்கோயிலில் உள்ளதும் ஒன்றாகும். பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது.
பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர். சுவாமிக்கும், அம்மனுக்கும் புது அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம், காட்டுமன்னார்கோயில்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு