நல்லாத்தூர், (பொன்னம்பலநாதர்) சொர்ணபுரீஸ்வரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் தவளக்குப்பம், மடுகரை, பாக்கம் கூட்ரோடு வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து மடுகரை வழியாவும், புதுவையில் இருந்து தவளக்குப்பம் வழியாகவும் நல்லாத்தூர் கோயிலை அடையலாம்.
இறைவன் : சொர்ணபுரீஸ்வரர்
இறைவி : திரிபுர சுந்தரி
தல விருட்சம் : வில்வ மரம்
பாடியவர் : திருநாவுக்கரசர்
தல சிறப்புகள் : இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் “சாளரக் கோயில்” என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இறைவனை, “பலகணி” எனப்படும் கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். அம்மனின் பாதத்தின் கீழ் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும்.
கோவில் அமைப்பு : மூலவருக்கு கீழே நவக்கிரக இயந்திரமும், வெளியே நந்தி மண்டபமும் உள்ளது. இராஜகோபுரம் திரிபுரசுந்தரி அம்மன் எதிரில் 3 நிலை, 5 கலசங்களுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள சுந்தர விநாயகர் பெயருக்கேற்றாற்போல் அழகாக விளங்குகிறார். முகத்தில் பருக்கள், வடுக்கள் உள்ளவர்கள், இவருக்கு சந்தனகாப்பு செய்து வழிபடுகிறார்கள். மகாமண்டபத்தில் “கர்ண விதாயினி” என்னும் பெயரில் சரஸ்வதியைப் போல் வீணை வாசிக்கும் தோற்றத்தில் ஒரு சிற்பம் உள்ளது. இவளை வணங்கி, கல்வியில் விருத்தியடையலாம். துவாரபாலகர்களை ஒரு கோயிலிலும் வலம் வர முடியாது. இங்கே வலம் வரலாம். மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, எமனைக் காலால் எட்டி உதைக்கும் காலசம்ஹார மூர்த்தி இங்கு அருள்பாலிக்கிறார். எனவே ஆயுள் விருத்திக்கான யாகங்களும், பூஜைகளும் நடத்தலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் “மகா மிருத்யுஞ்ஜய ஹோமம்” நடக்கிறது. இத்தலம் “வட திருக்கடையூர்” என்றும் அழைக்கப்படுகிறது.
மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு. இந்த மண்டபத்தில் நின்று வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், உருக்மிணி பாமாவுடன் வேணுகோபாலன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், காமதேனு, பைரவர், சனிபகவான், நால்வர் உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், கடலூர் கலெக்டராக இருந்த பகோடா என்பவரது மகள், தனக்குப் பார்வை வேண்டி இத்தல இறைவனை பூஜித்தாள். பலன் கிடைத்ததும் மிகப்பெரிய மணியை கோயிலுக்கு அளித்தாள். இந்த மணியின் ஓசை நீண்ட தூரம் கேட்கும். இத்தலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது.
இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண, உத்ராயண புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து பலனடைகின்றனர். பிதுர் தோஷத்துக்கும் ஏற்ற தலம் இது. சிவத்தலமாக இருந்தாலும் முருகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முருகனுக்கு எதிரில் தான் கொடி மரம் இருக்கிறது. கந்தசஷ்டி தான் பிரம்மோற்ஸவ விழாவாகும்.
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்தில் அம்பாளை வணங்கி தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் நோய்கள் குணமாவதோடு மீண்டும் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை. இத்தலத்திற்கு வந்து மனமுருக வழிபட்டால் ஆயுள்விருத்தி உண்டாவதோடு, பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. திருவாதிரை நட்சத்திரத்தில் மகாமிருத்யுஞ்சய யாகம், மகா சிவராத்திரி, மாத பிரதோஷங்கள், ஐப்பசி அன்னாபிஷேகம், அஷ்டமி பைரவர் வழிபாடு, ஒவ்வொரு தமிழ் மாத முதல்நாள் சூரியன், ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு